Published:Updated:

`அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோறோம்!'- ட்விட்டர் பயிற்சிக்கு ரெடியாகும் பா.ஜ.க

``எங்களுடைய நோக்கம் எல்லாமே ஏழை மற்றும் படித்த மாணவ, மாணவிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுதான். அதோடு, இளைஞர்கள் படித்து முடித்தால் உடனே சென்னைக்குத்தான் போக வேண்டும்.''

பா.ஜ.க
பா.ஜ.க

``ட்விட்டரில் டிரெண்டிங் செய்வதற்கும், உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்ல நாங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். விருப்பம் உள்ள தேசபக்தர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்'' என்று அழைப்பு விடுத்துள்ளனர், பா.ஜ.க ஆதரவாளர்கள். இந்தப் பயிற்சி வகுப்பு பா.ஜ.க-வின் தென் சென்னை அலுவலகத்தில் நடைபெறுகிறது எனச் செய்திகள் வரத்தொடங்கியது.

மோடி, அமித்ஷா
மோடி, அமித்ஷா

இதுதொடர்பாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணனிடம் பேசினோம். ``எல்லோரும் பி.ஜே.பி‍‍‍‍‍‍‍‍-யின் பின்புலத்தைக் கொண்டதா என்ற கோணத்தில் கேட்கிறார்கள். அது முற்றிலும் தவறு. நாங்கள் பாண்டிய பூமி என்ற அறக்கட்டளையை ஆரம்பித்திருக்கிறோம். எங்களுடைய நோக்கம் எல்லாமே ஏழை மற்றும் படித்த மாணவ மாணவிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுதான். இளைஞர்கள் படித்து முடித்தால் உடனே சென்னைக்குத்தான் போக வேண்டும். அங்குதான் வேலைகள் குவிந்துகிடக்கின்றன என்ற எண்ணம் அவர்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதைத்தான் மாற்ற நினைக்கிறோம். தென்மாவட்டங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பவர்கள் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று மத்திய அரசு கணக்கெடுப்பில் தெரியவருகிறது. அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகப் பல கல்லூரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்துவந்து பயிற்சி கொடுப்பது, மத்திய, மாநில அரசுகளைத் தொடர்புகொண்டு எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன‌ வேலைகள் காலியாக இருக்கிறது என்று மாணவர்களுக்குத் தெரிவிப்பது மற்றும் இளைஞர்கள் இணையதளத்தைப் பொழுதுபோக்காகக் கருதாமலிருக்க, பயனுள்ள வகையில் ட்விட்டர் பயிற்சி வகுப்பு நடத்த இருக்கிறோம்.

பா.ஜ.க
பா.ஜ.க

அது என்ன ட்விட்டர் பயிற்சி என்ற சந்தேகம் வரலாம். பிரதமர் முதல் முதலமைச்சர்கள் வரை பலரும் ட்விட்டரில்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் தங்களுக்குத் தேவையானவற்றைத் தெரிவித்து காரியங்களைச் சாதித்துக்கொள்ளலாம். அது எப்படிச் செய்யமுடியும் என்பதற்காகத்தான் இந்தப் பயிற்சி வகுப்பு. சென்னைக்கு நிகராக‌த் தென் மாவட்டத்தை உருவாக்க நினைக்கிறோம். கண்டிப்பாக மாற்றிக்காட்டுவோம்" என்றார்.

இதுகுறித்து பி.ஜே.பி‍‍‍-யின் மாநிலப் பொருளாளர் ‍எஸ்.ஆர். சேகரிடம் பேசினோம். ''எங்கள் ஐ.டி விங்க் திறம்பட செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் `பாண்டிய பூமி' என்ற டிரஸ்ட்டை ஆரம்பித்து, சமூக நோக்கத்திற்காகச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

அதில், பல பொறுப்பாளர்கள் இருக்கலாம். அதனால், பி.ஜே.பி அவர்களை இழுக்கிறார்கள், இவர்களை இழுக்கிறார்கள் என்று தலைக்கும் காலுக்கும் முடிச்சுப் போடாதீர்கள்'' என்று சுருக்கமாகக் கூறினார்.