``எவ்வளவு செலவு பண்ணுவீங்க தம்பி?” - உதயநிதியை கலாய்த்த துரைமுருகன்!

உதயநிதியிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் கலகலப்புக்கு பஞ்சமில்லை என்கிறார்கள் தி.மு.க தலைவர்கள். அப்படி என்ன கேள்வி கேட்கப்பட்டது?
தி.மு.க நேர்காணல் இன்று, மார்ச் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. திருவள்ளூர், சென்னை மாவட்டங்களுக்கான நேர்க்காணலை தி.மு.க தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு நடத்தியது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்திருந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி நேர்காணலில் கலந்து கொண்டார். அவரிடம், தனக்கே உரிய பாணியில் துரைமுருகன் கலாய்க்கவும், அறையில் சிரிப்புச் சத்தம் எதிரொலித்ததாம்.

உதயநிதியிடம் நடைபெற்ற நேர்க்காணல் குறித்து, தி.மு.க தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “உதயநிதி உள்ளே நுழைந்தவுடன், அவர் அமர்வதற்காக இருக்கையை உதவியாளர்கள் தேடினர். அவர்களிடம் கையசைத்து வேண்டாமென்று சைகை காட்டிவிட்டு, ‘இப்பவே இருக்கைக்கு ஆசைப்பட்டா எப்படி? நின்னுகிட்டே பேசட்டும்’ என்று ஸ்டாலின் கச்சேரியை ஆரம்பிக்கவும், குழுவில் இருந்தவர்கள் சத்தமாகச் சிரித்துவிட்டனர். உதயநிதியிடம் அவர் கலந்து கொண்ட கட்சிப் போராட்டங்கள், கைது செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து பொருளாளர் டி.ஆர்.பாலு கேட்டார். அதற்கு, ‘குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம், சூரப்பா விவகாரத்தில் போராட்டம், விவசாய சட்ட எதிர்ப்பு போராட்டம், நீட் தேர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்தியிருக்கிறேன்.
இதுபோக, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். திருக்குவளையில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, போலீசார் தடுத்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதானேன். குடியுரிமை சட்டத் திருத்த நகலை கிழித்த வழக்கில் கைதாகியிருக்கிறேன். சட்டத் திருத்தத்திற்கு எதிராக இளைஞரணி சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தியிருக்கிறோம்’ என்று உதயநிதி பதிலளித்தார். அவர் பேச்சை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்த ஸ்டாலின், ‘என் பையன்னு எல்லாம் பார்த்துகிட்டு இருக்காதீங்க. ஒரு வேட்பாளர்கிட்ட என்ன கேட்போமோ, அதைக் கேளுங்க...’ என்று சிரித்தபடி சொல்லவும், துரைமுருகன் தொண்டையை செருமியபடி பேச ஆரம்பித்தார்.

‘உங்களை வேட்பாளரா நிறுத்துனா, எவ்வளவு செலவு பண்ணுவீங்க தம்பி?’ என்று துரைமுருகன் கிண்டலாகக் கேட்கவும், அறை சிரிப்பொலியால் அதிர்ந்தது. சிரித்தபடி உதயநிதி, ‘சில திரைப்படங்களை சொந்தமாக தயாரித்திருக்கிறேன். நடித்திருக்கிறேன். அதன்மூலமாக ஒரு வருமானம் கிடைத்திருக்கிறது. என்னால் முடிந்தளவுக்கு செலவு செய்ய முடியும்’ என்றார். இதன்பிறகு, ‘சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை ஏன் கேட்கிறீர்கள்?’ என்கிற கேள்வியை டி.ஆர்.பாலு கேட்டார். அதற்கு உதயநிதி, ‘என் தாத்தா மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த தொகுதி சேப்பாக்கம். திருவாரூர் செல்ல வேண்டுமென்பதுதான் என்னுடைய முதல் ஆசை. ஆனால், சிட்டிக்குள்ளேயே இருந்தால்தான் கழகப் பணிகளையும் கவனிக்க முடியும் என்பதால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை கேட்டேன்’ என்று பதிலளித்தார். அதுவரை அமைதியாக இருந்த துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, ‘தம்பி தேறிடாப்ல’ என்று கிண்டலடிக்கவும், மீண்டும் சிரிப்பலை எழுந்தது.
கடைசியாக, ‘உங்களுக்கு சீட் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் கட்சிப் பணியை சரியாகச் செய்வீர்களா?’ என்று ஸ்டாலின் கேட்டார். அதற்கு உதயநிதி, ‘எனக்கு சீட் கிடைக்கணும்னு நான் இங்கே வரலை. தாத்தா, அப்பா, என் கட்சி மூத்தவர்கள் எல்லோரும் இந்த இடத்துல நின்னுதான் நேர்க்காணல் குழுகிட்ட பதில்சொல்லி வேட்பாளராக மக்களிடம் அறிமுகமானாங்க. அந்த ஒரு அனுபவத்துக்காகத்தான் நான் இங்கே வந்தேன். சீட் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கட்சிக்கு விசுவாசமாகப் பணியாற்றுவேன்’ என்றார். படாரென, ‘தம்பி, இந்த ஒரு பதிலுக்கே நான் நூறு மார்க் போட்டுட்டேன் போங்கோ...’ என்று துரைமுருகன் கலகலக்கவும், நேர்க்காணல் அறையில் சிரிப்பு வெடி வெடித்தது” என்றனர்.

நேர்காணலில் உதயநிதி கலந்து கொண்டாலும், அவருக்கு சீட் அளிக்கப்படுவது சந்தேகம்தான் என்கிறது தி.மு.க வட்டாரம். அவரை தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டிருக்கிறாராம் ஸ்டாலின்.