ரசிகர் மன்றத்துக்கு சீட்டா? கடுகடுத்த துரைமுருகன்; அப்செட்டில் உதயநிதி!

வரும் சட்டமன்றத் தேர்தலில் தன் ரசிகர் மன்றத்துக்கு சீட் ஒதுக்க உதயநிதி விருப்பப்படுகிறாராம். அதற்கு தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில், இளைஞரணிக்கு 30 சதவிகித சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என ஏற்கெனவே போர்க்கொடி உயர்த்தியிருந்தார் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அவரை சமாதானப்படுத்திய கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், 20 சீட் வரை இளைஞரணிக்கு ஒதுக்குவதாகச் சொன்னதையும் உதயநிதி ஏற்கவில்லை என்கிறார்கள். தன்னிடம் சமாதானம் பேசிய சீனியர்களிடம், `40 சீட்டுக்குக் குறைவாக இளைஞரணிக்கு வழங்கப்படுவதை ஏற்க முடியாது’ என்று உதயநிதி கூறியதாகத் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்னையே இன்னும் முடிவுறாத சூழலில், தன் ரசிகர் மன்றத்துக்கு மூன்று சீட் வழங்க வேண்டுமென உதயநிதி கண்டிப்புடன் கேட்டதாக, உட்கட்சி விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது கட்சிக்குள் அடுத்த அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
இது குறித்து நம்மிடம் பேசிய கட்சியின் சீனியர்கள் சிலர், ``வரும் சட்டமன்றத் தேர்தலில், தன் `உதயநிதி நற்பணி மன்ற’த்துக்கு இரண்டு பொதுத் தொகுதிகளும், ஒரு தனித் தொகுதியும் தி.மு.க ஒதுக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் கேட்டிருக்கிறார். தான் எதிர்பார்க்கும் தொகுதிப் பட்டியலையும் தயாரித்து தலைமைக்கு வழங்கியிருக்கிறார். சேலம் தெற்கு தொகுதிக்கு மன்றத்தின் மாநிலச் செயலாலர் பி.கே.பாபு, பூந்தமல்லி தனித் தொகுதிக்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரன், பவானி தொகுதிக்கு சுரேஷ், கன்னியாகுமரிக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், திருவாரூர் தொகுதிக்கு எடிசன் என்று பலரும் உதயநிதி அனுப்பியிருக்கும் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் தி.மு.க-வில் விருப்ப மனுவும் தாக்கல் செய்யச் சொல்லியிருக்கிறார் உதயநிதி. இந்தச் சூழலில், மன்றத்துக்கு சீட் ஒதுக்கக் கூடாது என்று கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்.
சமீபத்தில் ஸ்டாலினிடம் பேசிய துரைமுருகன், `இளைஞரணிக்கும் சீட் பங்கீடு, மன்றத்துக்கும் பங்கீடுனு ஒதுக்கினா நல்லா இருக்காது தலைவரே. உதய் தம்பி ஆசைப்படுதுனு கேட்டு, நாமளும் தொகுதியை ஒதுக்கினா, கட்சிக்காரங்க எல்லாம் கொதிச்சுப் போயிடுவாங்க. இளைஞரணிக்கு சீட் ஒதுக்குறதோட நிறுத்திக்குவோம்’ என்று கட்டையைப் போட்டுவிட்டார். இதில் உதயநிதி கடுப்பானதால்தான், அவரைச் சமாதானப்படுத்தும்விதமாக, `நான் கருணாநிதி அமைச்சரவையிலும் இருந்தேன். ஸ்டாலின் அமைச்சரவையிலும் இருந்தேன். அடுத்ததாக, உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்’ என்று ‘ஸ்டன்ட்’ அடித்தார் துரைமுருகன். ஆனாலும், உதயநிதியின் அப்செட் தணியவில்லை. `மன்றத்துக்கு இரண்டு சீட்டுகளாவது ஒதுக்க வேண்டும். அப்போதுதான், எனக்கென்று இருக்கும் ரசிகர் பட்டாளத்தை வளர்க்க முடியும்’ என்று உதயநிதி வாதிட்டுவருகிறார்” என்றனர்.

இளைஞரணிக்கு சீட் ஒதுக்குவதையே தி.மு.க சீனியர்கள் பலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களிடம், `அப்பா இருந்த காலத்துல, நான் இளைஞரணிக்கு சீட் வாங்கிக் கொடுத்திருக்கேன். இப்ப அவங்களுக்குச் சில தொகுதிகள் ஒதுக்குறதுல தப்பில்லை’ என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இந்தச் சூழலில், `உதயநிதி நற்பணி மன்ற’த்துக்கும் சீட் ஒதுக்க வேண்டுமென உதயநிதி கேட்டதாக வரும் தகவல் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.