Published:Updated:

`தலைநகரில் தமிழ்க்கொடி!’- டெல்லி அரசின் தமிழ் அகாடமி முயற்சி; வைரமுத்து நன்றி

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த அகாடமியின் தலைவராக டெல்லி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்படுவார்.

தமிழ் மொழியையும், தமிழர்களின் கலாசாரத்தையும் கௌரவிக்கும் வகையில் டெல்லியில் தமிழ் மொழிக்கென தனி அகாடமியை உருவாக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக, டெல்லி துணை முதல்வரும் கலை, கலாசார மற்றும் மொழித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,``நாடெங்கிலுமுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், டெல்லியில் பல்வேறு காரணங்களுக்காகப் பணிபுரிந்துவருகின்றனர். பன்முகத்தன்மைகொண்ட கலாசாரத்துடன் டெல்லி நகரம் இயங்கிவருகிறது. அதிகப்படியான தமிழர்கள் இங்கு வசித்துவருகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நேரத்தில் தலைநகரில் தமிழர்களுக்கென ஒரு பிரத்யேக தளத்தை உருவாக்கி, தமிழர்களின் கலாசாரத்தை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பது அவசியமாக இருக்கிறது. இதன் மூலம் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரம் குறித்த முக்கியத்துவத்தை அறிவார்கள் என்ற நோக்கத்துக்காக இது முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த அகாடமிக்குத் தலைவராக டெல்லி தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்படுவார். டெல்லி தமிழ் அகாடமிக்கென தனி இடம், அலுவலகம் ஆகியவை விரைவில் ஒதுக்கப்படும்.

வைரமுத்து
வைரமுத்து

இந்த அகாடமியின் மூலம் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் பரப்பும் வகையில் கலை நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் தமிழ் மொழியின் கலை, இலக்கியத் தளங்களில் சிறப்பாகச் செயலாற்றிய நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் மற்றும் சன்மானங்கள் வழங்கப்படுவதோடு தமிழ் மொழியின் சிறப்புகளை நாடெங்கிலும் பரப்புவதற்கான அனைத்துவிதமான முயற்சிகளும் இந்த அகாடமியின் மூலம் எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

டெல்லி அரசு எடுத்திருக்கும் இந்தப் பெருமுயற்சிக்கு நன்றி தெரிவித்து கவிஞர் வைரமுத்து, ``இந்தியத் தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாடமி நிறுவியிருக்கும் டெல்லி அரசைப் பாராட்டுகிறேன். முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இருவருக்கும் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். தலைநகரில் பறக்கும் தமிழ்க் கொடிக்குத் தலைவணங்குகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு