Published:Updated:

ஒன்றிய சேர்மன் பதவி; காரில் கடத்தப்பட்ட கவுன்சிலர்கள்! திருவரங்குளம் தி.மு.கவினரிடையே மோதல், பதற்றம்

புதுக்கோட்டையில் ஒன்றிய சேர்மன் பதவிக்காக, தி.மு.கவைச் சேர்ந்த இருதரப்பினர் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க இருதரப்புக்கிடையே மோதல்!
தி.மு.க இருதரப்புக்கிடையே மோதல்!

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள 25 ஒன்றிய வார்டுகளில் தி.மு.க கூட்டணிக் கட்சியினர் 17 இடங்களைக் கைப்பற்றினர். அதிக இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றதால், திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் பதவி தி.மு.கவினருக்கே கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில்தான், சேர்மன் வேட்பாளர்களுக்கு தி.மு.க சார்பில் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஞான இளங்கோவன், மேற்கு ஒன்றியச் செயலாளர் தங்கமணி ஆகிய இருவரும் தங்கள் மனைவியை சேர்மன் ஆக்க வேண்டும் என்று திட்டமிட்டு வருகின்றனர்.

தி.மு.க இருதரப்புக்கிடையே மோதல்!
தி.மு.க இருதரப்புக்கிடையே மோதல்!

இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவருக்கும் பதவியேற்பு நிகழ்வு திருவரங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் வந்திருந்தனர். குறிப்பாக, ஞான இளங்கோவன் தனது தரப்பு ஆதரவு கவுன்சிலர்களைத் தனியாக அழைத்து வந்திருந்தார்.

அப்போது, பதவியேற்பு முடிந்து வெளியே வந்த ஞான இளங்கோவனின் ஆதரவு கவுன்சிலர்கள் 4 பேரை, அங்கு தயாராக இருந்த தங்கமணி தரப்பினர் காருக்குள் தூக்கிப்போட்டுக் கொண்டு சென்றுவிட்டனர். இதனால், இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்துக்கொண்டனர். கைகலப்பு ஏற்பட்டதால், சிறிது நேரத்திற்குள் அந்தப்பகுதி கலவர பூமியாக மாறியது.

தி.மு.க இருதரப்புக்கிடையே மோதல்!
தி.மு.க இருதரப்புக்கிடையே மோதல்!

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு போலீஸார் அந்தப்பகுதியைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து, அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். திருவரங்குளம் ஒன்றிய அலுவலகத்திற்கு வெளியே தி.மு.கவைச் சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.