Published:Updated:

`15,344 சமூக வலைதள பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை; 108 பேர் கைது!’ - உ.பி-யில் போலீஸ் அதிரடி

போராட்டக்களத்தில் வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்ட 164 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 879 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதள பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உ.பி போலீஸார் அறிவித்துள்ளனர்.

உ.பி போலீஸ்
உ.பி போலீஸ்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாள்களாக போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது. கலவரம், வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு நடந்ததில் இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சமூக வலைதளங்களில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உத்தரப் பிரதேச காவல் துறையினர் கூறியுள்ளனர்.

வன்முறை
வன்முறை

இதுதொடர்பாக போலீஸார், ``போராட்டக்களத்தில் வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்ட 164 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 879 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன்முறைகளோடு தொடர்புடைய 5,312 நபர்கள் மீது தடுப்புக்காவல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர். மேலும், ``288 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். அதில், 61 பேர் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்தவர்கள்” என்றும் கூறியுள்ளனர்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டக்காரர்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட 15,344 பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில், 6,612 ட்விட்டர் பதிவுகளும் 8,577 முகநூல் பதிவுகளும் 155 யூடியூப் விடியோக்களும் அடங்கும். சட்டத்துக்கு எதிராக மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய பதிவுகளைப் பகிர்ந்த மற்றும் பதிவு செய்த 76 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளதாகவும் 108 பேர் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

வன்முறைகள் தொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ``போராட்டத்தில் வன்முறையைத் தூண்டுபவர்கள் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துபவர்களின் சொந்த உடைமைகள் பறிக்கப்பட்டு, அரசின் இழப்பைச் சரிசெய்ய அவை ஏலத்தில் விடப்படும்” என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சிசிடிவி வீடியோக்கள் சேகரிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.