Published:Updated:

``தன்னை ஆளாக்கியவருக்கே துரோகம் செய்தவர் வைத்திலிங்கம்” - விளாசும் தங்கமுத்து உறவுகள்; பின்னணி என்ன?

வைத்திலிங்கம்
News
வைத்திலிங்கம்

``வைத்திலிங்கம் தற்போது சென்னையில் இருந்தபடி என்னவெல்லாமோ பேசுகிறார். தஞ்சை மண்ணில் வந்து அவரால் பேச முடியுமா... இங்கு எல்லோருக்கும் உண்மை என்னவென்று தெரியும்." - தங்கமுத்துவின் தம்பியும், தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளருமான ராஜமாணிக்கம்

``தன்னை ஆளாக்கியவருக்கே துரோகம் செய்தவர் வைத்திலிங்கம்” - விளாசும் தங்கமுத்து உறவுகள்; பின்னணி என்ன?

``வைத்திலிங்கம் தற்போது சென்னையில் இருந்தபடி என்னவெல்லாமோ பேசுகிறார். தஞ்சை மண்ணில் வந்து அவரால் பேச முடியுமா... இங்கு எல்லோருக்கும் உண்மை என்னவென்று தெரியும்." - தங்கமுத்துவின் தம்பியும், தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளருமான ராஜமாணிக்கம்

Published:Updated:
வைத்திலிங்கம்
News
வைத்திலிங்கம்

தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களை ஓ.பி.எஸ் மாவட்டச் செயலாளராக நியமனம் செய்திருப்பதாகப் பேசியிருக்கிறார். அத்துடன் அவர் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் ஆகியோரைக் கடும் விமர்சனம் செய்ததும் இரு தரப்பினரிடமும் விவாதத்துக்கு உள்ளாகி, தஞ்சை அ.தி.மு.க வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் நடைபெற்ற அ.தி.மு.க  ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் நடைபெற்ற அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

சசிகலா, `தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க-வை இணைத்துவிடுவேன்’ என்கிறார். எடப்பாடி பழனிசாமி, `இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்கிறார். ஓ.பி.எஸ்., `எடப்பாடி பழனிசாமியைத் தனியாக கட்சி தொடங்கிக்கொள்ளுங்கள்’ என்கிறார். `அவரவர் தலைமையில் இயங்கக்கூடிய கட்சியில் இருந்தபடியே கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க வேண்டும்’ என டி.டி.வி.தினகரன் கூறுகிறார்.

தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர் நினைவுநாளுக்காக அ.ம.மு.க-வினர் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் போட்டோவுடன் ஒன்றிணைவோம், வெற்றிபெறுவோம் என போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இது போன்ற நிகழ்வுகளால் அ.தி.மு.க-வின் முதுகெலும்பு என அனைவராலும் சொல்லப்படும் அடிமட்டத் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அ.ம.மு.க போஸ்டர்
அ.ம.மு.க போஸ்டர்

இந்த நிலையில் வைத்திலிங்கத்திடம் நெருக்கமாக இருந்த பலர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருப்பதுடன், வைத்திலிங்கத்துக்கு எதிராக, தீவிரமாகக் களமாடிவருகின்றனர். குறிப்பாக, வைத்திலிங்கத்தால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-வான மறைந்த தங்கமுத்துவின் குடும்பத்தினர் எடப்பாடி அணியில் இருந்துகொண்டு, வைத்திலிங்கத்துக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.

இது குறித்து மூத்த அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``வைத்திலிங்கம் தங்கமுத்துவால் வளர்க்கப்பட்டவர். சசிகலா குடும்பத்தினர் பரவலாகக் கோலோச்சிய சமயத்தில் அவர்களுக்குப் பணிந்து போகாததால், சசிகலா குடும்பத்தினரின் பார்வை வைத்திலிங்கத்தின் மீது விழுந்தது. அவரும் பெரும் வளர்ச்சியடைந்தார். அத்துடன் துரை.கோவிந்தராஜன், தங்கமுத்து போன்ற சீனியர்களை வைத்திலிங்கம் ஓரங்கட்டினார். அதுவே 2016-ல் வைத்திலிங்கம் தோற்பதற்குக் காரணமாக அமைந்தது.

ராஜமாணிக்கம்
ராஜமாணிக்கம்

தங்கமுத்து மறைவுக்குப் பிறகுகூட அவரின் குடும்பத்தினர் மேலே வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் வைத்திலிங்கம். இதனால் தங்கமுத்துவின் மகன் டாக்டர் தங்க.கண்ணன், தம்பி ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டும் அதைத் தடுத்து விட்டார். ஒரு முறை பிரசாரத்தின்போது, `தஞ்சையின் தங்கம் தங்கமுத்து’ என மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாயாலேயே பாராட்டப்பட்டவர். ஆனாலும் அவருக்கான வளர்ச்சி வாய்க்கவில்லை.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளராக இருந்தபோது அம்பாசிடர் காரில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுற்றி வந்து கட்சியை வளர்த்த தங்கமுத்துவை, வைத்திலிங்கம் ஓரங்கட்டியதன் காரணம் இப்போது வரை புரியவில்லை எனப் புலம்பிவருகின்றனர் அவரின் ஆதரவாளர்கள். அதுவே, தங்கமுத்துவின் குடும்பத்தைச் சேர்ந்த நிர்வாகிகளாக இருக்கக்கூடியவர்கள், வைத்திலிங்கத்தை எதிர்ப்பதற்குக் காரணமாக அமைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பேசும் ராஜமாணிக்கம்
ஆர்ப்பாட்டத்தில் பேசும் ராஜமாணிக்கம்

அ.தி.மு.க சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்து, சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தங்கமுத்துவின் தம்பியும், தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளருமான ராஜமாணிக்கம், அதன் வெளிப்பாடாகத் தன் ஆதங்கத்தைக் கொட்டியிருப்பதாக விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற மோதல்கள் நிலவிவரும் சூழலில் அ.தி.மு.க இணைப்பு சாத்தியமாகுமா என்பதே தஞ்சாவூர் மாவட்ட தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் ராஜமாணிக்கம், ``ஓ.பன்னீர்செல்வம் ஒரு பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார். அதில் அவர் பேசும்போது `தனியே கட்சி ஆரம்பியுங்கள்’ என எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால்விடுகிறார். நாங்கள் எதற்குத் தனியாகக் கட்சி ஆரம்பிக்க வேண்டும். இரட்டை இலைச் சின்னம் எங்களிடம்தான் இருக்கிறது. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்பது அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றால், நீங்கள் தனியாகக் கட்சி ஆரம்பியுங்கள்.

ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம்
ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம்

தற்போது ஓ.பன்னீர்செல்வம் 88 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்திருக்கிறார். அப்படி அவர் நியமனம் செய்த மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கிறார்களா... அ.தி.மு.க-வுக்கு துரோகம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரனை வைத்துக்கொண்டு பன்னீர்செல்வம் பொதுக்குழுக் கூட்டம் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் அ.தி.மு.க-வில் உறுப்பினர்களே கிடையாது.

ஓ.பி.எஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம், தனக்குப் பிடிக்காதவர்கள் பலரை, கட்சியைவிட்டு நீக்கினார். வைத்திலிங்கத்தைக் கட்சியில் ஆளாக்கிய முன்னாள் தஞ்சை எம்.எல்.ஏ தங்கமுத்துவுக்கு நன்றியை மறந்து துரோகம் செய்தார். முன்னாள் கொறடாவான மறைந்த துரை.கோவிந்தராஜன் தஞ்சை மாவட்டத்தில் பட்டி தொட்டிக்கெல்லாம் சென்று அ.தி.மு.க-வை வளர்த்தார். அவருக்கு வைத்திலிங்கம் துரோகம் இழைத்தார். அவர் பெயரைப் போட்டால் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என்று சொன்னவர் வைத்திலிங்கம்.

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

பகுதிச் செயலாளர் சரவணன், ஒரத்தநாடு மா.சேகர், வழக்கறிஞர்கள் தங்கப்பன், முருகேசன் உள்ளிட்ட பலரையும் கட்சியிலிருந்து ஒரங்கட்டினார். பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ சேகருக்கு தொகுதியில் சீட் கிடைக்கக் கூடாது என்பதற்காக, கூட்டணிக் கட்சிக்குத் தொகுதியை ஒதுக்கினார். வைத்திலிங்கத்தால் ஆயிரக்கணக்கானோர் கட்சியைவிட்டு வெளியேறினர். தற்போது சென்னையில் இருந்தபடி வைத்திலிங்கம் என்னவெல்லாமோ பேசுகிறார். தஞ்சை மண்ணில் வந்து அவரால் பேச முடியுமா... இங்கு எல்லோருக்கும் உண்மை என்னவென்று தெரியும்.

வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட சிலர் மட்டுமே பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். ஆனால், உண்மையான அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இயங்கிவருகிறது. தஞ்சை மாவட்டம், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையாக இருக்கிறது” என்றார்.

`வைத்திலிங்கம் கட்சிக்காக உழைத்ததனாலேயே அம்மா அவரை உயர்த்தி அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளைத் தந்து அழகு பார்த்தார். நாங்கள் நடத்தக்கூடிய கூட்டங்களில் ராஜமாணிக்கம் பேசியதற்கு பதிலடி கொடுப்போம்’ என வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் கூறிவருவது தஞ்சாவூர் அ.தி.மு.க வட்டாரத்தில் சூட்டைக் கிளம்பியிருக்கிறது.