Published:Updated:

முகக்கவசமே `அரசியல்' ஆயுதம்! - உதயநிதிக்கு கனிமொழி ரியாக்‌ஷன் என்ன?

பன்னீர்செல்வம் - கனிமொழி
பன்னீர்செல்வம் - கனிமொழி

உறவுக்குள் உரசலெல்லாம் சகஜம்தானே... சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னார் கனிமொழி

"முகக்கவசத்தையே ஆயுதமாக்கிவிட்டாரே?" என்ற கேள்வியுடன் ஹேங்அவுட்ஸ் ஸ்கிரீனில் தோன்றினார் கழுகார். ஆர்வத்துடன், "யாரைச் சொல்கிறீர்?" என்றோம். "அந்தக் கதையைப் பிறகு சொல்கிறேன்" என்று கண்டுக் கொள்ளாதவர்போல செய்திகளுக்குள் தாவினார்.

"சாத்தான்குளம் லாக்அப் மரணங்கள் அ.தி.மு.க-வுக்குக் கடும் சரிவை ஏற்படுத்திவிட்டன. எட்டு தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை வலுத்திருப்பதாக முதல்வருக்கு உளவுத்துறை அறிக்கை அளித்திருக்கிறதாம். ஏற்கனவே புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முறைத்துக் கொண்டுவிட்டார். முக்குலத்தோர் சமுதாயத்தில் கணிசமானோர் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கின்றார்கள். இந்தநிலையில் சாத்தான்குளம் விவகாரமும் அரசியல்ரீதியாக அ.தி.மு.க-வை பதம்பார்த்திருப்பதாகக் கூறுகிறதாம் அந்த அறிக்கை...

முகக்கவசமே `அரசியல்' ஆயுதம்! - உதயநிதிக்கு கனிமொழி ரியாக்‌ஷன் என்ன?

கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவரை அழைத்த முதல்வர், தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளின் நிலை குறித்துக் கேட்டிருக்கிறார். 'இந்த வழக்குகளையெல்லாம் வேகப்படுத்துங்கள். சட்டத்துறைக்குக் கடிதம் எழுதி வழக்குகளை விசாரணைக்குக் கொண்டுவாருங்கள்' என்று முதல்வர் சீறினாராம்."

"சரியான போட்டிதான்."

"ஆமாம். தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர்கள் பலர்மீதும் வழக்குகள் நிலுவையிலிருக்கின்றன. தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இந்த வழக்குகளால் ஏடாகூடமாக எதுவும் நடந்துவிடுமோ என்று முன்னாள் மாண்புமிகுக்கள் அச்சத்திலிருக்கிறார்கள்" என்ற கழுகார், இஞ்சித் துண்டுகள் மிதக்கும் தாளித்த மோரை ரசித்துப் பருகியபடி தொடர்ந்தார்.

"கோவைக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது அமைச்சர் வேலுமணியுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முதல்வர் ஆலோசனை செய்துள்ளார். அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டனவாம். சாத்தான்குளம் விவகாரம் சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது முதல்வரை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > மிஸ்டர் கழுகு: சசிகலா விடுதலை ட்வீட்... 'ஸ்மைலி' போட்ட ஓ.பி.எஸ் https://bit.ly/2ZpVSOr

'அ.தி.மு.க ஐ.டி விங்கை நான்கு மண்டலங்களாகப் பிரித்தும் பலன் இல்லை. இதற்கு பதிலடி தந்திருக்க வேண்டாமா?' என்று ஐ.டி விங் நிர்வாகிகளைக் கடிந்தாராம் முதல்வர். அ.தி.மு.க ஆட்சியை உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சிக்கிறார். இவர் பதிவுகளை வைரல் ஆக்குவதற்கென்றே தி.மு.க-வில் ஒரு தனி டீம் இயங்குகிறது. அ.தி.மு.க-வில் அப்படி எதுவுமே செய்யவில்லை என்று கடுப்பில் இருக்கிறாராம் முதல்வர்!"

"உதயநிதி என்றதும்தான் நினைவுக்கு வருகிறது... தி.மு.க-வில் கனிமொழிக்கும் உதயநிதிக்கும் இடையே உரசல் ஏற்பட்டிருக்கிறதாமே?"

"உறவுக்குள் உரசலெல்லாம் சகஜம்தானே... சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னார் கனிமொழி. மறுதினமே உதயநிதியும் நேரில் சென்று அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார். இதில்தான் இருதரப்புக்கும் உரசல் ஏற்பட்டுள்ளதாம். 'மக்கள் பிரதிநிதியாக இல்லாத உதயநிதி பயணிப்பதற்கு இ பாஸ் எப்படிக் கிடைத்தது? கனிமொழிக்கு எதிராகப் போட்டி அரசியல் செய்யவே ஸ்டாலின் குடும்பம் உதயநிதியை வம்படியாக அனுப்பியிருக்கிறது' என கனிமொழியின் ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்!"

ஜெயராஜ் குடும்பத்துக்கு ஆறுதல் கூறும் உதயநிதி...
ஜெயராஜ் குடும்பத்துக்கு ஆறுதல் கூறும் உதயநிதி...

"கனிமொழியின் ரியாக்‌ஷன் என்ன?"

"வழக்கம்போல அவர் எதையும் கண்டுகொள்ளவில்லையாம். சாத்தான்குளம் மரணத்துக்கு நீதி கேட்கும் வாசகத்தை முகக்கவசத்தில் அச்சடித்து, அவற்றை மக்களிடம் விநியோகிக்கச் சொல்லியிருக்கிறாராம். 'தூத்துக்குடி மக்களிடம் இந்த முகக்கவசங்கள் அரசியல்ரீதியாக பெரிய மாற்றத்தை உருவாக்கும்; அக்கா முகக்கவசத்தையே ஆயுதமாக்கிவிட்டார்' என்கிறார்கள் மகளிர் அணியினர்!"

"ஓஹோ... இதைத்தான் ஓப்பனிங் கொடுத்தீரோ?" என்றோம். புன்முறுவல் பூத்த கழுகார் மேலும் பல தகவல்களை அடுக்கினார். அவற்றை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > மிஸ்டர் கழுகு: சசிகலா விடுதலை ட்வீட்... 'ஸ்மைலி' போட்ட ஓ.பி.எஸ் https://bit.ly/2ZpVSOr

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு