Published:Updated:

“மோடியின் 100 நாள் ஆட்சியில் பொருளாதாரம் பாழ்பட்டுக் கிடக்கிறது”- கே.எஸ்.அழகிரி!

இ.கார்த்திகேயன்

”மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க-வின் 100 நாள் ஆட்சியில் மெச்சக்கூடியது எதுவுமில்லை. மாறாக, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பாழ்பட்டுக்கிடக்கின்றன” என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

”மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க-வின் 100 நாள் ஆட்சியில், மெச்சக்கூடியது எதுவுமில்லை. மாறாக, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பாழ்பட்டுக்கிடக்கின்றன” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார், தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களை நிறைவுசெய்திருக்கிறது. இந்த 100 நாள்கள் என்பது மெச்சக்கூடிய ஆட்சி ஒன்றுமில்லை.

செய்தியாளர் சந்திப்பில் கே.எஸ்.அழகிரி
செய்தியாளர் சந்திப்பில் கே.எஸ்.அழகிரி

வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பாழ்பட்டுக்கிடக்கின்றன. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் மோட்டார் வாகனத்துறை சரிந்துவிட்டது. ரிசர்வ் வங்கியிலுள்ள உபரி நிதி பறிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். தமிழ் கற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பைப் பறித்துவிட்டு, தமிழ் தெரியாத பிறமொழி கற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இதுதான் இந்த 100 நாள்களின் சாதனை.

தறியில், பாகும் நூலும் சேர்த்து நெய்த ஆடை போல கடந்த 50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி, இந்தியாவை அழகாகப் பிணைத்து வைத்திருந்தது. ஆனால், பா.ஜ.க-வினர் அதை கிழித்து விட்டார்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கேள்வித் தாள்களில் தலித், முஸ்லிம்கள் குறித்து தவறான கருத்துகள் இடம் பெற்றிருந்தன. பா.ஜ.க-வின் ஆட்சி சனாதன ஆட்சி என்பதற்கு உதாரணம்தான். நாடு ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள், ஆக்கபூர்வமான விஷயங்கள் எதையும் செய்யவில்லை.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள தமிழக முதல்வர், தமிழகத்தின் நலனுக்காக அதிக முதலீடுகளை ஈர்த்தார் என்றால் காங்கிரஸ் அதை வரவேற்கும். இருப்பினும், கடந்த முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தந்தால் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்க வேண்டும். அது, இரு பக்கமும் கூர்மையாக இருக்கும் கத்திபோன்றது. சட்டம் ஒழுங்கு சரி இல்லையெனில் அதன் பாதிப்பு அவர்களையே வந்தடையும்” என்றார்.