Published:Updated:

உதயநிதியின் டெல்லி ஜே.என்.யூ விசிட்... தி.மு.க. ரியாக்‌ஷன் என்ன?!

உதயநிதி
உதயநிதி

கருணாநிதி மறைவுக்கு பிறகு கனிமொழியை வைத்து கட்சிக்குள் கலகம் ஏற்படுத்தலாம் என்று பி.ஜே.பி தரப்பு திட்டமிட்டது. ஆனால், அதற்கு எந்த வகையிலும் இடம்கொடுக்காமல் அண்ணனை தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் செயல்பட்டு வருகிறார் கனிமொழி.

"இனி தி.மு.க-வின் எதிர்கால முகமாக உதயநிதி மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன" என்கிறார்கள் தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள். டெல்லியில் ஜே.என்.யூ மாணவர்களை உதயநிதி சந்திக்கச் சென்றதற்குப் பின் இந்தப் பேச்சு இன்னும் அதிகமாகியிருக்கிறது.

அய்ஷி கோஷ் - கனிமொழி சந்திப்பு
அய்ஷி கோஷ் - கனிமொழி சந்திப்பு

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவான ஏ.பி.வி.பி என்கிற அமைப்புதான் இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்தியதாகக் கூறப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களைப் பல்வேறு அரசியல் கட்சியினரும் சந்தித்துப் பேசி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் தி.மு.க மூத்த உறுப்பினர் எம்.பி கனிமொழி மாணவர்களை நேரில் சந்தித்தார். அவர்களிடம் தாக்குதல் குறித்து விவரங்களை நேரடியாகக் கேட்டறிந்தார். மேலும், தாக்குதலில் காயமடைந்திருந்த ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷை டெல்லியில் அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்று ஜே.என்.யூ மாணவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அவருடன் அன்பில் மகேஷ் மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோரும் உடன்சென்றிருந்தனர். இளைஞரணி செயலாளர் என்ற முறையில் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே இந்தப் பயணம் என்று உதயநிதி தரப்பில் கூறப்பட்டது. அங்கு பாதிக்கபட்ட மாணவர்களைச் சந்தித்த உதயநிதி, "உங்கள் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகள், நீங்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுங்கள். உங்களுக்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் துணை இருக்கும்" என்று சொல்லிவிட்டு வந்துள்ளார்.

ஜே.என்.யூ-வில் உதயநிதி
ஜே.என்.யூ-வில் உதயநிதி

உதயநிதியின் டெல்லி பயணம் வெளியில் சாதாரணமாகப் பார்க்கப்பட்டாலும் தி.மு.க-வுக்குள் ஏற்கெனவே இருந்த புகைச்சலை மேலும் பெரிதாக்கியுள்ளது. கட்சியில் உதயநிதிக்கான முக்கியத்துவம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளைஞர் அணி சார்பில் தனியாகவே இப்போது அறிக்கைகள், கருத்துகள், சமூகவலைதளங்கள் என அனைத்திலும் தனித்துவமாக இயங்கிவருகிறார். உதயநிதிக்கு தரப்படும் இந்த முக்கியத்துவம் முதலில் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் ஒருகட்டத்தில் கட்சியிலுள்ள அனைவருமே வேறுவழியின்றி அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு அனைவரும் வந்துவிட்டனர்.

மார்ச் மாதம் ஸ்டாலின் பிறந்த தினம் வருகிறது. அதை முன்னிட்டு தி.மு.க இளைஞரணி சார்பில் தங்கக்கோப்பை கிரிக்கெட் போட்டியைத் தமிழகம் முழுவதும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாகப் போட்டிகளை நடத்தி அதன் பிறகு சென்னையில் இறுதிப்போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். முதல் பரிசாக 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதயநிதியை முன்னிலைப்படுத்தியே இந்தப் போட்டியை இளைஞரணி நடத்துகிறது.

கனிமொழி - ஸ்டாலின்
கனிமொழி - ஸ்டாலின்

கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதை இதுவரையிலும் கண்டும் காணாத மனநிலையில் கனிமொழி இருந்துள்ளார். ஆனால், டெல்லியிலும் உதயநிதி காலடி எடுத்து வைத்திருப்பது கனிமொழி தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகக் கட்சி வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. டெல்லி அரசியலில் முரசொலி மாறனுக்குப் பிறகு, கருணாநிதி தனக்கு நம்பிக்கையான ஒருவர் வேண்டுமென்று கனிமொழியை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமான உறவை பேணிவருகிறார் கனிமொழி. அகில இந்திய அளவிலான பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பேசுவதற்கு தி.மு.க-வின் துாதுவராகக் கனிமொழி செயலாற்றியிருக்கிறார். இந்நிலையில் திடீரென உதயநிதி டெல்லிக்கு விசிட் அடித்திருப்பது அவரை சங்கடத்துக்குள்ளாக்கி இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

"கருணாநிதி மறைவுக்குப் பிறகு கனிமொழியை வைத்து கட்சிக்குள் கலகம் ஏற்படுத்தலாம் என்று பி.ஜே.பி தரப்பு திட்டமிட்டது. ஆனால், அதற்கு எந்த வகையிலும் இடம் கொடுக்காமல் அண்ணனைத் தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் செயல்பட்டு வருகிறார். கட்சியின் தலைவர் என்ற முறையிலும், தன் சகோதரர் என்ற முறையிலும் கனிமொழி அவருக்கு உரிய மரியாதை கொடுத்துவருகிறார். ஆனால், ஸ்டாலின் தரப்பில் இன்னும் கனிமொழியை அச்சத்துடனே பார்த்து வருகிறார்கள். குறிப்பாக, டெல்லியில் கனிமொழி லாபி செய்துவிடுவாரோ என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது.

`உன்ன நினைச்சி நினைச்சி..!’ உதயநிதி நகல் கிழிக்கும் போராட்டத்தில் என்ன நடந்தது?

பி.ஜே.பி அரசு இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தவுடன் மக்களவையில் தி.மு.க-வுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கத்தயாராக இருந்தது. கனிமொழியை அந்தப் பதவிக்குக் கொண்டு வர பி.ஜே.பி-யில் உள்ள பெண் அமைச்சர்களும் மோடியிடம் வலியுறுத்தினார்கள். பி.ஜே.பி தரப்பிலிருந்து இது குறித்து தி.மு.க தலைமையிடம் கேட்டதற்கு உரிய பதில் தரப்படவில்லை. அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இதனால், ஏற்கெனவே வருத்தத்தில் இருந்த கனிமொழி, இப்போது உதயநிதியின் டெல்லி விசிட்டால் மேலும் சங்கடத்துக்கு உள்ளாகியிருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்
உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்

இதுபற்றி கட்சியில் தனக்கு விசுவாசமான சிலரிடம் பேசிய கனிமொழி, `கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், மகளிரணிச் செயலாளர் என்ற அடிப்படையில் நான் அந்த மாணவர்களைச் சந்தித்த பிறகு, உதயநிதி சந்தித்தால் கட்சிக்குள் கோஷ்டி இருக்கிறது என்கிற தோற்றம் டெல்லி அரசியலில் பேசப்படும். தமிழகத்தில் அவருக்கு முன்னுரிமை கொடுப்பதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. டெல்லிக்கு இப்படித் திடீர் விசிட் அடிக்க வேண்டிய அவசியமென்ன?’ என்று வருந்தியதாகவும் அவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

உதயநிதி தரப்பில் இதுபற்றி பேசியபோது, "அகில இந்திய அளவில் உதயநிதி முன்னிலைப்படுத்தப்படுவதற்கும் கனிமொழிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அங்கு பாதிக்கப்பட்டது இளைஞர்கள், அதுவும் பி.ஜே.பி-க்கு எதிராகப் போராடிய இளைஞர்கள். அவர்களுக்கு தார்மிகமாகக்கூட நாங்கள் ஆதரவு தெரிவிக்கச் செல்வதை அரசியலாக்குவது தேவையற்றது. இந்தச் சந்திப்பில் யாருக்கும் செக் வைக்கும் எண்ணம் இல்லை. கட்சியை வளர்ப்பதில் இதுவும் ஒரு பங்குதான்” என்றனர்.

`நீங்கள்தான் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்!’ - கனிமொழி, ஆய்ஷி கோஷ் சந்திப்பில் நடந்தது என்ன?

கருணாநிதி இருந்தபோது ஸ்டாலினுக்குப் போட்டியாகக் கனிமொழி வளர்கிறார் என்ற பேச்சு கடுமையாக இருந்தது. ஆனால், அப்படி ஒரு எண்ணமே இல்லை என்பதை தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார் கனிமொழி. இப்போது உதயநிதியை வைத்து தனக்கு யாரோ நெருக்கடியை உண்டாக்கப் பார்ப்பதை உணர்ந்துள்ள கனிமொழி, ‘நான் அண்ணனுடன் நல்ல தொடர்பில்தான் இருந்து வருகிறேன்’ என்பதையும் அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார். அவற்றையெல்லாம் தாண்டியும் இதுபோன்ற பேச்சுகள் தொடர்கின்றன. பிற கட்சிகளில் நிர்வாகிகள் மத்தியில் கோஷ்டிப்பூசல் இருந்தால், தி.மு.க-வுக்குள் அது குடும்பத்துக்குள் இருப்பதாக தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு