அலசல்
Published:Updated:

“முதல்வர் ஏன் தீபாவளி வாழ்த்து சொல்லவில்லை?” - ஸ்டாலினுக்கு வானதி கேள்வி...

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
வானதி சீனிவாசன்

இந்தக் கேள்வியே தவறானது. ஏனெனில், இந்த இடைத்தேர்தலில் மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

‘தமிழ்நாடு தினம் நவம்பர் ஒன்றுதான்’ என்று சர்ச்சையை ஆரம்பித்துவைத்த தமிழக பா.ஜ.க., இப்போது ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்லாதது நவீன தீண்டாமை’ எனச் சொல்லி, தமிழக அரசுக்கு எதிராகத் தடதடத்துவருகிறது. இந்த நிலையில், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவியுமான வானதி சீனிவாசனிடம் பேசினேன்...

“நவம்பர் 1-தான் தமிழ்நாடு தினம்’ என்று வாழ்த்து சொல்கிறீர்களே... அப்படியென்றால், ‘தமிழ்நாடு தினத்தன்று விடுமுறை வேண்டும்; தமிழ்நாட்டுக்கு என்று தனிக்கொடி வேண்டும்’ என்ற கோரிக்கையையும் தமிழக பா.ஜ.க ஏற்றுக்கொள்கிறதா?”

“தமிழ்நாட்டுக்கான தனிக்கொடி என்று எதை, எந்த அர்த்தத்தில் அடையாளப்படுத்துகிறார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தேசியக்கொடிக்கு ஈடாக இப்படி ஒரு கொடியை உருவாக்க முடியுமா, அப்படி உருவாக்கச் சட்டத்தில் இடமிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இதில், அடிப்படையான கவனமென்பது, இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யாரும் ஊறு விளைவிக்கக் கூடாது என்பதே. இந்தக் கோரிக்கைகள் இப்போது ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால், ‘இந்தக் கோரிக்கைகளை யார் சொல்கிறார்கள், அவர்களது பின்னணி என்ன என்பதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் இது குறித்து நாங்கள் கருத்து சொல்ல முடியும்.”

“அப்படியென்றால் பா.ஜ.க ஆட்சி செய்துவருகிற கர்நாடக மாநிலத்தில், ‘தனிக்கொடி மற்றும் விடுமுறை தின நடைமுறைகள் இருக்கின்றனவே..?”

“இந்த விஷயத்தில், கர்நாடக பா.ஜ.க எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. விசாரித்துவிட்டுச் சொல்கிறேன்.”

“ ‘தீபாவளி என்பது தமிழர்களை இழிவுபடுத்துகிற வடநாட்டுப் பண்டிகை’ என்பதுதான் தி.மு.க-வின் தரப்பாக இருக்கிறது. இந்தநிலையில், ‘தீபாவளிக்கு ஏன் முதல்வர் வாழ்த்து சொல்லவில்லை’ எனத் தமிழக பா.ஜ.க-வினர் கேட்பதே மத அரசியல்தானே?”

“தீபாவளி வடவர் பண்டிகையென்றால், விநாயகர் சதுர்த்தி என்ன பண்டிகை? தமிழச்சியான ஔவையார் விநாயகரைப் பற்றிப் பாடவில்லையா? ‘தி.மு.க என்ற அரசியல் கட்சியின் தலைவர் ஏன் தீபாவளி வாழ்த்து சொல்லவில்லை’ என நாங்கள் கேட்கவில்லை. ‘அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்வர் ஏன் எங்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை’ என்பதுதான் எங்கள் கேள்வி.”

“முதல்வர் ஏன் தீபாவளி வாழ்த்து சொல்லவில்லை?” - ஸ்டாலினுக்கு வானதி கேள்வி...

“மத்திய அரசின் பெட்ரோல் விலைக் குறைப்புக்கு, தமிழக அரசின் முன்மாதிரி காரணமா அல்லது சமீபத்திய இடைத்தேர்தல் தோல்வி காரணமா?”

“இந்தக் கேள்வியே தவறானது. ஏனெனில், இந்த இடைத்தேர்தலில் மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தல் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ‘தீபாவளி சமயத்தில் மக்களுக்கான பெரும் சுமையைக் குறைக்க வேண்டும்’ என மத்திய அரசு நினைத்து, விலையைக் குறைத்திருக்கிறது, அவ்வளவுதான். தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததைத்தான் தி.மு.க அரசு செய்திருக்கிறது. அவர்களும்கூட டீசல் விலையைக் குறைக்கவில்லையே...”

“கடந்த காலங்களில், ‘பெட்ரோல் விலைக் குறைப்பு அதிகாரம் எங்களிடம் இல்லை’ எனக் கைவிரித்துவந்த மத்திய பா.ஜ.க அரசு, இப்போது மட்டும் எப்படிச் சாத்தியப்படுத்தியது?”

“எரிபொருள் விலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு சாத்தியம் ஆனது.”

“ ‘நடிகர் ஷாருக் கான் ஓர் இஸ்லாமியர் என்பதாலேயே அவரின் மகனை போதைப்பொருள் வழக்கில், மத்திய அரசு பழிவாங்கிவருகிறது’ என சீமான் சொல்கிறாரே..?”

“எந்தவொரு குற்றச்செயலில் சம்பந்தப்பட்டவரையும் சாதி, மதத்தோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பது கொடூரமானது. ஒருபோதும் அதை நாங்கள் விரும்புவது இல்லை. குற்றம்சாட்டப் பட்ட நபரின் நடத்தைக்கோ, குற்றத்துக்கோ மதச் சாயம் பூசி அதன் மூலம் இந்த நாட்டின் இளைஞர்களிடமும், நீதித்துறையிடமும் ஒரு எண்ணத்தைக் கற்பிக்க முயல்வது முறையா என்பதை சீமான் யோசித்துப் பார்க்க வேண்டும்.”

“அப்படியென்றால், உத்தரப்பிரதேச விவசாயிகள் படுகொலை விவகாரத்தில், மத்திய அமைச்சரின் மகனைக் கைதுசெய்வதில் பா.ஜ.க அரசு, தாமதம் செய்தது ஏன்?”

“எல்லாக் குற்ற வழக்குகளையும் பொத்தாம் பொதுவாகப் பார்ப்பது தவறானது. போதைப்பொருள் வழக்கில் தண்டனை என்ன, அதற்கு உடனடி ஜாமீன் கிடைக்குமா என்பதையும் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில், ‘மத்திய அமைச்சர் மகனின் கார் ஏற்றிப் படுகொலை நடந்திருக்கிறது’ என்றுதான் விசாரணைத் தகவல் கிடைத்திருக்கிறதே தவிர, அமைச்சர் மகனே காரை ஏற்றிக் கொல்லவில்லை. ஆனால், செய்திகளில் ‘அமைச்சர் மகனே காரை ஏற்றிப் படுகொலை செய்தார்’ என்பதாகவே திரித்து வெளியிடப்படுகிறது. அதுவும் தவறு.”

“கோயில் காணிக்கை நகைகளை உருக்கி, தங்கக்கட்டிகளாக்கிப் பாதுகாக்கும் தமிழக அரசின் முடிவைத் தமிழக பா.ஜ.க ஏன் எதிர்க்கிறது?”

“கணவருக்கு உடல்நிலை சரியாக வேண்டும் என வேண்டி மாங்கல்யத்தைக்கூட காணிக்கையாகச் செலுத்தும் பழக்கம் நம் மக்களிடையே உண்டு. இது பக்தர்களின் உணர்வு சம்பந்தப்பட்டது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் வெறும் லாப, நட்டக் கணக்குடன் காணிக்கை நகைகளை உருக்குவதென்பது, பக்தர்களின் மன உணர்வுகளை மதிப்பற்றதாக்கி விடுகிறது. எனவே அமைச்சர் சேகர் பாபு, பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என விளையாடினால் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.”