Published:Updated:

`உடன்குடி அனல்மின் நிலைய திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்?’ - அமைச்சர் தங்கமணி பதில்

ஆண்டுக்கு 1,000 மெகாவாட் மின் தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலிருந்து 120 மெகாவாட் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு கொடுப்பதை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அமைச்சர் தங்கமணி
அமைச்சர் தங்கமணி

தூத்துக்குடி மாவட்டம் தென்னம்பட்டியில் 40 ஏக்கர் பரப்பளவில், 450 கோடி மதிப்பீட்டில் 400 கிலோவாட் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டத்தை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் கடம்பூர் ராஜு, எம்.எல்.ஏ-க்கள் சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

திறப்பு விழாவில் அமைச்சர்கள்
திறப்பு விழாவில் அமைச்சர்கள்

தொடர்ந்து அக்கோயிலில் 93 அடியில் அமையுள்ள முருகன் சிலை பணிகள் குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, ``தமிழகத்தில் காற்றாலை மூலம் 8,500 மெகாவாட் மின் உற்பத்தியும், சூரியஒளி மூலம் 3,000 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது.

இதில், சூரியஒளி மின் உற்பத்தியை மத்திய அரசின் உதவியுடன், 6,000 மெகாவாட்டாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் தற்போது மின்வெட்டு இல்லாத, மின்மிகை மாநிலமாக உள்ளது. ஆண்டுக்கு 1,000 மெகாவாட் மின் தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலிருந்து 120 மெகாவாட் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு கொடுப்பதை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

துணை மின் நிலையத்தில் ஆய்வு
துணை மின் நிலையத்தில் ஆய்வு

உடன்குடி மின் திட்டம், பல்வேறு சட்டச் சிக்கல்களுக்குப் பிறகு தற்போதுதான் பணிகள் தொடங்கியுள்ளன. வரும் 2023-க்குள் இத்திட்டத்தைச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின் உதிரிபாகங்கள் பற்றாக்குறை என்பது தவறான தகவல்.

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள ஒரு லட்சம் மின்கம்பங்களும் மின் உபகரணங்களும் தயாராக உள்ளன. மின்சாரத் துறையில் புதிதாக கேங்மேன் பணிக்காக 5,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர். ஒரு மாதத்துக்குள் அதற்கான பணிகள் முடிவடையும். இதற்காக ஏற்கெனவே விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. அதன்படி, தகுதியின் அடிப்படையிலும், செயல்முறைத் தேர்வின் மூலமும் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அமைச்சர்கள் ஆய்வு
அமைச்சர்கள் ஆய்வு

கோவை, ஈரோடு பகுதியில் மின்சாரத் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் லயன்மேன், வயர்மேன் பதவிகளுக்கு 1,000 பேர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இளநிலை பொறியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.