காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் மூத்த தலைவர்களை மதிப்பதில்லை என்றும், அவர்களின் ஆலோசனைகளை கேட்பதில்லை என்றும், அடிக்கடி வெளிநாடு சென்றுவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் உட்கட்சி தேர்தல் நடத்தவேண்டும் என்று கூறி 23 தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க அக்கட்சியில் சேருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துவிட்டது. தற்போது பிரசாந்த் கிஷோர் சொந்தமாக பீகாரில் அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அதிருப்தி தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா காங்கிரஸ் முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான், அளித்துள்ள பேட்டியில், ``கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடந்த நான்கு ஆண்டுகளாக சந்திக்க முடியவில்லை. டெல்லியில் இருக்கும் போது எப்போதாவது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுவேன் .

ஆனால் அவரின் உடல்நிலை சரியில்லை. எப்போதும் மருத்துவமனையிலேயே இருப்பார். ஆனாலும் எங்களிடம் பேச தயாராகவே இருப்பார். நான் அனுமதி கேட்கும் நேரத்தில் சோனியா காந்தியையும் சந்தித்து பேசியிருக்கிறேன். ஆனால் நீண்ட நாள்களாக ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை" என்று தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கட்சியிலிருந்து வெளியேறியது குறித்து கேட்டதற்கு, ``கட்சி நியமிக்கப்பட்டவர்களிடமிருந்து மட்டுமே ஆலோசனைகளை பெறுகிறது. கபில் சிபல் விவகாரத்தில் காங்கிரஸ் சரியாக ஆலோசனை பெறவில்லை.
2024-ல் மோடியை தோற்கடிக்கவேண்டுமானால் 12 மாநில சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியை பெறவேண்டும். அதோடு ஒத்த கருத்துகளுடைய கட்சிகளுடன் பரந்த விரிவான கூட்டணியை உருவாக்கவேண்டும். அது மிகவும் கஷ்டம் தான். ஆனால் முடியாதது அல்ல. காங்கிரஸ் கட்சியில் அனுபவசாலிகளுக்கும், திறமையானவர்களுக்கும் இடையே மோதல் இருக்கிறது. ஆனால் இரு தரப்பினரும் இணைந்திருப்பது அவசியம். வாக்குகள் பிரிவதால்தான் பாஜக வெற்றி பெறுகிறது. காங்கிரஸ் தலைமையில் பரந்த கூட்டணி அமைப்பதே மாற்றுத்தீர்வாக இருக்கும். பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அந்த இடத்தை பிராந்திய கட்சிகள் நிரப்ப பார்க்கிறது. மென்மையான இந்துத்துவா திட்டம் சரியானது கிடையாது. இது போன்ற நிலையில் பாஜக-விடமே மக்கள் செல்வார்கள்" என்று தெரிவித்தார்.
