Published:Updated:

`தடுப்பூசி தயாரிக்க மேலும் 10 நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும்' -அமைச்சர் நிதின் கட்கரி

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

கொரோனா தடுப்பூசி தயாரிக்க 10 கம்பெனிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, பிரதமர் மோடி செவி மடுப்பாரா?

நாட்டில் தற்போது கொரோனா தடுப்பூசியை புனேவைச் சேர்ந்த சீரம் என்ற தனியார் நிறுவனமும், பெங்களூரைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரித்துவருகின்றன. இதனால் நாட்டில் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இரண்டு நிறுவனம் மட்டும் தடுப்பூசி தயாரித்தால் டிசம்பர் மாதம்தான் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வேறு நிறுவனங்களுக்கும் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால், மத்திய அரசு அந்தக் கோரிக்கைக்கு செவி மடுக்க மறுத்துவருகிறது. இந்தநிலையில், மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் ஆன்லைனில் பேசினார். அதில்,``தடுப்பூசி தேவையைவிட சப்ளை குறைவாக இருந்தால் பிரச்னை ஏற்படும்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

எனவே குறைந்தது 10 நிறுவனங்களுக்காவது கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க அனுமதி கொடுத்து, தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு அல்லது மூன்று ஆய்வுக்கூடங்கள் தடுப்பூசியைத் தயாரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளைக்கொண்டிருக்கின்றன. அவர்களுடன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொண்டு ஒத்துழைப்பு கொடுத்தால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதன் மூலம் நாட்டுக்கு தேவையானது போக எஞ்சியவற்றை வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலம் தடுப்பூசி பிரச்னையும் தீரும்" என்று தெரிவித்தார்.

இதே கருத்தைத்தான் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தெரிவித்திருந்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இதே கருத்தை வலியுறுத்தி கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதே கருத்தை இப்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். நிதின் கட்கரியின் கருத்தை,``அவரின் முதலாளி (நரேந்திர மோடி) கவனிப்பாரா" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தடுப்பூசி பற்றாக்குறை... பழிவாங்கும் நடவடிக்கை... தடுமாறும் மோடி அரசு!

மத்திய அரசு மே 1-ம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான தடுப்பூசியை மாநில அரசுகள், உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்துவிட்டன. ஆனால் இந்தியாவில் இரண்டு கம்பெனிகள் மட்டுமே தடுப்பூசி தயாரிப்பதால் அந்த கம்பெனிகளால் மத்திய அரசுக்குக் கொடுக்கவே மருந்து உற்பத்தி செய்ய முடியவில்லை. இதையடுத்து மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் தடுப்பூசி மருந்து வாங்க சர்வதேச அளவில் டெண்டர் கோரியுள்ளன. ஆனால் இதுவரை எந்த சர்வதேச நிறுவனமும் மருந்து சப்ளை செய்ய முன்வரவில்லை.

நாட்டில் இதுவரை 10 சதவிகித மக்கள் மட்டுமே முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான்கு கோடி மக்கள் இரண்டு தடுப்பூசியையும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாட்டில் கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டால் மட்டுமே அதைச் சமாளிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி ஒரு சூழலில் நிதின் கட்கரியின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு விரைவாக தடுப்பூசி தயாரிப்பை மேலும் சில நிறுவனங்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தம் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு