Published:Updated:

`ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்தை எதிர்பார்க்க முடியாது!' - திருமாவளவன்

இ.கார்த்திகேயன்

``நடிகர் ரஜினியிடமிருந்து மத்திய அரசிற்கு எதிரானக் கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது.” என வி.சி.க தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக எம்.பி திருமாவளவன் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது. பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது. அங்கு நடைபெறும் நிகழ்வுகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஊடகத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன்
திருமாவளவன்

அந்தமாநில மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகளையும், அதிகாரங்களையும் ரத்து செய்து, மோடி அரசு வரலாற்று துரோகத்தைச் செய்துள்ளது. நாடாளுமன்ற அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு செல்ல மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் தகர்க்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் உச்சகட்ட நிலையாகத்தான் ஜம்மு-காஷ்மீர் உரிமைகளை ரத்து செய்ததாகப் பார்க்கப்படுகிறது. இதைக் கண்டித்து இந்திய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய உள்ளோம்.

இந்தியாவிலேயே முதல்முறையாக தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி மத்திய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கை கண்டித்துள்ளன. `இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் கூடிக் கலந்தாய்வு செய்வோம்' என தி.மு.க தலைவர் ஸ்டாலினும் கூறியுள்ளார். நடிகர் ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் வரும் என எதிர்ப்பார்க்க முடியாது.

திருமாவளவன்
திருமாவளவன்

அவர், மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துக்களைத்தான் கூறுகிறார். எனவே, மகாபாரதத்திலிருந்து மோடி - அமித் ஷாவுக்கு உவமையாகச் சொல்லப்பட்ட கருத்தில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இது அதிர்ச்சி அடையக் கூடியதும் இல்லை. வேலூர்த் தொகுதியில் தி.மு.க அனைத்து பராக்கிரமங்களையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது. தோல்விக்குப் பிறகு தொண்டர்களைத் தக்க வைத்து கொள்வதற்காக அ.தி.மு.க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.” என்றார்.