Published:Updated:

`பங்கப் பிரி... பங்கப் பிரி’ - கொடிபிடிக்கும் உதயநிதி; கைவிரிக்கும் ஐபேக்!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

வரும் சட்டமன்றத் தேர்தலில் 30 சதவிகிதம் சீட்டுகளை தி.மு.க இளைஞரணிக்குக் கட்சி மேலிடம் ஒதுக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது தி.மு.க-வுக்குள் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்பமனு பெறுவதற்கான பணிகளை, பிப்ரவரி மாதம் இறுதியிலிருந்து வைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடன் சீட் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுபெறவில்லை என்றாலும் சரி, அனைத்துத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறலாம் என்கிற முடிவில் அறிவாலயம் இருக்கிறதாம். இந்தச் சூழலில், தி.மு.க இளைஞரணிக்குக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சீட் ஒதுக்க வேண்டுமென அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போர்க்கொடி உயர்த்தியிருப்பது கட்சிக்குள் பரபரப்பை எகிறவைத்திருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர் தலைவர் ஒருவர், ``இளைஞரணிக்கு ஸ்டாலின் தலைமைப் பொறுப்பு வகித்த சமயத்தில், அணியிலிருந்த பலருக்கும் சீட் வாங்கிக் கொடுத்தார் அவர். அதே ஃபார்முலாவில், இந்த முறை இளைஞரணிக்கு 30 சதவிகிதம் சீட் ஒதுக்க வேண்டுமென தி.மு.க தலைமையிடம் கோரியிருக்கிறார் உதயநிதி. தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம், `சிபாரிசு என்கிற பெயரில் சீட் பெற்றுத் தருவதெல்லாம் எனக்கு ஒத்து வராது. தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் என் அணிக்கு என 30 சதவிகிதம் சீட்டை பிரித்துக் கொடுத்துவிடுங்கள். என் ஆட்களை அதில் வேட்பாளர்களாகப் போட்டுக்கொள்கிறேன்’ என்று உதயநிதி கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்தந்தத் தொகுதிகள்தான் வேண்டுமென்று எந்தப் பட்டியலையும் உதயநிதி கொடுக்கவில்லை. எது கொடுத்தாலும் சரி, ஆனால் சட்டமன்றத்துக்குள் தன் ஆதரவாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் அமர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். இதற்காக, தன் பங்குக்கு 234 தொகுதிகளுக்கும் ஒரு வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்துவைத்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினின் கரூர் விசிட்: விவசாயிகளுடன் செல்ஃபி; ஆட்டுக்குட்டியுடன் போஸ்! #SpotVisit

இதற்கு ஐபேக் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் தனியாகக் கள ஆய்வு செய்து வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் வீதம் வேட்பாளர் லிஸ்ட்டை ஐபேக் தயாரித்திருக்கிறது. இதில் இடம்பெறாத ஆட்களைத்தான் உதயநிதி வேட்பாளராகக் கைகாட்டுகிறார். இதனால், ஐபேக் தரப்பில், `எங்கள் லிஸ்ட்டில் இருப்பவர்களை வேட்பாளராக்கினால் உங்களுக்கு வெற்றி உறுதி. இல்லையென்றால், எங்களை எதுவும் கேட்காதீர்கள்’ என்று சொல்லிவிட்டார்களாம். ஆனால், கட்சித் தலைமையிடம், `யாருக்காகவும் என் முடிவை மாற்றிக்கொள்ள முடியாது. நம் வேட்பாளர்களுக்காக வியூகம் அமைத்து வெற்றி பெற வைக்கத்தான் ஐபேக்கை வரவழைத்தோமே தவிர, அவர்கள் சொல்லும் நபர்களை வேட்பாளராக்கி அழகு பார்ப்பதற்காக அல்ல. எனக்கு ஒதுக்கும் 30 சதவிகிதப் பங்கீட்டில், ஐபேக் பட்டியலையெல்லாம் நான் ஏற்க மாட்டேன். எனக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ, அவர்களைத்தான் வேட்பாளர்கள் ஆக்குவேன்’ என்று உதயநிதி தெளிவாக உணர்த்திவிட்டாராம். இந்தப் புதிய சிக்கலுக்கு எந்த முடிவும் எடுக்க முடியாமல் அறிவாலயம் சற்றுத் திணறித்தான்போயிருக்கிறது” என்றார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதியின் 30 சதவிகித `பங்கப் பிரி’ திட்டத்துக்கு கிச்சன் கேபினெட்டின் ஆசியும் இருப்பதால், இந்தமுறை இளைஞரணியைச் சேர்ந்த பலரும் வேட்பாளர்களாகக் களமிறக்கப்படலாம் என்கிறது அறிவாலய வட்டாரம். சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவ், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் குமாரசாமி, சிவசேனா கட்சியில் உத்தவ் தாக்கரே என ஒவ்வொரு கட்சியிலும் வாரிசுகளின் ஆதிக்கம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மேலோங்கும். அவர்கள், தங்கள் ஆதரவாளர்களை எம்.எல்.ஏ-க்களாகவும், எம்.பி-க்களாகவும் ஆக்கி, தங்களுக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொண்டனர். தி.மு.க-விலும் இது புதிதல்ல என்பதால், உதயநிதி கேட்ட 30 சதவிகித பங்கு அவருக்குக் கிடைக்கலாம் என்பதே அறிவாலய தகவல்.

அடுத்த கட்டுரைக்கு