Published:Updated:

``அண்ணன் இருக்கும் போது அழக்கூடாது!" -தஞ்சை நிகழ்ச்சியில் உருகிய உதயநிதி

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

முதன் முதலாக இந்த நிகழ்ச்சியில் தயாளு அம்மையார் பெயரில் `சுயமரியாதை பெண்கள் விருது' என்கிற பெயரில் பல்வேறு துறையில் சாதித்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் விருதை வழங்கியதுடன் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

தி.மு.க சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற பொய் பெட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட வேண்டும் என அ.தி.மு.கவினர் அறிவித்துள்ளனர். அவர் எப்படி இறந்தார் என இன்று வரை கண்டுபிடிக்காதவர்கள் இப்படி அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது எனத் தெரிவித்தார்.

பொய் பெட்டி நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின்
பொய் பெட்டி நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க இளைஞரணி சார்பில் நடத்தப்படும் பொய் பெட்டி நிகழ்ச்சி அதன் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பிரமாண்டமான முறையில் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். கொரோனா பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க, இதில் கலந்துகொண்ட அனைவரின் கைகளிலும் தொடக்கத்திலேயே ஸ்பிரே அடிக்கப்பட்டது.

``என்னை பட்டாசு வெடித்து வரவேற்கக்கூடாது" என உதயநிதி ஸ்டாலின் அன்பு கட்டளையிட்டிருந்தாராம். ஆனால் அதையும் மீறி பட்டாசு வெடித்துத் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். முதன் முதலாக இந்த நிகழ்ச்சியில் தயாளு அம்மையார் பெயரில் `சுயமரியாதை பெண்கள் விருது' என்கிற பெயரில் பல்வேறு துறையில் சாதித்த பத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் விருதை வழங்கியதுடன் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துப் பேசினார்.

தி.மு.க நடத்தும் பொய் பெட்டி நிகழ்ச்சி
தி.மு.க நடத்தும் பொய் பெட்டி நிகழ்ச்சி

அதன் பின்னர் மைக் பிடித்த உதயநிதி, ``நான் தாமதமாக வந்ததற்கு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" எனக் கூறியதுமே, ``தலைவரோட பிள்ளை எவ்வளவு தன்னடக்கத்தோட பேசுறாரு" எனத் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் எழுப்பினர். ``ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட வேண்டும் என அ.தி.மு.கவினர் அறிவித்துள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்றே இன்னும் கண்டுபிடிக்காதவர்கள் இப்படி அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

ஆட்சியாளர்கள் தினம் தினம் ஒரு கமென்ட் அடித்து வருவதால் வாரம் வாரம் பொய் பெட்டி நிகழ்ச்சி நடத்தும் அளவிற்கு கன்டென்ட் நமக்குக் கிடைக்கிறது" என்று பேசியவர், ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஹாக்கி விளையாட்டில் சாதித்து வரும் விஜயலெக்‌ஷ்மி என்ற வீராங்கனைக்கு விருது வழங்கிப் பாராட்டினார். அப்போது விஜயலெக்‌ஷ்மியும் அவரது பெற்றோரும் கண்கள் கலங்கி அழுதனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

``அண்ணன் பக்கத்தில் இருக்கும் போது அழக்கூடாது. என்னை கூடப் பொறக்காத அண்ணனாக நினைச்சுக்கம்மா. எப்ப என்ன உதவி தேவைப்பட்டாலும் உடனே இந்த அண்ணனிடம் கேள் உடனே செய்து தருகிறேன்" என உருக்கமாகக் கூறி அவர்களைத் தேற்றினார் உதயநிதி. கதிராமங்கலத்தில் முற்றிலுமாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என ஹைட்ரோகார்பனுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அப்பகுதியைச் சேர்ந்த 8 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

அப்போது அவர்கள் ``போராடிய 42 பெண்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தினமும் நாங்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறோம்" எனக் கூற தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததுமே உங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றார். அதன் பின்னர் பொய் பெட்டி நிகழ்ச்சி தொடங்கியது. கட்சியினரால் எழுப்பப்பட்டிருந்த பல்வேறு கேள்விகளுக்குத் தனக்கே உரிய பாணியில் திண்டுக்கல் லியோனி பதில் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு