அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

பட்டாசு மாமூல்... பத்து லகரம்... மலைக்‘கோட்டை’ அதிகாரியின் சேட்டை!

மலைக்‘கோட்டை’ ஸ்டேஷனின் அதிகாரி கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் விழிபிதுங்கிவிட்டார்கள் பட்டாசுக் கடைக்காரர்கள். தீபாவளிக்கு நான்கு நாள்களுக்கு முன்பே ஒவ்வொரு பட்டாசுக் கடையிலிருந்தும் தலா 10,000 ரூபாய் பணம், காஸ்ட்லியான பட்டாசுகள் கொடுக்க வேண்டும் என்று அவரது நச்சரிப்பு தாங்க முடியவில்லையாம். இதையெல்லாம் வசூல் செய்து கொடுத்தது வட்டிக்கடைக்காரர் ஒருவர்தானாம். கடந்த வாரம் மட்டுமே இப்படி வசூலித்த சுமார் பத்து லகரங்களை ஸ்டேஷனுக்குக் கூட பங்கு தராமல், மேலதிகாரி ஒருவருடன் பங்கிட்டுக்கொண்டாராம். இதெல்லாம் எங்கே போய் முடியும் என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள் ஸ்டேஷனின் சக காக்கிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

பிக்-அப் அண்ட் டிராப்... கரூரில் களைகட்டும் மது விற்பனை!

கரூர் மாவட்டத்தின் தோகை விரித்தாடும் காவல் நிலையத்தில் எஸ்.ஐ ஒருவரே ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவரோடு கூட்டணி அமைத்து மூன்று கிராமங்களில் சந்துக்கடை ஒயின் ஷாப் நடத்துகிறார். 24 மணி நேரமும் ‘பெக்’ கணக்கில் விற்பனை நடப்பதால், குடிமகன்கள் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சாரை சாரையாக அந்த கிராமங்களுக்கு வந்துவிடுகிறார்கள். சமீப நாள்களாகத் தொழிலில் போட்டி அதிகரித்துவிட்டதால், குடிமகன்களுக்கு ‘டூ வீலர்’ சர்வீஸும் களைகட்டுகிறதாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்தால், ஸ்பாட்டுக்கு வந்து பிக்-அப் செய்பவர்கள், சரக்கடித்த பிறகு பிக்-அப் செய்த இடத்திலேயே டிராப்பும் செய்துவிடுகிறார்களாம். சமீபத்தில் அதிகாரிகள் சிலர் இந்த சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க முயன்றபோது, “சார், தீபாவளிக்கு வந்த அந்தப் பெரிய கவர் நம்மளோடதுதான்... அதையும் மீறி ஆக்‌ஷன் எடுத்தா ‘சார்’ கோவிச்சுக்குவாரு” என்று மேலிடத்து பிரமுகரின் பெயரைச் சொல்லி அதிரவைக்கிறதாம் எஸ்.ஐ. தரப்பு!

ஜிபேயில் தட்சணை... பார்டர் காக்கியின் பலே வசூல்!

‘பார்டர்’ மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் எஸ்.ஐ ஒருவர், புதுச்சேரியைச் சேர்ந்தவர். பெரும்பாலும் அவர் காவல் நிலையத்தில் இருப்பதில்லை. வீட்டிலிருந்தே ஸ்டேஷனுக்கு வரும் பஞ்சாயத்துகளை போனில் டீல் செய்பவர், தனக்கு நெருக்கமானவர்களின் ஜிபேயில் தட்சணையை செலுத்திவிடச் சொல்கிறாராம். இதனால், கடந்த ஓராண்டுக்காலத்தில் சொற்ப எண்ணிக்கையில்கூட வழக்குகள் பதிவு செய்யப்படவில்லையாம். சமீபத்தில் இங்கு சில வழக்குகளைச் சரியாக விசாரணை செய்யாததால் டிரைவர் ஒருவர், கொத்தனார் ஒருவர், ஃபைனான்ஸியர் ஒருவர் உட்பட ஏழு பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கூறி கிடுகிடுக்கவைக்கிறார்கள் சக மகளிர் காக்கிகள்!

காணாமல்போன சிலைகள்... தேனி எஸ்.பி அலுவலகத்தில் அரங்கேறிய பூஜை!

தேனி அருகே, அரண்மனைப்புதூரில் வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயிலில் எட்டு ஐம்பொன் சிலைகள் மற்றும் ஒரு பலிபீடம் திருட்டுப்போயின. இதில் தொடர்புடைய பெரியகுளத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரைக் கைதுசெய்து, அவரிடமிருந்து ஐம்பொன் சிலைகளை போலீஸார் மீட்டனர். மற்றொருவர் தேனி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மீட்கப்பட்ட சிலைகளை போலீஸார் காட்சிப்படுத்தியபோது, அவற்றை ஒரு போலீஸ் படையே தூக்க முடியாமல் தூக்கிவந்து வைத்திருக்கிறது. இதைப் பார்த்த செய்தியாளர்கள் இவ்வளவு கனமான சிலைகளை வெறும் இரண்டு பேர் மட்டும் எப்படி ஒரு பைக்கில் வைத்து திருடிச் சென்றிருக்க முடியும் என்று கேட்டபோது போலீஸ் தரப்பிலிருந்து பதிலளிக்க முடியவில்லை. இதையடுத்து, மீட்கப்பட்ட சிலைகளுக்கு எஸ்.பி அலுவலகத்தில்வைத்தே மந்திரங்கள் ஓதி மாலை அணிவித்து பூஜைகள் செய்தனர் கோயில் பூசாரிகள். எஸ்.பி அலுவலகத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது!

ஜூனியர் வாக்கி டாக்கி

கமகமக்கும் பிரியாணி... ஊட்டியில் டூட்டியை மறந்த காக்கிகள்!

வாகன நெரிசல் அதிகம் இருக்கும் ஊட்டி கமர்ஷியல் சாலை ஓரத்தில் ஊட்டி முன்னாள் நகர் மன்றத் தலைவரும், அ.தி.மு.க நிர்வாகியுமான கோபாலகிருஷ்ணனின் அசைவ ஹோட்டல் ஒன்று இருக்கிறது. பிரியாணிக்குப் பெயர்பெற்ற இங்கு ஊட்டியின் காக்கிகள் அடிக்கடி வட்டமடிப்பது வாடிக்கை. குப்பைத்தொட்டி முதல் நடைபாதை வரை ஆக்கிரமித்த ஹோட்டல் தரப்பு ஹோட்டலின் முன்புறம் உள்ள நடைபாதையை டூ வீலர் பார்க்கிங்காக மாற்றியிருக்கிறார்கள். இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால், “ஊட்டிலயே நல்ல பிரியாணி கிடைக்குறது அந்த ஒரு கடைதான்... பார்க்கிங் ஏரியாவை தூக்கிட்டா டூரிஸ்ட்டுங்கதான் பாதிப்பு அடைவாங்க” என்கிற வித்தியாசமான காரணத்தைச் சொல்லி புகார்தாரர்களின் வாயடைத்திருக்கிறார்கள் ஊட்டி காக்கிகள்! “பிரியாணிக்காக போலீஸ் மானத்தையே அடமானம் வெச்சுட்டாங்களே” என்று புலம்புகிறார்கள் பொதுமக்கள்.