Published:Updated:

`உதயநிதி Vs விஜய்' - தயாராகும் தேர்தல் களம்?

உள்ளாட்சி கேரட் ருசியைத் தன் ரசிகர்களுக்கு விஜய் காட்டிவிட்டார். ரசிகர்களைக் கட்டுப்படுத்த இனி அரசியல் நோக்கி அவர் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. எந்த ரூட்டை எடுக்கப்போகிறார் விஜய்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எதிர்வரும் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க விஜய் மக்கள் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது. அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரவில்லையென்றாலும், தனது விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறாராம் நடிகர் விஜய். தேர்தல் சூட்சுமங்களை ரசிகர்கள் கற்றுக்கொள்ள, அவர்களை விஜய் களமிறக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை நடிகர் விஜய் அரசியலில் இறங்கினால் எம்.ஜி.ஆராக ஜொலிப்பாரா அல்லது சிவாஜியாக முடங்குவாரா என்பது விவாதத்தைச் சூடாக்கியிருக்கிறது.

எம்.ஜி.ஆர். - சிவாஜி கணேசன்
எம்.ஜி.ஆர். - சிவாஜி கணேசன்

1960-களின் தொடக்கத்தில் சினிமாவின் எதிரெதிர் உச்ச நட்சத்திரங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவரும் அரசியலிலும் கோலோச்சிய தருணம் அது. அறிஞர் அண்ணாவின் விசுவாசியாக எம்.ஜி.ஆர் பவனிவந்த வேளையில், காங்கிரஸ் தலைவர் காமராஜின் விசுவாசியாக சிவாஜி கணேசன் வலம்வந்தார். பிற்பாடு எம்.ஜி.ஆர் ஆட்சியமைக்கும் அளவுக்கு முன்னேறியபோது, சிவாஜியால் அந்த அளவுக்கு அரசியலில் சோபிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, `தமிழக முன்னேற்ற முன்னணி' என்கிற பெயரில் சிவாஜி தொடங்கிய தனிக்கட்சியும் பிரகாசிக்கவில்லை. 1989 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் ஜானகி அணியுடன் இணைந்து 49 தொகுதிகளில் போட்டியிட்ட 'தமிழக முன்னேற்ற முன்னணி' ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜி கணேசன், தி.மு.க வேட்பாளர் துரை சந்திரசேகரனிடம் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். அதோடு அரசியலுக்கு முழுக்குப்போட்ட சிவாஜி, கட்சியையும் கலைத்துவிட்டார்.

மே 11, 1973: நெருப்பாய் கொதித்த களம்; அதிரடி எம்ஜிஆர்! - உலகம் சுற்றும் வாலிபனும் தமிழக அரசியலும்

சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்த இருவரில், ஒருவர் அரசியலின் உச்சாணிக் கொம்பில் ஏறியதையும், மற்றொருவர் சறுக்கி விழுந்ததையும் தமிழகம் பார்த்தது. இது நடந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு, சினிமாவிலிருந்து அரசியலில் தனக்கென தனி முத்திரைப் பதித்தவர் விஜயகாந்த். தனது ரசிகர் மன்றங்களையெல்லாம் நற்பணி இயக்கங்களாக மாற்றிய விஜயகாந்த், 2001 உள்ளாட்சித் தேர்தலில் தன் ரசிகர் பட்டாளத்தைக் களமிறக்கி, அரசியல் ஆழம் பார்த்தார். அதே ரூட்டில் தற்போது பயணிக்கும் நடிகர் விஜய், 2031 சட்டமன்றத் தேர்தலுக்கு ஆழம் பார்ப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

 விஜயகாந்த்
விஜயகாந்த்

நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் சிலர், ``உள்ளாட்சித் தேர்தலில் ஓர் இயக்கம் கரைசேர்ந்துவிட்டால், பிற்பாடு எப்பேர்ப்பட்ட தேர்தல் சூறாவளி அடித்தாலும் சமாளித்துவிடும். அந்த அளவுக்கு மனப்பக்குவம், அனுபவத்தை உள்ளாட்சித் தேர்தல் தந்துவிடும். அதனால்தான், தன்னுடைய அரசியல் என்ட்ரிக்கு முன்னதாக, தன் ரசிகர்களுக்கு அரசியல் அனுபவத்தை 2001 உள்ளாட்சித் தேர்தல் மூலமாக ஊட்டினார் விஜயகாந்த். அதேபாணி அரசியலைக் கையில் எடுத்திருக்கும் விஜய், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குத் தன் படம், மன்றத்தின் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரசிகர்களுக்கு அனுமதி தந்திருக்கிறார்.

ஸ்டாலின் டிப்ஸ், சீமான் வியூ, விஜய்  அட்வைஸ்... உள்ளாட்சி போர் | Elangovan Explains

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திரைப்பட ரசிகர்களை வகைப்படுத்த ஏ, பி, சி என மூன்று வகையாகப் பிரிப்பது வழக்கம். எம்.ஜி.ஆருக்கு பி, சி சென்டர்களில் ரசிகர் பட்டாளம் அதிகம். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இந்த ரசிகர்கள் பிற்பாடு அவருக்கு வாக்குவங்கியாகவும் மாறிப்போனார்கள். நடிகர் ரஜினிகாந்துக்கு ஏ, பி, சி என மூன்று சென்டர்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அரசியலுக்கு வர அவர் மறுத்துவிட்டதால், அந்த ரசிகர் கூட்டமும் அமைதியாகிவிட்டது. ஏ சென்டர் ரசிகர்களை மிகுதியாக வைத்திருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கடைநிலை சமூகத்தினரைக் கவர முடியாமல் அரசியலில் திண்டாடுகிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் 2.84 வாக்கு சதவிகிதம் மட்டுமே ம.நீ.ம-வுக்கு கிடைத்திருப்பது அதற்கு சாட்சி.

விஜய்
விஜய்

நடிகர் விஜய்யின் ரசிகர் பட்டாளம் எம்.ஜி.ஆருக்கு இருந்ததைப்போல பெரும்பகுதி பி, சி சென்டர்களில் இருக்கிறது. உழைக்கும் தொழிலாளிகளான இடைநிலை, கடைநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். விஜய் நடித்த படங்கள் எந்தெந்த பகுதிகளிலெல்லாம் 50 நாள்களைக் கடந்து ஓடியிருக்கிறது என்பதை வகைப்படுத்தினால் இது புரிந்துவிடும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தி.மு.க-வுக்குப் பிரதான மாற்று சக்தியாக இன்னும் ஒரு தலைவர் உருவாகவில்லை. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு புகார்கள் இருக்கும் நிலையில், இளைஞர்களுக்கான தலைவராக அவர் பரிணமிப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. திமுக-வின் இளைஞரணித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுவிட்டார். எட்டு சதவிகித வாக்குகளைத் தொட்டிருக்கும் சீமானும், பா.ஜ.க தலைவராகியிருக்கும் அண்ணாமலையும் தி.மு.க-வுக்குச் செல்லும் இளைய சமுதாய வாக்குகளில் ஓட்டை போட முயலலாம். திமுக கூட்டணியில் திருமாவளவன் இருக்கிறார். பாமக ஏற்கெனவே தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்திருக்கிறது. இவர்கள் இருவரும் தனித்துக் களமிறங்கினால்கூட, தி.மு.க-வுக்கு எதிராகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது.

உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் ரசிகர்கள்; பல்ஸ் பார்க்கும் விஜய்!

இதையெல்லாம் அலசி ஆராய்ந்துவிட்டுத்தான் அரசியல் ஆழம் பார்க்கிறார் நடிகர் விஜய். அவருக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குப் படங்கள் கைவசம் இருக்கின்றன. முன்கூட்டியே அரசியலில் நேரடியாகக் குதித்து, தனக்குள்ள 'மாஸ்' முகத்தை கலைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. பெண்கள், குழந்தைகள் மத்தியில் தனக்கிருக்கும் மார்க்கெட்டை 2026 சட்டமன்றத் தேர்தல் வரை குலையாமல் நகர்த்துவதுதான் விஜய்க்கு இருக்கும் சவால். அதன் பிறகு அரசியல் பணிகளை முடுக்கிவிட்டு, 2031 சட்டமன்றத் தேர்தலில் களம் காண வியூகம் அமைக்கிறார் விஜய். 1972-ல் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர்., பல்வேறு அரசியல் சவால்களைக் கடந்து, ஐந்து வருடங்களுக்குப் பிறகு 1977-ல்தான் ஆட்சியைப் பிடித்தார். விஜய் ரூட்டும் அதுதான். 2031 சட்டமன்றத் தேர்தலின்போது, உதயநிதிக்குப் பின்னால் பெரிய இயக்கம் இருக்கும். தற்போதைய தமிழக அரசியல் நிலவரப்படி சென்றால், உதயநிதிக்கு எதிராக இளைய சக்தியாக அப்போது யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வெற்றிடத்துக்குத்தான் குறிவைக்கிறார் விஜய். எம்.ஜி.ஆர் பாணியில் சமூகக் கணக்கை கையிலெடுத்து விஜய் களமிறங்கினால், அரசியல் ஆட்டமே மாறிவிடும்" என்றனர்.

விஜய் செல்ஃபி
விஜய் செல்ஃபி

கடந்த ஆண்டு பிப்ரவரியில், `பிகில்’ படத்தின் வசூல் தொடர்பாக நடிகர் விஜய், ஏ.ஜி.எஸ் நிறுவனம், ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனை முடிந்த மறுநாளே, நெய்வேலியில் நடைபெற்ற 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டார். ஷூட்டிங் முடிவடைந்த நாளில், ரசிகர் பட்டாளத்தின் நடுவே வேனில் ஏறிய விஜய், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த செல்ஃபி படம் விஜய்யின் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டது. கண நேரத்தில் வைரலான அந்த செல்ஃபி படம், இந்தியாவில் அதிக முறை ரீட்விட் செய்யப்பட்ட பதிவில் ஒன்றாகிப்போனது. நடிகர் விஜய்க்கு இருக்கும் இந்த மாஸ் புரிந்ததால்தான், அவரின் இந்த உள்ளாட்சி அரசியல் மூவ் ஆட்சி மேலிடத்துக்குச் சற்றுக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். 'விஜய் நற்பணி மன்றத்தின் சார்பில் போட்டியிடுபவர்கள் யார் யார், அவர்களின் பின்புலம் என்ன, கிராமப்புற ஊராட்சி மன்றத் தேர்தல்களில் தேர்தல் பணியாற்றுகிறார்களா?' என்று அறிக்கை அளிக்க உளவுத்துறை களமிறக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

‘வாத்தி கம்மிங்?’ ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டும் விஜய்?

ஒருவேளை நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி, எம்.ஜி.ஆர் பாணியில் சமூகக் கணக்கை கையிலெடுத்து, துணிச்சலோடு செயல்பட்டால் அரசியல் அரியணை அவர் வசமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அரசியல் வெட்டாட்டத்தில் அவர் சற்று அசந்தாலும், சிவாஜியைப்போல வீழ்ச்சியைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். இரண்டுமே வேண்டாம், ரஜினி பாணியில் சினிமா மட்டும் போதும் என அவர் அமைதியாகப் போவதற்கு வாய்ப்பில்லை. உள்ளாட்சி கேரட் ருசியைத் தன் ரசிகர்களுக்கு அவர் காட்டிவிட்டார். ரசிகர்களைக் கட்டுப்படுத்த இனி அவர் அரசியல் நோக்கி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. எந்த ரூட்டை எடுக்கப்போகிறார் விஜய்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு