Published:Updated:

`சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவு... என்.ஆர்.சி -க்கு எதிர்ப்பு!'- என்ன சொல்கிறார் உத்தவ் தாக்கரே?

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

`உள்துறை அமைச்சர் அமித் ஷாவே, இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்குதான் என தெரிவித்துள்ளார். அதுவரையில் இதை நானும் ஆதரிக்கிறேன்' -உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி களேபரங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. இறுதியாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார் உத்தவ். பின்னர் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பில் அவரின் மகன் ஆதித்ய தாக்கரே அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

சி.ஏ.ஏ.
சி.ஏ.ஏ.

உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து வந்தாலும், சிவசேனாவும் பா.ஜ.க-வும் ஒரே கருத்துள்ள கட்சிகள். அதனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகதான் உத்தவ் செயல்படுவார் என்று கூறப்பட்டது. நாடு முழுவதும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்துப் பேசியுள்ளார்.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியருடனான பேட்டியில் இந்தச் சட்டங்கள் குறித்து உத்தவ் தாக்கரே பேசியுள்ளார். அப்போது அவர் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாகவும் என்.ஆர்.சி-க்கு எதிராகவும் பேசியுள்ளார். மேலும், ``நாட்டின் அனைத்து குடிமக்களும், தான் இந்த நாட்டின் குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும். சட்டம் இந்து, முஸ்லிம் என மத பாகுபாடுகளைப் பார்க்கக் கூடாது. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இந்துக்களும் அதே முடிவெடுத்து வீதிக்கு வந்தால், நிலைமை என்ன ஆகும் என நினைத்துப் பாருங்கள்.

உத்தவ் - பவார்
உத்தவ் - பவார்

என்.ஆர்.சி இந்து மக்களின் வேர்களைக் கேள்வி கேட்கிறது. அஸ்ஸாமில் 14 லட்சம் இந்துக்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை. நாட்டில் பெரும்பான்மையாக இருப்பது இந்துக்கள்தான் என்கிறபோது, இந்துக்கள் இதில் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். ஆனால், என்.ஆர்.சி இன்னும் வரவில்லை என்பதால், அதற்கு ஆதரவாகவோ, எதிராகவோ போராடுவதில் அர்த்தமில்லை. சி.ஏ.ஏ என்பது நாட்டில் இருக்கும் ஒருவரின் குடியுரிமையைப் பறிக்காது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவே, இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்குதான் என தெரிவித்துள்ளார். அதுவரையில் இதை நானும் ஆதரிக்கிறேன். இது அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டம்" என்றார்.

தொடர்ந்து பேசிய உத்தவ், ``அண்டை நாடுகளிலிருந்து எத்தனை சிறுபான்மையினர் வருகிறார்கள் என்ற விவரத்தை அரசு ஏன் தரவில்லை? வந்தவர்கள் நாட்டில் எங்கு தங்குகிறார்கள். கிராமப் பகுதியில் தங்கவில்லை. நகர்ப்புறங்களுக்குப் படை எடுக்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் தங்குவதற்கான இடம், வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கான கல்வி என எல்லாம் சிக்கலை ஏற்படுத்துகிறது. அவர்களுக்குப் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடுகள் வழங்கப்படுமா? காஷ்மீரில் தற்போது ஆர்ட்டிக்கள் 370 நீக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுபோன்று அண்டை நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு காஷ்மீரில் அரசு வீடு கட்டிக் கொடுக்குமா?" போன்ற கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ஆதித்ய தாக்கரே - உத்தவ் தாக்கரே
ஆதித்ய தாக்கரே - உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரேவின் சி.ஏ.ஏ ஆதரவு கருத்தை பா.ஜ.க வரவேற்றுள்ளது. மகாராஷ்டிர மாநில பா.ஜ.க செய்தி தொடர்பாளர் மாதவ் பேசுகையில், ``சி.ஏ.ஏ தொடர்பான உத்தவ் தாக்கரேவின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். அவர் சி.ஏ.ஏ தொடர்பாக ஏற்படுத்தப்படும் குழப்பங்களை தெளிவுபடுத்தியுள்ளார். மக்களவையில் சிஏஏ-வுக்கு ஆதரவாக அக்கட்சி வாக்களித்துள்ளது. சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவு என முதல்வர் அறிவிக்க வேண்டும். என்.ஆர்.சி-யைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் அதே நிலைப்பாட்டைதான் உத்தவ் தாக்கரேவும் எடுத்துள்ளார்" என்றார். உத்தவ் தாக்கரேவின் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி குறித்த கருத்துக்கு அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதுவும் வெளிப்படையாக கருத்து சொல்லவில்லை.

`பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனாவா இது?’ - பி.ஜே.பி-யுடன் தொடர் மோதலில் உத்தவ் தாக்கரே!

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே எந்தத் தேர்தலிலும் போட்டியிடாதபோது தற்போது அவரது குடும்பத்திலிருந்து இருவர் முக்கிய பதவியில் இருப்பது தொடர்பான விமர்சனத்துக்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, ``பால் தாக்கரே எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. ஆனால், அதுவும்கூட விமர்சிக்கப்பட்டது. நான் முதல்வராவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆதித்ய தாக்கரே தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். அது அவரது முடிவு. தற்போது சிறப்பாக பணி செய்கிறார். அவர் இந்த வழியில் பணி செய்ய முடிவு செய்யும்போது நான் எப்படி அதற்கு இடையூறாக நிற்க முடியும்?" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு