Published:Updated:

`போனமுறை இங்கு வந்தேன்... சி.எம் ஆகிவிட்டேன்!'- உத்தவ் தாக்கரே-யின் சத்ரபதி சிவாஜி சென்டிமென்ட்

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

முதல்கட்டமாக, தன்னுடன் பதவியேற்றுக்கொண்ட ஆறு அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீட்டை சுமூகமாக முடித்துள்ளார், உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிரா முதல்வர் அரியணையில், இந்த முறை சிவ `சைனிக்' (சிவசேனா உறுப்பினர்) ஒருவர்தான் அமர்வார் எனச் சொன்னதுபோல பல இடைஞ்சலுக்குப் பிறகு, உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். முதல்வராகப் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துவருகிறார். இதற்கிடையே, நேற்று பல்வேறு முக்கிய சம்பவங்கள் மகாராஷ்டிராவில் நடந்தன. அதில் ஒன்று, மகாராஷ்டிரா அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடு. ஆட்சி அமைக்க நீண்ட இழுபறி ஏற்பட்டாலும், அதன்பிறகு இரண்டே வாரத்தில், முதல்கட்டமாகத் தன்னுடன் பதவியேற்றுக்கொண்ட ஆறு அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீட்டை சுமுகமாக முடித்துள்ளார், உத்தவ் தாக்கரே.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தி, தங்கள் கட்சிக்கென வலுவான துறைகளைப் பெற்றுள்ளார். உள்துறையை தேசியவாத காங்கிரஸ் கட்சி கேட்டுவந்த நிலையில், அவர்களிடம் பேசி அதை தங்கள் கட்சிக்கு பெற்ற உத்தவ், அதற்குப் பதிலாக என்சிபி-க்கு நிதித்துறையையும், காங்கிரஸுக்கு வருவாய்த்துறையையும் கொடுத்துள்ளார். அதன்படி, சிவசேனா கட்சியின் முக்கிய நபரான ஏக்நாத் ஷிண்டேவுக்கு உள்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிவசேனாவைச் சேர்ந்த மற்றொரு அமைச்சர் சுபாஷ் தேசாய்க்கு தொழில்துறை மற்றும் கலாசாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளன.

ராஷ்மி தாக்கரே, சுப்ரியா சுலே, அம்ருதா பட்னாவிஸ்... மகாராஷ்டிர அரசியலை இயக்கும் த்ரீ குயின்ஸ்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஜெயந்த் பாட்டிலுக்கு நிதி மற்றும் திட்டம், வீட்டு வசதி உள்ளிட்டவையும் சகன் புஜ்பாலுக்கு நீர்ப்பாசனம், கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்டவையும் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாலாசாஹிப் தோரட்டிக்கு வருவாய், எரிசக்தி உள்ளிட்ட துறைகளும், நிதின் ராவத்திற்கு, பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இதற்கிடையே, அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீட்டுக்கு முன், தனது ஆஸ்தான வழிபாட்டுத் தலமான கர்லா பகுதியில் உள்ள குல்தேவி கோயிலுக்குச் சென்றார். தனது மனைவி, மகன் ஆதித்யா தாக்கரே உடன் ஹெலிகாப்டரில் சென்று அங்கு வழிபாடு செய்தார் உத்தவ். இதற்கு முன்பு, இந்தக் கோயிலுக்கு பல முறை வந்துசென்றுள்ளார் என்றாலும் முதல்வராக வந்திருப்பது இதுவே முதல்முறை என்பதால், குல்தேவி கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிக அளவில் சிவசேனா தொண்டர்கள் கோயிலில் குழுமியிருந்தனர்.

`சிவசேனா என்றால் `சிவன் படை’ அல்ல. மராட்டிய சிவாஜியின் படை!’- சிவசேனா கடந்துவந்த பாதை

பின்னர், அங்கிருந்து அப்படியே சத்ரபதி சிவாஜியின் பிறந்த இடத்துக்குச் சென்ற தாக்கரே, அங்கும் வழிபாடு நடத்தினார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய உத்தவ், ``சிறுவயது முதல் பல முறை இங்கு வந்திருக்கிறேன். ஆனால், முதல்வர் ஆனபிறகு இதுவே முதல்முறை. உங்களுக்கு நினைவிருக்கும், கடந்த ஆண்டு நவம்பரில் இங்கு வந்து வழிபட்டுவிட்டு, இங்கிருந்த மண்ணை எடுத்துக்கொண்டு அயோத்தி சென்றேன். சிலர் அதை நம்புகிறார்களா இல்லையா என்று தெரியாது.

உத்தவ் தாக்கரே வந்த ஹெலிகாப்டர்
உத்தவ் தாக்கரே வந்த ஹெலிகாப்டர்

ஆனால், கடந்த நவம்பர் முதல் இந்த நவம்பர் வரை முடிவுகள் அனைத்தும் நன்றாகவே வந்திருக்கின்றன. எனக்கு முதல்வர் பொறுப்பு எதிர்பாராத விதமாக வந்துவிட்டது. இதன் பொருள், சத்ரபதி சிவாஜி மற்றும் ஜிஜாவின் (சத்ரபதி சிவாஜியின் ராஜமாதா) ஆசீர்வாதம் என்மீது இருக்கிறது" என்று பேசினார். அதன்பிறகு, அங்கிருந்து குடும்பத்துடன் அயோத்தி சென்றார். இதற்கிடையே, முதல்வர் ஆனபிறகு கோயிலுக்கு ஹெலிகாப்டரில் செல்வதா என உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்துள்ளன.

ஜெயலலிதா 2½ ஆண்டுக்கு... ராமதாஸ் 2½ ஆண்டுக்கு - இன்றைக்கு சிவசேனா கேட்பதை அன்றே கேட்ட ராமதாஸ்!
அடுத்த கட்டுரைக்கு