Published:Updated:

மீண்டும் மதுரவாயல் - துறைமுகம் திட்டம்: இரண்டடுக்குப் பறக்கும் சாலை! - சாதக பாதகங்கள் என்னென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
துறைமுகம் டு மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்ட தூண்கள்
துறைமுகம் டு மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்ட தூண்கள்

14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் தொடங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. அதிலும், இரண்டடுக்குப் பாலமாக அமையவிருப்பது கூடுதல் சிறப்பு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கார் உள்ளிட்ட வாகனங்கள், அவற்றின் உதிரி பாகங்கள் என பலதரப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்திருக்கின்றன. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களைச் சுமந்துகொண்டு லாரிகளும், கன்டெயினர் லாரிகளும் சென்னை துறைமுகத்துக்குச் செல்ல வேண்டும். சென்னை மாநகர எல்லைக்குள் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல்தான் அனுமதிக்கப்படும். காலை வேளைகளில் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டுதான் லாரிகள் செல்கின்றன. இதற்குத் தீர்வு காணும் வகையில் 2006-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, துறைமுகத்திலிருந்து மதுரவாயலுக்கு பறக்கும் சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் வகையில், அப்போது 1,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். அதன் பின்னர், துரிதமாக வேலை தொடங்கப்பட்டு, கூவம் ஆற்றோரம் 19 கிலோமீட்டருக்கு தூண்கள் அமைக்கப்பட்டன.

துறைமுகம் டு மதுரவாயல் பறக்கும் சாலை திட்ட தூண்கள்
துறைமுகம் டு மதுரவாயல் பறக்கும் சாலை திட்ட தூண்கள்
விகடன்

ஆனால், 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பறக்கும் சாலைத் திட்டத்தையும் கைவிட்டார். கூவம் ஆற்றின் நீர்ப் பகுதியிலேயே தூண்கள் அமைக்கப்படுவதால், மழைக்காலங்களில் நீர் செல்வதற்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தைச் சொல்லி திட்டத்தைக் கிடப்பில் போட்டார். அதனால், கட்டப்பட்ட தூண்கள் மட்டும் இன்று வரை நின்றுகொண்டிருக்கின்றன. இந்த 14 ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரையில் இது குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது. இப்போது துறைமுகம்-மதுரவாயல் சாலை இரண்டடுக்குப் பாலமாக கட்டப்படும் என நெடுஞ்சாலைத்துறைச் செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஏற்படும் பலன் என்ன, பாதிப்பு எதுவும் ஏற்படுமா போன்ற கேள்விகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். பெயர் வேண்டாம் என்ற கோரிக்கையோடு பேசத் தொடங்கினார். ``சென்னையில் தயாரிக்கப்பட்ட சாதனங்கள் குறித்த நேரத்தில் துறைமுகம் சென்று சேருவதற்காக, தொழில் ஏற்றுமதி மேம்பாட்டுக்காகத்தான் இந்த பறக்கும் சாலைத் திட்டமே கொண்டுவரப்பட்டது. கூவம் ஆற்றின் ஓரங்களில் அமைத்தால் வலுவாக இருக்காது என்ற ஒரு கருத்தும் நிலவியது. என்றாலும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தியாவிலேயே முதன்முறையாக இரண்டடுக்குப் பாலமாக அமையவிருக்கிறது.

இரண்டடுக்குப் பறக்கும் சாலை மாதிரி (வெளிநாடு)
இரண்டடுக்குப் பறக்கும் சாலை மாதிரி (வெளிநாடு)

முதல் அடுக்கில் பேருந்துகள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்கும் வகையில் ஆறு வழிச்சாலையாக அமையவிருக்கிறது. இடையே சில இடங்களில் இறங்கவும், ஏறவும் அணுகு சாலைகளும் அமைக்கப்படும். இரண்டாம் அடுக்கில் துறைமுகத்திலிருந்து மதுரவாயலுக்கு எங்கும் நிற்காமல் செல்லும் வகையில் நான்கு வழிச்சாலை அமையவிருக்கிறது. இதில் லாரிகள் மட்டுமே செல்லும். இதற்கான திட்ட அறிக்கை மூன்று மாதங்களில் தயாராகிவிடும். அதன் பிறகு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் திட்டம் தொடங்கப்படும்” என்றார்.

Vikatan

தி.மு.க அரசின் இந்தப் புதிய திட்டம் குறித்து அதிமுக-வின் கருத்தை அறிய, அந்தக் கட்சியின் கலைப்பிரிவு இணைச் செயலாளர் நாஞ்சில் அன்பழகனிடம் பேசினோம். ``ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் தமிழ்நாட்டுக்கும் 2024-ல் தேர்தல் வரும் என எடப்பாடி பழனிசாமி சொன்னதை, முதல்வர் ஸ்டாலினும் தி.மு.க-வினரும் நம்புகிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில், இருக்கும் வரையில் கொள்ளையடித்துவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். ஏற்கெனவே, தி.மு.க கொடியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் மருந்துவாழ் மலையில் பாறைகளை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மணலை அள்ளி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சிறிது சிறிதாகச் செய்தது போதும், பெரிதாகச் செய்ய வேண்டும் என்பதற்காக, பறக்கும் சாலைத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். சர்க்காரியா கமிஷன் சொன்னதுபோல இதிலும் விஞ்ஞானரீதியிலான ஊழலைச் செய்யவிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

நாஞ்சில் அன்பழகன், அதிமுக
நாஞ்சில் அன்பழகன், அதிமுக

மேலும், கூவம் ஆற்றில் நீர் வழித்தடத்தை அடைக்கும்விதமாக கட்டுமானம் அமைந்ததால்தான் 2011-ல் அம்மா ஆட்சிக்கு வந்த பின்னர் பறக்கும் சாலைத் திட்டத்துக்குத் தடை விதித்தார். இப்போது அதிலே இரண்டடுக்கு பாலம் என்றால் நிலம் தாக்குப்பிடிக்குமா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. நாட்டிலேயே முதன்முறையாக என்று சொல்லி பெயருக்காக மக்களின் உயிரோடு விளையாடாமல், மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்!” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு