Published:Updated:

`அன்பகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்!' - உதயநிதி எடுத்த முடிவு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் இனிமேல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாராம் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

நடிகரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று காலையில் அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு, கட்சியின் பொதுச்செயலாளரான அன்பழகனை அவரது வீட்டில் போய் சந்தித்து ஆசி வாங்கினார். உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்த அன்பழகன், உதயநிதியின் தலையை தொட்டு ஆசிர்வாதம் செய்தார்.

ஸ்டாலினுடன் உதயநிதி
ஸ்டாலினுடன் உதயநிதி

பிறகு, தயாளு அம்மாள் மற்றும் ராஜாத்தி அம்மாள் உள்ளிட்ட குடும்ப மூத்த உறுப்பினர்களிடம் ஆசி பெற்றார். அறிவாலயத்தில் தந்தை மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். பிறகு, அன்பகத்தில் அவரது ரசிகர் மன்ற பிரமுகர்கள், கட்சி பிரமுகர்கள் என்று ஏராளமானவர்களை நேரில் சந்திக்கும் வைபவம் நடந்தது.

ஸ்டாலினிடம் கொந்தளித்த உதயநிதி... ரியாக்‌ஷனோ அமைதியோ... அமைதி!

வெளி மாவட்டங்களில் உள்ள ரசிகர்களும், தொண்டர்களும் உதயநிதியின் பிறந்தநாளில் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காகச் அன்பகத்தில் குவிந்திருக்கிறார்கள். இதனால், அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டது. முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் பிறந்தநாள் சந்திப்பு நிகழ்ச்சி, அன்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் மக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமமடைந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்

இதை கேள்விப்பட்ட உதயநிதி, `இதை நான் எதிர்பார்க்கவேயில்லை' என்று வருத்தப்பட்டாராம். மு.க.ஸ்டாலின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்தபோது ஆரம்பத்தில் அன்பகத்தில் இதுமாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தினார். ஆனால், டிராஃபிக் பிரச்னை ஏற்படுவதால், விழா நடக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்றினாராம். இதை சிலர் உதயநிதியிடம் சுட்டிக்காட்ட, `இனி என் பிறந்தநாளை அன்பகத்தில் கொண்டாடுவதில்லை' என முடிவு செய்துள்ளாராம். பல்லாவரம் நகர உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் `குரோம்பேட்டை' ஆர்.கே. ஞானம் தலைமையில் 42 கிலோ வாங்கி வெட்டி உதயநிதியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்களாம்.