Published:Updated:

மும்பை: ஆளுநர் அரசு விமானத்தைப் பயன்படுத்த அனுமதிக்காத மாநில அரசு! - `தவறில்லை’ என்கிறது சிவசேனா

`ஆளுநர் அரசு விமானத்தைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது குறித்து முதல்வரிடம் கேட்டதற்கு நேரடியாக பதில் சொல்ல மறுத்துவிட்டார். சம்பந்தமே இல்லாமல், `சிறிய விமானங்கள் தரையிறங்க சிறிய ஓடுதளங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியம்’ என்று தெரிவித்தார் உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிராவில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஆளுநர் பகத்சிங் தனது சொந்த மாநிலமான உத்தரகாண்ட் செல்ல மாநில அரசு விமானத்தைப் பயன்படுத்த அனுமதி கேட்டு, கடந்த இரண்டாம் தேதியே மாநில அரசிடம் கோரிக்கைவைத்திருந்தார். ஆனால், விமான நிலையம் செல்லும் வரை ஆளுநர் பகத் சிங்கின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவர் அரசு விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

ஆளுநர் பகத் சிங்
ஆளுநர் பகத் சிங்

இதனால் வேறு வழியில்லாமல் பல மணி நேரம் காத்திருந்துவிட்டு வேறு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நாள் மகாராஷ்டிவின் கறுப்பு தினம் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அரசு விமானத்தில் அனுமதிக்காததற்கு சிவசேனா விளக்கம் கொடுத்திருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சி தனது அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் எழுதியிருக்கும் தலையங்கத்தில், `பகத் சிங் தனிப்பட்ட பயணமாக அவரது சொந்த ஊருக்குச் செல்கிறார். எனவேதான் அரசு விமானத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக அவர் பயணம் செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருந்தும், அரசு விமானத்தில் பயணம் செய்வதற்காக செல்ல வேண்டிய அவசியம் என்ன... இந்தப் பிரச்னையை பா.ஜ.க தேவையில்லாமல் பெரிதாக்குகிறது.

ஆளுநர், தான் வகிக்கும் பதவியின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் காக்க வேண்டும். ஆளுநர் பதவி பொம்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது நாட்டுக்கு இழுக்கு. இந்த நிலை இல்லாமலிருந்தால், மகாராஷ்டிரா சட்டமேலவைக்கு 12 நியமன உறுப்பினர்கள் பட்டியலை அனுப்பி ஆறு மாதங்கலாகியும் அதற்கு ஒப்புதல் கொடுக்கப்படாமல் இருந்திருக்காது” என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே தற்போது ராஜ்பவன் ஹெலிகாப்டர் தளத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கிறார். வழக்கமாக உத்தவ் தாக்கரே அருகிலுள்ள மாவட்டத்துக்குச் செல்வதாக இருந்தால் ஹெலிகாப்டரில் செல்வது வழக்கம். ஆளுநர் மாளிகையிலுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இருந்துதான் புறப்பட்டுச் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை அவர் அருகிலுள்ள பால்கர் மாவட்டத்துக்கு செல்ல, ஆளுநர் மாளிகை ஹெலிகாப்டர் தளத்தைப் பயன்படுத்தாமல் மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் மைதானத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆளுநர் மாளிகை ஹெலிகாப்டர் தளத்தைப் பயன்படுத்த பகத் சிங் அனுமதி கொடுக்க மறுக்கலாம் என்ற எண்ணத்தில் உத்தவ் தாக்கரே தனது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்திருப்பதாகக் கருதப்படுகிறது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அதேசமயம் ஆளுநர் அரசு விமானத்தைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது குறித்து முதல்வரிடம் கேட்டதற்கு நேரடியாக பதில் சொல்ல மறுத்துவிட்டார். சம்பந்தமே இல்லாமல், `சிறிய விமானங்கள் தரையிறங்க சிறிய ஓடுதளங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியம்’ என்று தெரிவித்தார். ஆளுநர் பகத் சிங் மாநில அரசின் பல திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்துவருகிறார். இதனால் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் இருந்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு