Published:Updated:

தஞ்சை:`சீனியர்களை சந்திச்சு உதயநிதி நலம் விசாரிச்சிருக்கணும்!’ - ஆதரவாளர்கள் ஆதங்கம்

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியத் தளபதியாக திகழ்ந்தவர் எல்.கணேசன். சட்டமன்ற உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்தவர்.

`தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி, வெளி மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டால், அங்குள்ள கட்சி முன்னோடிகளை அவர்களது வீட்டுக்கே சென்று சந்திப்பது வழக்கம். முதலமைச்சர் பதவியில் இருந்த காலங்களிலும்கூட கருணாநிதி அதைக் கடைப்பிடித்தார். தற்போதைய தலைவர் ஸ்டாலினும் அதைக் கடைப்பிடிக்கிறார். ஆனால்,தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினோ, இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை’ எனக் கழக சீனியர்களின் ஆதரவாளர்கள் சிலர் ஆதங்கப்படுகிறார்கள்.

எல்.கணேசன்
எல்.கணேசன்

இது குறித்து நம்மிடம் பேசிய சீனியர்களின் ஆதரவாளர்கள், ``தி.மு.க. சட்டத் திருத்தக்குழுத் தலைவர் எல்.கணேசன் உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையில் தஞ்சாவூர் மருத்துவர் கல்லூரி சாலையிலுள்ள வீட்டில் வசிக்கிறார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கட்சியை வளர்த்த முக்கியத் தலைவர்களில் இவரும் ஒருவர். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியத் தளபதியாக திகழ்ந்தவர் எல்.கணேசன். சட்டமன்ற உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்தவர். டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், எல்.கணேசன் வீட்டுக்குச் சென்று நலம் விசாரிப்பார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தார்கள்.

தஞ்சாவூரில் பல மணி நேரம் தங்கியிருந்தபோதும்கூட, எல்.கணேசனை நலம் விசாரிக்க உதயநிதி ஸ்டாலின் செல்லவில்லை. இத்தனைக்கும் எல்.கணேசனின் மகன் அண்ணாதுரை, தி,மு.க கழக தஞ்சை மாவட்டப் பொருளாளராகப் பதிவிவகிக்கிறார்.

தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் பல முறை வெற்றிபெற்றவர் எஸ்.என்.எம் உபயதுல்லா. தி.மு.க நகரச் செயலாளராக நீண்டகாலம் பதவிவகித்தவர். தஞ்சாவூரில் கட்சி நிகழ்ச்சி எதுவென்றாலும் தனது சொந்தச் செலவில் பிரமாண்டமாக நடத்திக் காட்டியவர். இதனாலேயே இவர் மீது கருணாநிதி மிகுந்த அபிமானம்கொண்டிருந்தார். 2006-11 வரையிலான தி.மு.க ஆட்சிக்காலத்தில் உபயதுல்லாவை வணிகவரித்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார். தி,மு.க நிர்வாகிகளிடம் மட்டுமல்லாமல், கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களிடமும் அன்பாக, எளிமையாகப் பழகக்கூடியவர் உபயதுல்லா. கட்சிக்காகக் கடுமையாக உழைத்த உபயதுல்லா தற்போது முதுமையின் காரணமாக உடல்நிலை நலிவுற்றிருக்கிறார். தஞ்சாவூரில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் இவரை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி, உயிருடன் இருக்கும் கழக முன்னோடிகளின் வீட்டுக்குச் செல்வதோடு மட்டுமல்லாமல், மறைந்த கழக முன்னோடிகளின் வீட்டுக்குச் சென்று வருவதையும் வழக்கமாகக்கொண்டிருந்தார். தற்போதைய தலைவர் ஸ்டாலினும் இதை இயன்றவரை கடைப்பிடித்துவருகிறார்.

உதயநிதி
உதயநிதி

கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படும் உதயநிதி ஸ்டாலின் தற்போது டெல்டா மாவட்டங்களில் தொடங்கிய தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் என்பது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமனது. கழக முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்துவதும், அவர்களது வாழ்த்துகளைப் பெறுவதும் மிகவும் அவசியமானது. தி,மு.க-வின் முக்கியத் தலைவர்களாகவும், முன்னாள் அமைச்சர்களாகவும் திகழ்ந்த மறைந்த மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று, மரியாதை செலுத்தாதது பெரும் குறை. கட்சியை வளர்க்க, வலிமைப்படுத்த ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பாணி இருக்கிறது. தி.மு.க-வைப் பொறுத்தவரை, கழக முன்னோடிகளுக்கு மரியாதை செய்வது மிகவும் அவசியமானது. மற்ற மாவட்டங்களிலாவது இதை உதயநிதி ஸ்டாலின் கடைப்பிடிக்கப்பட்டும். இவருக்கு தற்போது ஆல் இன் ஆலாகத் திகழும் ஐபேக்காவது இதை அவரிடம் வலியுறுத்த வேண்டும்” என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு