Published:Updated:

`அமித் ஷா புகைப்படத்தை முடக்கிய ட்விட்டர்!’ - பதிப்புரிமைக் குழப்பத்தால் சர்ச்சை

அமித் ஷா
அமித் ஷா

இந்தியாவைப் பொறுத்தவரை அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கை வைத்திருக்கும் அரசியல் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக விளங்குபவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புரொஃபைல் படத்தை ட்விட்டர் நிர்வாகம் சில மணி நேரம் முடக்கிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்கள் தொடங்கி உலகத் திரைப் பிரபலங்கள் வரை அனைவரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகள், அதிகாரபூர்வ தகவல்கள் என பதிவேற்றம் செய்ய சமூக வலைதளமான ட்விட்டரைப் பயன்படுத்திவருகின்றனர். இது போன்ற முக்கியப் பிரபலங்களின் ட்விட்டர் பக்கத்தை ஆராய்ந்து, அந்தக் கணக்குக்கு சம்பந்தப்பட்ட நபரின் `அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம்’ என்ற அந்தஸ்தையும் ட்விட்டர் நிறுவனம் புளூ டிக் வழங்குவது வழக்கம்.

இதன் அடிப்படையில், இந்தியாவைப் பொறுத்தவரை அதிக ஃபாலோயர்ஸ்கொண்ட அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கை வைத்திருக்கும் அரசியல் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக விளங்குபவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இவரது ட்விட்டர் கணக்கை 23.6 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இந்தநிலையில் அவரது ட்விட்டர் பக்கத்திலுள்ள புரொஃபைல் படத்தை ட்விட்டர் நிறுவனம் நேற்று திடீரென முடக்கியது.

அமித் ஷா ட்விட்டர் பக்கம்
அமித் ஷா ட்விட்டர் பக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலுள்ள முகப்பு புகைப்படத்தை (Display Picture - DP) ட்விட்டர் நிறுவனம் நேற்று திடீரென முடக்கிவைத்தது. அந்தப் புகைப்படத்துக்கு பதிலாக `Media not Displayed’ எனத் தோன்றியது. யாரோ ஒருவர் அந்த புகைப்படத்துக்க்கு உரிமை கோரியதாகவும், இதனால் ட்விட்டர் நிறுவனம் அவரது படத்தைக் காண்பிக்காமல் சில நிமிடங்கள் முடக்கிவைத்ததாகவும் தகவல் வெளியானது.

`இந்திய கலாசாரத்தில் இருந்து அகற்றவே முடியாதது இந்தி மொழி!’ - உள்துறை அமைச்சர் அமித் ஷா

ட்விட்டர் புகைப்பட பதிப்புரிமை விவகாரம் தொடர்பான அறிக்கைக்கு பதில் கிடைக்காத நிலையில், அந்தப் படம் நீக்கப்பட்டதாக ட்விட்டர் தெரிவித்திருந்தது. இதையடுத்து, உரிய பதில் கிடைத்தவுடன், மீண்டும் அமித் ஷாவின் டிஸ்ப்ளே படத்தை மீள்பதிவேற்றம் செய்தது ட்விட்டர் நிறுவனம்.

அமித் ஷா
அமித் ஷா

இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் அளித்திருக்கும் விளக்கத்தில், கவனக்குறைவான பிழை காரணமாக, உலகளாவிய பதிப்புரிமைக் கொள்கைகளின் கீழ் இந்தக் கணக்கை தற்காலிகமாக முடக்கியதாகவும், பின்னர் அந்த முடிவு உடனடியாக மாற்றப்பட்டு, ட்விட்டர் கணக்கு முழுமையாகச் செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு