நாகை: 5 கோயில் பிரசாதம்... மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனகர்த்தரிடம் ஆசிபெற்ற உதயநிதி ஸ்டாலின்!
27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை தரிசித்து ஆசிபெற்றார் உதயநிதி ஸ்டாலின்.
`விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது நாளாக நேற்றும் (நவ.21) கைதுசெய்யப்பட்டார். தனியார் திருமண மண்டபத்தில் சிறைவைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். 'இரவு எத்தனை மணி ஆனாலும் தருமபுரம் குருமகா சந்நிதானத்தைச் சந்தித்து ஆசி பெறுவேன்" என்று கூறினார். அதன்படியே இரவு 10 மணிக்கு தருமபுரம் ஆதின மடத்துக்கு வந்து சேர்ந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் பொய்யாமொழி ஆகியோர் வந்தனர். அவர்களுக்கு மடத்தின் நிர்வாகிகள் வாசலில் வரவேற்பளித்து, அழைத்துச் சென்றார்கள்.
பின்னர் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்றார் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு திருக்கடையூர் அபிராமி, வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமாரசாமி, திருபுவனம் சரபேஸ்வரர், மயிலாடுதுறை குரு தட்சிணாமூர்த்தி, தருமபுரம் துர்க்கை ஆகிய ஐந்து ஆலயப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1972 -ல் தருமபுரம் கலைக் கல்லூரியின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்துகொண்ட படத்தையும், திருக்குறள் புத்தகத்தையும் நினைவுப்பரிசாக குருமகாசந்நிதானம் வழங்கினார்.
அதன் பிறகு திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் முதலாமாண்டு குருபூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் அதன் 50-வது வெளியீடான `தமிழ் கடவுள் சேயோன்' என்ற ஆன்மிக நூலை குருமகாசந்நிதானம் வெளியிட, முதல் பிரதியை தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

பிறகு குரு மகாசந்நிதானமும், உதயநிதி ஸ்டாலினும் தனிமையில் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை நிறுவனரும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளருமான வழக்கறிஞர் டாக்டர் இராம.சேயோன் செய்திருந்தார். அவருக்கும் நன்றி தெரிவித்து இரவு 10:30 மணிக்கு விடைபெற்றார் உதயநிதி ஸ்டாலின்.