Published:Updated:

`சென்னை மேயரே... மிசா சன்னே!' - களைகட்டிய உதயநிதி பிறந்தநாள்; கடுப்பில் சீனியர்கள்

தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதியின் பார்வை தங்கள் பக்கம் திரும்பவேண்டும் என்ற நோக்கத்திற்காக சிலர் வித்தியாசமாக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதியின் பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். கூடவே, அவரின் பிறந்தநாளை டிரெண்ட் ஆக்கும் வேலைகளையும் நேற்றே தொடங்கிவிட்டனர். இதுதொடர்பாகப் பரவிய வாட்ஸ்அப் தகவலில், `நவம்பர் 27 புதன் அன்று பிறந்த நாள் காணும் தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நாம் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் தளத்தில் இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் செய்வோம்' என உடன்பிறப்புகளுக்குச் சிலர் தகவல் அனுப்பினர்.

இன்று காலை முதலே, `வருங்கால சென்னை மாநகர மேயரே', `மிசா சன்..மிராக்கிள் சூன்' என்றெல்லாம் உதயநிதி பிறந்தநாளுக்காக வித்தியாசமான போஸ்டர்கள் ஒட்டவைக்கப்பட்டுள்ளன.

உதயநிதி பிறந்த நாள்
உதயநிதி பிறந்த நாள்

``தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உதயநிதி மாறுவார்" என ஆரூடம் சொல்லி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். இன்று தனது 42-வது பிறந்த நாளையொட்டி காலையில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.

பிறகு, கட்சியின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகனை அவரது வீட்டில் சந்தித்து ஆசிபெற்றார். பின்னர், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடமும் ஆசீர்வாதம் வாங்கினார். தொடர்ந்து, அறிவாலயத்தில் தந்தை மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார்.

உதயநிதி
உதயநிதி

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. வெளி மாவட்டங்களில் உள்ள ரசிகர்களும் தொண்டர்களும் உதயநிதியை நேரில் சந்திப்பதற்காக அன்பகம் வந்தனர். இதனால், அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டது.

இளைஞரணிச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு நடக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதால், உடன்பிறப்புகள் ஏக உற்சாகத்தில் திளைக்கின்றனர். இதுவே, சீனியர்கள் சிலரையும் முகம்சுளிக்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், "உதயநிதியின் பார்வையைத் தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்துக்காகச் சில தொண்டர்கள் இப்படி வித்தியாசமாக போஸ்டர் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இது தேவையற்ற விமர்சனங்களைத்தான் ஏற்படுத்தும். பொதுவாக, கட்சித் தலைவரின் பிறந்தநாளின்போது கோபாலபுரத்திலும் அறிவாலயத்திலும் உடன்பிறப்புகள் கூட்டம் அலைமோதும். அதேபோன்ற ஒரு தோற்றத்தை உதயநிதிக்கும் ஏற்படுத்துகிறார்கள். அரசியல்ரீதியாக அவர் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதை அவரது ஆதரவாளர்கள் உணர்ந்தது போலத் தெரியவில்லை" என்றார் ஆதங்கத்துடன்.