Published:Updated:

`எழுவர் விடுதலை’ வைகோ... `மதுவிலக்கு’ ராமதாஸ்! - முதல்வருக்கு அடுத்தடுத்த கோரிக்கைகள்!

வைகோ, ராமதாஸ்
வைகோ, ராமதாஸ்

மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மனிதவளம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால், தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.4,18,379 கோடி அதிகரிக்கும்.

புதிதாக முதல்வராகப் பொறுப்பை ஏற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பலதரப்பட்ட கோரிக்கைகள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பல்லாண்டுகளாகச் சிறைத் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல், முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் குரல் எழுப்பியுள்ளார்.

"எழுவர் விடுதலை"குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

“தவறு செய்யாமலேயே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனைக் கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்துவருகின்றனர்.

எழுவர் விடுதலை
எழுவர் விடுதலை

அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவதுபோல் போட்டுவிட்டார்.

இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்து கேட்டதாகவும், மத்திய அரசு அதற்குத் தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்திவந்தனர். ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கெனவே திமுக வலியுறுத்திவருகிறது.

எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்குமாறு மதிமுக சார்பில் அன்போடு வேண்டுகிறேன்.”

இப்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

`முழு மதுவிலக்கு’ குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

"ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு பெரும் காரணமாக இருப்பவை மதுக்கடைகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இப்போது மதுக்கடைகள் மூடப்படவிருப்பதால், அடுத்த சில வாரங்களில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வரக்கூடும்.

மதுக்கடைகள் மூடப்படுவது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக மட்டும் இருந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான தொடக்கமாக அமைய வேண்டும்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

மதுக்கடைகள் மூடப்படவுள்ள அடுத்த இரு வாரங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான காலமாக அமையும். மது அரக்கனின் ஆதிக்கத்தால் நடந்த குடும்ப வன்முறைகள் முடிவுக்கு வரக்கூடும்.

கொரோனா உதவியாக தமிழக அரசு வழங்கவுள்ள ரூ.2,000 மதுக்கடைகள் வழியாக மீண்டும் அரசாங்கத்துக்கே செல்லாமல், ஏழைக் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பயன்படும். இவை அனைத்தும் மதுக்கடை மூடலின் மகிழ்ச்சிகள்.

மற்றொருபுறம் குடும்பத்தை மறந்து குடி, உடல்நலக்கேடு என சீரழிந்துகொண்டிருந்த பலர் ஊரடங்கின் பயனாக மதுவை மறந்து குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பர். இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பம். இதற்கு ஒரே தீர்வு ஊரடங்குக்காக மூடப்படும் மதுக்கடைகள் மூடப்பட்டவையாகவே இருப்பதுதான்.

மதுக்கடைகள் மூடப்பட்டால் தமிழக அரசின் வருமானம் போய்விடும் என்று கவலைப்படத் தேவை இல்லை. தமிழக அரசின் இன்றைய ஆண்டு வருமானத்துக்கு இணையான தொகையை வரியில்லா வருவாய் ஆதாரங்களின் மூலம் ஈட்ட முடியும்.

தமிழ்நாட்டின் மனிதவளம் அதன் முழுத்திறனையும் வெளிப்படுத்தினால், தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு குறைந்தபட்சம் 20% உயரும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டின்படி, 2020-21-ம் நிதியாண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ. 20,91,896 கோடி.

மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மனிதவளம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால், தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.4 ,18,379 கோடி அதிகரிக்கும். இதிலிருந்து, தமிழகத்துக்குக் கிடைக்கும் வருவாய், மது வணிகத்தால் கிடைக்கும் வருவாயைவிட அதிகமாக இருக்கும். எனவே, வருவாய் இழப்பு குறித்த கவலை வேண்டாம்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்தின் முகமே மாறிவிடும். இளைய தலைமுறையினர் மது அரக்கனின் பிடியிலிருந்து மீள்வார்கள். மக்கள் நோயின்றி வாழ்வார்கள். இவ்வளவு நன்மைகளை வழங்கும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஒற்றைக் கையெழுத்து போதுமானது.

எனவே, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தமிழகத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடுவதற்கு வசதியாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு ஆணையிட வேண்டும்.”

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் கிடக்கும் இந்தக் கோரிக்கைகளை புதிய அரசுக்கு வலியுறுத்தும்விதமாக இவர்களின் அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு