Published:Updated:

அமைச்சருக்குக் கறுப்புக்கொடி காட்ட முயன்ற மதிமுக நிர்வாகியை நீக்கிய வைகோ - பின்னணி என்ன?

அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறக்க வருவதை விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து அவருக்குக் கறுப்புக்கொடி காட்ட ஏற்பாடுகள் செய்தோம்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அழகாபுரி கொடகனாறு அணையிலிருந்து வலது கால்வாய் வழியாகத் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நவம்பர் 22-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, தண்ணீர் திறக்கச் சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்துவருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், கொடகனாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமியை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்தனர். விவசாயிகள் சங்கத் தலைவராக இருக்கும் ராமசாமி, ம.தி.மு.க-வில் வேடசந்தூர் முன்னாள் ஒன்றியச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகவும் கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார்.

ராமசாமி
ராமசாமி

இது குறித்து ராமசாமியிடம் பேசினோம். ``கொடகனாறு அணையில் தண்ணீர் திறக்கப்படவில்லை எனப் பல ஆண்டுகளாகப் போராடிவருகிறேன். கொடகனாறு அருகே வள்ளிபட்டி, கூம்பூர், வடும்பாடி, ஆர்.கோம்பை ஆகிய பகுதிகளில் மணல் திருட்டு தொடர்ச்சியாக நடக்கிறது. இதற்கிடையே ஐ.பெரியசாமியிடம் கொடகனாற்றில் தண்ணீர் திறப்பது குறித்து பலமுறை முறையிட்டோம். இதற்காக உண்ணாவிரதம் இருந்தபோது அவர் எங்களுக்கு ஆதரவாகப் பேசினார். ஆனால் சில காலம் கழித்து `கலைஞர் மு.கருணாநிதி இந்த அணையைத் தெரியாமல் கட்டிவிட்டார். ஆயக்கட்டு இல்லை என்பதால் அணையில் தண்ணீர் திறப்புக்குச் சாத்தியமில்லை' என்றார்.

அவர் தண்ணீர் திறக்க வருவதை விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து அவருக்கு கறுப்புக்கொடி காட்ட ஏற்பாடுகள் செய்தோம். இதையறிந்த போலீஸார் முன்கூட்டியே என்னைக் கைதுசெய்து ஸ்டேஷனில் வைத்துவிட்டனர்.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

ம.தி.மு.க திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் செல்வராகவன், ஐ.பெரியசாமிக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவர். நான் நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பாகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வேடசந்தூர் ஒன்றியச் செயலாளராக இருந்த நான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எந்தப் பொறுப்பும் வேண்டாம் என எழுதிக் கொடுத்துவிட்டு சாதாரணத் தொண்டனாக மட்டுமே இருந்தேன். ம.தி.மு.க தொடங்கப்பட்ட காலம் முதல் கட்சியிலிருக்கும் என்னிடம் எந்த விளக்கமும் பெறாமல் கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர்" என்றார்.

தேனி: `கூட்டுறவுத்துறையில் திமுக-வினருக்குப் பதவியா..?' - அமைச்சர் பேச்சுக்கு பாஜக கண்டனம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு