Published:Updated:

``அப்படியொரு கூட்டமே தேவையில்லை!” - ஊட்டியில் கொதித்த உதயநிதி

நிகழ்ச்சியின் மேடைக்கு அருகில் இருந்த அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தாமல் உதயநிதி சென்ற சம்பவம் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

udhayanidhi stalin
udhayanidhi stalin

தி.மு.க-வின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றார். இதன்பிறகு இளைஞரணியை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 30 லட்சம் இளைஞர்களைப் புதிய உறுப்பினர்களாகச் சேர்ப்பதற்காக செப்டம்பர் 14-ம் தேதி முதல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

udhayanidhi stalin
udhayanidhi stalin

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், "பேனர் விழுந்து உயிரிழந்த சோகத்துக்குப் பின் தி.மு.க-வின் எந்த விழாவிலும் பேனர்கள் வைக்கப்படுவதில்லை. அதேபோல், நான் பங்கேற்கும் எந்த விழாக்களிலும் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம். அப்படி பட்டாசு வெடித்தால்தான் கூட்டம் வரும் என்றால் அந்தக் கூட்டமே தேவையில்லை. மேலும் கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற அடைமொழிகள் போதும். வேறு எந்தப் பட்டமும் அளிக்க வேண்டாம்.

தலைமுறைகளைத் தாண்டி தி.மு.க-வில் தொண்டர்களின் உறவு நீடிக்கிறது. ஒரு தொகுதிக்கு 10,000 இளைஞர்கள் என்ற அடிப்படையில் 2 மாதத்தில் 30 லட்சம் இளைஞர்களைக் கட்சியில் இணைக்க உள்ளோம்" எனப் பேசி முடித்தார்.

பின்னர் அவரைச் சந்திக்க கட்சி நிர்வாகிகள் அனுமதி கேட்டபோது, `விமானத்துக்குச் செல்ல நேரம் ஆகிவிட்டது' என அவரின் உதவியாளர்கள் தெரிவித்தினர். அதேபோல் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகில் அண்ணா சிலை உள்ளது. இந்த அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவிக்காமல் சென்றுவிட்டார் என்ற சர்ச்சையும் எழுந்தது.

Anna statue
Anna statue

இதுகுறித்துப் பேசும் நீலகிரி தி.மு.க சீனியர்கள் சிலர், ``1971 -ம் ஆண்டு குன்னூரில் கலைஞரால் அண்ணா சிலை திறக்கப்பட்டது. அவர் எப்போது குன்னூருக்கு வந்தாலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். தற்போதைய தலைவர் ஸ்டாலினும் குன்னூரில் பொதுக்கூட்டம் என்றால் கட்டாயம் அண்ணா சிலைக்குத் தவறாமல் மரியாதை செலுத்துவார். ஆனால், இன்றைக்கு விழா மேடைக்கு அருகில் அண்ணா சிலை இருந்தும் கண்டுகொள்ளவில்லை. அண்ணா, பெரியார் குறித்து ஒரு வார்த்தைகூட பேசாததும் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது" என்கின்றனர்.