Published:Updated:

`கறார்’ வைகோ முதல் அமித் ஷாவைச் சந்தித்த ரெளடி அரெஸ்ட் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

``அ.தி.மு.க அலுவலகம் வரை செல்கிறேன். வாட்ஸ்அப் பாரும்...’’ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தார் கழுகார்.

ஐ.பி.எஸ் அழுத்தம்...
போக்சோவிலிருந்து தப்பிய வாரிசு!

சமீபத்தில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளுடன் மயிலை அ.தி.மு.க பிரமுகர் ஒருவரின் பிரகாசமான வாரிசு ரயிலில் சென்றிருக்கிறார். சிறுமிகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைக் கைதுசெய்த போலீஸார், சிறுமிகளையும் மீட்டனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Representational Image

இந்தப் புகாரில், வாரிசு மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்ய போலீஸார் முடிவுசெய்தார்கள். ஆனால், சென்னை கமிஷனர் அலுவலகத்திலிருந்து பேசிய ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், வாரிசுமீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கூறிவிட்டதால், சிறுமிகளைக் கடத்தியதாக மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறது காக்கிகளின் வட்டாரம்.

`இரும்பு’க்கரங்கள், எறும்புகளுக்கு அஞ்சுவது ஏன்?

ஐ.ஏ.எஸ் அதிகாரி கணவரின் கைங்கர்யம்
திண்டாடும் ரேஷன் ஊழியர்கள்!

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க, உரியவர்களின் கைரேகையைப் பதிவது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 400 கோடி ரூபாயில் டிஜிட்டல் இயந்திரங்கள் வாங்கப்பட்டு, நியாயவிலைக் கடைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இயந்திரங்களில் ஏகத்துக்கும் தொழில்நுட்பப் பிரச்னைகள் ஏற்படுவதால், நாள் ஒன்றுக்கு நாற்பது நபர்களின் கைரேகையைப் பதிவுசெய்வதற்குள் ஊழியர்கள் திண்டாடிவிடுகிறார்கள். பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் கணவர்தான் இந்த இயந்திரங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை எடுத்திருக்கிறாராம்.

நியாயவிலைக் கடை
நியாயவிலைக் கடை

சர்வர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத்தான் இயந்திரங்கள் பழுதாகி பாதியிலேயே முடங்கிவிடுவதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. ஆனால், டிஜிட்டல் இயந்திரமே கோளாறு என்று எதிர்க்கட்சிகள் இதைப் பிரச்னையாகக் கிளப்பிவிட ஆயத்தமாகின்றன.

சர்வர் கோளாறு இல்லங்க... சகலமும் கோளாறு!

துடுக்காகப் பேசிய உமரி சங்கர்...
அடித்து நொறுக்கப்பட்ட கார்!

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காட்டைச் சேர்ந்தவர் உமரி சங்கர். தி.மு.க மாநில மாணவரணி துணைச் செயலாளராக இருக்கும் இவர், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு வலதுகரமாகவும் செயல்படுகிறார். சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் பேசிய உமரி சங்கர், ஶ்ரீவைகுண்டம் அ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதன், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரை ஒருமையில் விளாசித்தள்ளினார். ``நாடார் சமுதாயத்துல பண்ணையார்னா, 4,999 கோடி ரூபாய் சொத்துவெச்சிருக்கிற எங்க அண்ணாச்சி அனிதா ராதாகிருஷ்ணன்தான்.

உமரி சங்கர்
உமரி சங்கர்

வேற எவனும் பண்ணையார் கிடையாது’’ என்று முழக்கமிட்டு, அனிதாவுக்கு எதிரணியான பனங்காட்டு மக்கள் கழகத்தின் தலைவர் சுபாஷ் பண்ணையாரையும் தாக்கிப் பேசினார். கூட்டம் நடைபெற்ற மறுநாள் இரவு உமரி சங்கரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக்குள் அடித்து நொறுக்கப்பட்டதால், தூத்துக்குடி அரசியலில் தகிக்கிறது.

தூத்துக்குடி... நடக்குது அடிதடி!

``நானே ஏமாந்துட்டேன்...’’
புலம்பும் மார்க்கெட் பிரமுகர்!

நீலகிரி மாவட்டத்தில் ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகிக்கு வலதுகரமாக இருந்த பிரமுகர் ஒருவர், அங்கிருக்கும் மார்க்கெட் தொடர்பான சங்கத்தில் முக்கியப் பொறுப்புவகிக்கிறார். அவர் நூற்றுக்கணக்கான சிறு வணிகர்களிடம், கூட்டுறவு வளாகத்தில் கடைவைக்க மாவட்ட நிர்வாகி மூலம் அனுமதி வாங்கித்தருவதாகக் கூறி, பல லட்சங்களை வாங்கியிருக்கிறாராம்.

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

இந்தநிலையில் மாவட்ட நிர்வாகியின் பதவி பறிக்கப்பட, பணம் கொடுத்தவர்கள் வலதுகரத்தை மொய்த்துவருகிறார்களாம். `நானே நகரச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டு அவருகிட்ட பல லட்சத்தைக் கொடுத்து மாட்டிக்கிட்டேன்’ என்று அவர்களிடம் புலம்புகிறாராம் வலதுகரம்.

`புத்தி’ கெட்டுப்போச்சுன்னு சொல்லுங்க!

``தோத்தா ரெண்டு பேருக்கும் அவமானம்!’’
கரூரில் சமூகப் பெரியவர்கள் பஞ்சாயத்து...

கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி, வரும் சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறாராம். இதையடுத்து, கரூர் சிட்டிங் எம்.எல்.ஏ-வான அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து சமூகத் தலைவர்கள் சிலர் மூலமாக செந்தில் பாலாஜி தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

அந்தப் பெரியவர்கள் செந்தில் பாலாஜி தரப்பினரிடம், `நம்ம சமூகத்தைச் சேர்ந்த ரெண்டு பேரும் அவரவர் கட்சியில் மாவட்டச் செயலாளரா இருக்கீங்க. யார் தோத்தாலும், உங்க ரெண்டு பேருக்கும்தான் அவமானம். அதனால, நீங்க பழையபடி அரவக்குறிச்சி தொகுதியிலேயே நில்லுங்க. அமைச்சர் கரூர்ல நிக்கட்டும். ரெண்டு பேரையும் நாங்க ஜெயிக்கவெக்கிறோம்’ என்று `பஞ்சாயத்து’ பேசினார்கள் என்கிறார்கள். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு உடன்படவில்லை என்பதால், அமைச்சர் தரப்பு அப்செட் என்கிறார்கள்.

நேருக்கு நேர்... இது கரூர் ஜோர்!

ஆசைப்பட்ட `ஆனந்த’ வாரிசு...
உடன்படாத தலைமை!

தி.மு.க-வில் பத்து ஊராட்சிகளுக்கு மேலிருக்கும் ஒன்றியங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவருகிறார்கள். வட மாவட்டங்கள் இரண்டில் இப்படிப் பிரிக்கப்பட்ட புதிய ஒன்றியங்களுக்கு, கட்சியில் முக்கிய பொறுப்பிலிருப்பவரின் ‘ஆனந்தமான’ வாரிசு, தனக்கு வேண்டப்பட்ட நபர்களைப் பொறுப்பாளர்களாக நியமிக்கவைத்திருக்கிறாராம்.

தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்
தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்

அதையும் சும்மா செய்யவில்லை. ஒவ்வோர் ஒன்றியப் பொறுப்புக்கும் 15 ஸ்மால் ஸ்வீட் பாக்ஸ்கள் கைமாறியிருக்கின்றனவாம். இது ஒருபுறமிருக்க... மாநில மாணவரணிச் செயலாளர் பதவிமீதும் அந்த வாரிசுக்கு விருப்பமாம். தனது ஆசையை தந்தையிடம் வாரிசு சொல்ல... வாரிசின் ஆசையைச் சமயம் பார்த்து கட்சித் தலைமையிடம் அப்பா சொல்ல... அங்கிருந்து நெகட்டிவ் ரியாக்‌ஷன் வந்திருக்கிறதாம்.

இதில், அப்பாவும் மகனும் அப்செட். தொரைக்கு ஆசையைப் பாரேன்!

தொகுதி பங்கீடு...
கறார் வைகோ!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ம.தி.மு.க-வுக்கு இரட்டை இலக்கத்தில் சீட் ஒதுக்க வேண்டும் என்று வைகோ விரும்புகிறாராம். தன் மகன் துரை வைகோவை சிவகாசியில் களமிறக்கும் முடிவிலும் வைகோ இருப்பதாகக் கூறப்படுகிறது.

வைகோ
வைகோ

ம.தி.மு.க-வுக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதிகளைப் பட்டியலிட்டிருக்கும் வைகோ, சீட் பங்கீட்டில், தான் விரும்பும் ஐந்து தொகுதியையாவது கண்டிப்பாகப் பெற்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி அமைந்துள்ள சங்கரன்கோவில் தொகுதியும் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கிறதாம்.

எல்லாம் சரி... பம்பரம் விடறதுக்கு ‘சாட்டை’ வெச்சிருக்கீங்களா வைகோ சார்?!

``நீங்க கேளுங்க...’’
பா.ஜ.க-வை உசுப்பும் செல்லூர் ராஜூ

செளராஷ்டிரா சமுதாய மக்கள் அதிகமுள்ள மதுரை தெற்கு தொகுதியில், அதே சமூகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.சரவணன் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இந்தத் தொகுதி, மாநகரச் செயலாளர் செல்லூர் ராஜூவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், எஸ்.எஸ்.சரவணன் செல்லூர் ராஜூவை மதிப்பதில்லை என்கிறார்கள். ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளரான சரவணன், செல்லூர் ராஜூ நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லையாம்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அதேநேரம், மதுரை புறநகர் மாவட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் நடத்தும் நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்கிறாராம். இதனால் சரவணன்மீது ஆத்திரத்திலிருக்கும் செல்லூர் ராஜூ தரப்பு, பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவரான மஹாலட்சுமி ஆட்களிடம், ``பா.ஜ.க சார்பில் போட்டியிட மதுரை தெற்குத் தொகுதியைக் கேளுங்க. நீங்களும் செளராஷ்டிரா சமூகம்தானே’’ என்று உசுப்பிவிடுவதாகக் கூறப்படுகிறது. இந்த கோஷ்டி தகராறில், அ.தி.மு.க-வுக்கு சாதகமான ஒரு தொகுதி கையைவிட்டுப் போய்விடுமோ என்கிற பதற்றத்தில் இருக்கிறது கட்சித் தலைமை.

விஞ்ஞானி இப்போ கங்காணி!

அமித் ஷாவைச் சந்தித்த ரெளடி...
காப்பு மாட்டிய காவல்துறை!

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் ரௌடிகளின் பட்டியலில் இருப்பவர் குட்டி என்கிற சிதம்பரம். போலீஸாரின் பிடி இறுகுவதை உணர்ந்த குட்டி, பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் மூலமாக, சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தார். கட்சியில் தஞ்சை வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் பொறுப்பும் குட்டிக்கு வழங்கப்பட்டது. போலீஸாரும் விடாமல் துரத்தியதால், நவம்பர் 21-ம் தேதி சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சில தலைவர்கள் மூலமாக குட்டி சந்தித்தார்.

குட்டி
குட்டி

அப்போது, `தஞ்சாவூர் மாவட்டத்தில் செல்வாக்குள்ள மனிதர்’ என்று குட்டியை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இனி போலீஸால் குடைச்சல் இருக்காது என்று குட்டி நிம்மதியடைந்த நிலையில், சமீபத்தில் தஞ்சாவூர் போலீஸார் அவரைக் கைதுசெய்துவிட்டார்கள். அவர்மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்திருக்கிறது. அமித் ஷாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர் குண்டாஸில் கைதாகியிருப்பது டெல்டாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

உயர உயரப் பறந்தாலும் உள்ளூர் ரெளடி `டான்’ ஆக முடியாது!

பெண் ஐ.பி.எஸ் அதிகாரி டம்மி!

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் கோலோச்சிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி டம்மியாக்கப்பட்டிருக்கிறாராம். சென்னையிலிருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களைக் கட்டுக்குள்வைத்திருந்த அந்த ஐ.பி.எஸ் அதிகாரிமீது, வரிசைகட்டிப் புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கை என்கிறார்கள். பெண்களை ஏமாற்றிய புகாரில் கைதான நாகர்கோவில் காசி தொடர்பான புகாரை, முதன்முதலில் சென்னையில்தான் ஒரு பெண் மருத்துவர் கொடுத்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட காசி
கைது செய்யப்பட்ட காசி

கொரோனாவைக் காரணம் காட்டி அந்தப் புகார் விசாரணை ஏதுமில்லாமல் கிடப்பில் போடப்பட்டதால்தான், நாகர்கோவிலில் புகார் கொடுக்கப்பட்டு காசி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டதாம். அதேபோல, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் தொழிலதிபர் ஒருவரின் புகாருக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், மகளிர் காவல் நிலையங்கள், பழையபடி சட்டம் ஒழுங்கு போலீஸாரின் கீழ் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறதாம்.

`மம்மி’ உருவாக்கிய ஸ்டேஷன்களையே `டம்மி’ ஆக்கிடாங்களே!

கேன்சலான பணி நியமனம்...
அப்செட்டில் செல்லூர் ராஜூ!

ரேஷன் கடைகளில் எடையாளர், விற்பனையாளர் பதவிகளுக்காக சுமார் 1,600 இடங்களை நிரப்ப அமைச்சர் செல்லூர் ராஜூவின் கூட்டுறவுத்துறையில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, 70,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தனவாம். சில ஊர்களில் நேர்காணலும் நடந்து முடிந்துவிட்டன. இந்தநிலையில், முதல்வரிடம் பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், `தேர்தல் நேரத்தில் இந்த இடங்களை அவசியம் நிரப்ப வேண்டுமா... வேலை கிடைக்காத பல ஆயிரம் குடும்பங்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும்’ என்றிருக்கிறார். இது போதாதென்று, இந்தப் பதவிகளுக்காகப் பேரங்களும் நடந்தனவாம்.

அமைச்சர் உதயகுமார்
அமைச்சர் உதயகுமார்

இதை மோப்பம் பிடித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பு, இதன் மூலமாக செல்லூர் ராஜூ தரப்பு வளமாகிவிடக் கூடாது என்று கணக்கு போட்டு, சில அமைச்சர்கள் மூலமாக முதல்வரை மூளைச்சலவை செய்ததாம். இரு பக்கங்களிலிருந்தும் வந்த அழுத்தத்தால் நியமன அறிவிப்பையே ரத்துசெய்துவிட்டார் முதல்வர். இதனால், செல்லூர் ராஜூ தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறதாம்.

செல்லூர் ராஜூவை செல்லாத ராஜூவாக்கிட்டீங்களேப்பு!

அடுத்த கட்டுரைக்கு