Published:Updated:

பொன்னார் முதல் திருமா வரை... தமிழக அரசியலின் மொரட்டு சிங்கிள்ஸ்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

தமிழக அரசியலில் 40 வயதைக் கடந்தும் சிங்கிளாக ஸ்கோர் செய்துவரும் சில தலைவர்கள்....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருமணமே செய்துகொள்ளாமல் அரசியலில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, பா.ஜ.க உமாபாரதி என அந்தப் பட்டியல் நீளும். தமிழக அரசியலில் 40 வயதைக் கடந்தும் சிங்கிளாக ஸ்கோர் செய்துவரும் சில தலைவர்கள் பற்றிப் பார்ப்போம்.

2
திருமாவளவன்

திருமாவளவன் – சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்

அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தில் பிறந்தவர் திருமாவளவன். சென்னை மாநிலக் கல்லூரியில் வேதியியல் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ குற்றவியல், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர், அண்மையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மதுரை அரசு தடயவியல் துறையில் அறிவியல் உதவியாளராகப் பணியாற்றிய இவர் `தலித் பேந்தர்ஸ்' அமைப்பில் இணைந்து செயலாற்றினார். அந்த இயக்கத்தின் தலைவராக இருந்த வழக்கறிஞர் மலைச்சாமியின் மறைவுக்கு நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், `நீங்களே இந்த அமைப்பிற்குத் தலைமையேற்க வேண்டும்' என்று வற்புறுத்த அதை ஏற்று தலைவரானார். அரசுப் பணியில் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து பாடுபட்டார். இதையடுத்து 1992-ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைத் தொடங்கினார். காலப்போக்கில், தன் அரசியல் தத்துவமான தமிழ்த்தேசிய வழியில் தனது தந்தைக்கே `தொல்காப்பியன்' என்று பெயர் சூட்டினார். இயக்கப் பணிகளுக்குத் தடையாக இருக்கும் என்பதால், இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. அத்துடன் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்ததால், அரசுப் பணியையும் உதறித் தள்ளினார். 13 வயதில் பொதுவாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட திருமாவளவனுக்கு தற்போது வயது 56.

3
பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த அளத்தங்கரை கிராமத்தில் பிறந்தவர் பொன்.ராதாகிருஷ்ணன். சட்டக்கல்லூரியில் படிக்கும்போதே இந்து இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் உதவியாளராக சில ஆண்டுகள் இருந்தார். பின்னர், சொந்த ஊருக்கே திரும்பியவர் பி.ஜே.பி.யில் இணைந்து மாவட்டத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், பி.ஜே.பி மாநிலத் தலைவர் என ஜெட் வேகத்தில் உயர்ந்தார். குமரி மாவட்ட பாரதிய ஜனதாவை தன் கண்ணசைவில் வைத்திருக்கிறார். மத்திய அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் கட்சிப்பணியில் மும்முரமாக இருப்பார். அவரது கொள்கைப் பிடிப்பு குறித்து அவரது உறவினர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் அவரது திருமணம் குறித்தோ, தனிப்பட்ட விஷயங்களிலோ யாரும் தலையிடுவது இல்லை. `நான் அடிப்படையில் ஒரு களப்பணியாளர். பதவி இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் இயக்கத்தை வளர்ப்பதே எனது பணி' என்று அடிக்கடி சொல்வார் பொன்னார்.

4
கே.டி.ராஜேந்திரபாலாஜி

கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழக பால்வளத்துறை அமைச்சர்

தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியலுக்கும், சர்ச்சையான பேச்சுக்கும் பெயர் பெற்றவர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. திட்டமிட்டுப் பேசுகிறாரா அல்லது யதார்த்தமாகப் பேசுகிறாரா என்று தெரியாது. ஆனால் இவர் ஏதாவது பேசினாலே அது சர்ச்சையாகிவிடுகிறது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர், ஆரம்பகாலத்தில் இருந்தே அ.தி.மு.கவில் இருந்து வருகிறார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். தொடக்க காலத்திலேயே அரசியலில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்று நினைத்த அவர் `ராஜேந்திரன்' என்ற தன் பெயரை ஜோதிடர்களின் ஆலோசனைப்படி `ராஜேந்திரபாலாஜி' என மாற்றிக் கொண்டார். அரசியல் மற்றும் பொருளாதார பின்புலம் எதுவும் இல்லாமல் அரசியலுக்கு வந்தவர். இன்னும் சொல்லப்போனால் கட்சி கூட்டத்தில் துண்டறிக்கை விநியோகிப்பது, மைக்கில் பேசுவது என மிக சாதாரணத் தொண்டனாக இருந்து அனைத்து வேலைகளையும் செய்தவர். திருத்தங்கல் நகராட்சி கவுன்சிலர் பதவி தொடங்கி இன்று அமைச்சர் வரை வளர்ந்துள்ளார். அரசியலிலேயே தன் சிந்தனைகளை செலுத்தியதால் அவருக்கு திருமணத்தில் நாட்டமில்லாமல் போய்விட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவார். ஆனால், அடிமட்டத்தில் இருந்து வந்தவர் என்பதால் உதவி என்று யார் வந்தாலும் கணக்குப் பார்க்காமல் செலவழிப்பார்.

5
பாலபாரதி

பாலபாரதி, முன்னாள் எம்.எல்.ஏ

கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர், பாலபாரதி. இரண்டுதடவை திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர். ஒருமுறை எம்.எல்.ஏ வாய்ப்பு கிடைத்தாலே வாழ்க்கை ஏற்றம் கண்டதாக எண்ணி கெத்து காட்டும் நபர்களுக்கு மத்தியில், இரண்டு தடவை எம்.எல்.ஏ பதவி வகித்தாலும், எளிமையான சுபாவம் கொண்டவர். மக்கள் உரிமைக்கான போராட்டங்கள் எங்கே நடந்தாலும், அதில் கலந்து கொண்டு போராடுபவர். அந்த குணம் எட்டுவழிச்சாலை வரை தொடர்கிறது. தற்போது இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)யின் சட்டமன்றக்குழுத் தலைவராகவும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் உள்ளார். சரியான கருத்துகளை எப்போதும், யாருக்கும் பயப்படாமல் தெரிவிக்கக்கூடியவர். தற்போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளராகவும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

6
ஜோதிமணி

ஜோதிமணி, கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள பெரியதிருமங்கலம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி. எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், படிப்பை மட்டுமே பிரதானமாக நினைத்திருந்தார். பி.எஸ்சி கணிதம், எம்.ஏ, எம்.பில் ஆகிய பட்டப்படிப்புகள் படித்துள்ளார். கல்லூரி காலத்திலேயே அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்ட அவர், கடந்த 1996-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, கூடலூர் மேற்குப் பகுதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரானார். 2001-ல் மீண்டும் ஒன்றியக் குழு உறுப்பினரானார். அதன்பிறகு, ப.சிதம்பரம் ஆரம்பித்த ஜனநாயகப் பேரவையில் கரூர் மாவட்டத் தலைவரானார். ப.சிதம்பரம் மீண்டும் காங்கிரசில் இணைந்ததும் ஜோதிமணியும் தன்னை இணைத்துக் கொண்டார். கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பதவி கிடைத்தது.

உலகம் முழுக்க உள்ள இளம் அரசியல்வாதிகளுக்காக அமெரிக்கக் கவுன்சில் சார்பில் ஆண்டுதோறும் வெள்ளி மாளிகையில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். அதில், இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பை கடந்த 2006-ம் ஆண்டு பெற்றார் ஜோதிமணி. இளைஞர் காங்கிரசை கையில் எடுத்த ராகுல்காந்தி நடத்திய நேர்காணலில் ஜோதிமணி வெளிப்படையாகப் பேசி, ராகுல்காந்தியை கவர்ந்தார். இதனால், இளைஞர் காங்கிரசின் தேசியச் செயலாளரானார். பல்வேறு மாநிலங்களில் உள்கட்சி தேர்தல் மற்றும் தேர்தல்களில் பொறுப்பாளராக்கப்பட்டார். இப்போது கரூர் நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்கிறார்.

இவர் நல்ல எழுத்தாளரும்கூட. `இந்திரா' என்ற பெயரில் `ஒற்றைவாசனை' என்ற சிறுகதைத் தொகுப்பையும், `சித்திரக்கூடு' என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார். ஒன்றியக் கவுன்சிலர்களாக இருமுறை பதவி வகித்தபோது தான் எதிர்கொண்ட கள அனுபவங்களை வைத்து, 'நீர் பிறக்கும்முன்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இறந்த தன் தாய்க்கு 'நான்தான் கொள்ளி போடுவேன்' என்று பிடிவாதமாக இருந்து இறுதிச்சடங்குகளைச் செய்தார். தாய், இவரை திருமணம் செய்துகொள்ளச் சொன்னபோதும் உறுதியாக மறுத்துவிட்டார். எம்.பி ஆவதற்கு முன்பே 'கற்க கசடற' என்கிற பெயரில் கரூர் மாவட்ட இளைஞர்களுக்கு கல்விசார்ந்த பல்வேறு முயற்சிகளை வெளியே தெரியாமல் செய்து வருவதில் ஓர் சமூக சேவகியும்கூட..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு