Published:Updated:

`உத்தவ் தாக்கரே - அம்ருதா ஃபட்னாவிஸ் மோதல்!’ - அரசியலாகும் அரசு வங்கிக் கணக்கு?

மகாராஷ்டிராவில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் துணைத் தலைவராக அம்ருதா ஃபட்னாவிஸ் இருப்பதால் அங்குள்ள அரசுக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அம்ருதா - உத்தவ் தாக்கரே
அம்ருதா - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை, முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதலில் `தாக்கரே என்ற பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் பால் தாக்கரே ஆகிவிடமுடியாது’ எனக் கூறியிருந்தார். இவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா பெண்கள் அமைப்பினர், அம்ருதாவுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அம்ருதா
அம்ருதா

இதையடுத்து மீண்டும், ``மக்களின் தலையில் அடிக்கும் நீங்களா அவர்களை வழிநடத்தப்போகிறீர்கள். இது தலைமை இல்லை.. தாக்குதல். செருப்பால் அடிப்பதும், கற்களால் தாக்குவதுமே உங்களின் பொழுதுபோக்கு. சூரியனிலும் செழித்து வளரும் சக்திகள் நாங்கள்” எனத் தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் அம்ருதா ஃபட்னாவிஸ். இவரின் கருத்துக்குத் தொடர் எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில் இதுபோன்ற கருத்துகளைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆதித்யா தாக்கரே, ``மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும், வலிமையாகவும் நிறைவேற்றி வருகிறோம். விமர்சனங்கள் எப்போதும் தோல்வியிலேயே முடியும். மாநிலத்தைக் காப்பதே நம் வேலை. யாரும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம்” என்று தன் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவசேனா என்னதான் அம்ருதாவைப் பொதுவெளியில் மன்னித்திருந்தாலும் மறைமுகமாக அவரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்ருதா - ஃபட்னாவிஸ்
அம்ருதா - ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் துணைத் தலைவராக உள்ளார் அம்ருதா. ஃபட்னாவிஸ், மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்தபோது தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியிலிருந்த அரசின் கணக்கை தன் மனைவி பணிபுரியும் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றினார். அந்த மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் பேரின் சம்பளக் கணக்குகள், ஆக்சிஸ் வங்கியால் கையாளப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் ரூ.11,000 கோடி அரசு பணத்தை அந்த வங்கி கையாளுகிறது.

முதல்வர் உத்தவ்தான், ஆனால்...? - ஆட்சியையும் கட்சியையும் விட்டுக்கொடுக்காத தாக்கரே குடும்பம்

இந்நிலையில் ஆக்சிஸ் வங்கியில் அரசு வைத்திருக்கும் கணக்கை நிறுத்திவிட்டு அதை மீண்டும் தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கிக்கு மாற்ற ஆலோசனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை அம்மாநிலத்தின் நிதியமைச்சரும் என்.சி.பி-யைச் சேர்ந்த தலைவருமான ஜெயந்த் பாட்டீல் உறுதி செய்துள்ளார். வங்கி மாற்றத்துக்கு வேறு ஒரு காரணமும் கூறப்படுகிறது.

ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி

`ஃபட்னாவிஸ் தன் மனைவிக்காகவே அரசு வங்கிக் கணக்கை ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றினார்' என்ற விவகாரம் தொடர்பாக, நாக்பூரைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் இந்த வருடம் அமலாக்கத்துறையிடம் புகார் மனு அளித்திருந்தார். இது அம்மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருந்த நிலையிலேயே வங்கியை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அம்ருதா ஆக்சிஸ் வங்கியின் துணைத் தலைவராக இருப்பதுவும் பெரும் காரணம் என மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.