Published:Updated:

“தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பது அபத்தமான கோரிக்கை!” -திருமா திட்டவட்டம்

தொல்.திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
தொல்.திருமாவளவன்

தேர்தல் சமயங்களில் மட்டும் ‘வி.சி.க மிகப்பெரிய அரசியல் சக்தியாக அங்கீகாரம் பெற்றுவிடக் கூடாது’ என்ற கோபத்திலேயே தங்கள் வெறுப்பைக் காட்டுகிறார்கள்

“தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பது அபத்தமான கோரிக்கை!” -திருமா திட்டவட்டம்

தேர்தல் சமயங்களில் மட்டும் ‘வி.சி.க மிகப்பெரிய அரசியல் சக்தியாக அங்கீகாரம் பெற்றுவிடக் கூடாது’ என்ற கோபத்திலேயே தங்கள் வெறுப்பைக் காட்டுகிறார்கள்

Published:Updated:
தொல்.திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
தொல்.திருமாவளவன்
தேர்தல் பரபரப்புகள் அடங்கி, வாக்கு எண்ணிக்கையை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கும் நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனைச் சந்தித்து சமீபத்திய பரபரப்புகள் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

‘‘கூட்டணியிலுள்ள ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளெல்லாம் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்போது, வி.சி.க மட்டும் ‘பானை’ச் சின்னத்தில் போட்டியிட்டது தி.மு.க-வுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்தானே?’’

‘‘இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது? கூட்டணிக்கான தலைமை என்ற வகையில், அவர்களது ஆலோசனையைச் சொன்னார்கள். நாங்களும் எங்களது நிலைப்பாட்டை எடுத்துச் சொன்னோம். எனவே, ‘சரி’ என்று சொல்லிவிட்டார்கள். 2006-லிருந்து தொடர்ச்சியாக தனிச்சின்னத்தில்தான் வி.சி.க போட்டியிட்டுவருகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும், ஒருவர் உதயசூரியன் சின்னத்தில் மாற்றி நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தத் தொடர்ச்சியை எடுத்துச் சொல்லித்தான் இந்தமுறையும் நாங்கள் பானைச் சின்னத்தில் போட்டியிட்டோம். இதில் யாருக்கும், எந்த வருத்தமும் இல்லை.’’

‘‘தி.மு.க கூட்டணிக் கட்சியினரேகூட, சில இடங்களில் வி.சி.க கொடி மற்றும் பெயரைப் பயன்படுத்தத் தயங்கியதும், தடைவிதித்ததுமான சம்பவங்கள் அரங்கேறினவே?’’

‘‘அ.தி.மு.க கூட்டணியினரும்கூட பா.ஜ.க பெயரைப் பயன்படுத்தாமல் வாக்கு கேட்டதும், பா.ஜ.க வேட்பாளர்களே பிரதமர் மோடியின் பெயரைத் தவிர்த்ததுமான சம்பவங்களும் நடந்ததுதானே? சில இடங்களில் இது போன்ற நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும். எனவே, இதைச் சாதி அடிப்படையிலான விஷயமாகப் பார்க்க வேண்டியதில்லை. அரசியலாகப் புரிந்துகொள்ள வேண்டியதுதான்!’’

‘‘வி.சி.க-வைப் புறக்கணிப்பதன் பின்னணியில் சாதி அரசியல்தானே தெரிகிறது?’’

‘‘அப்படியில்லை! மற்ற நேரங்களில் வி.சி.க-வோடு கைகோப்பவர்களும்கூட, தேர்தல் சமயங்களில் மட்டும் ‘வி.சி.க மிகப்பெரிய அரசியல் சக்தியாக அங்கீகாரம் பெற்றுவிடக் கூடாது’ என்ற கோபத்திலேயே தங்கள் வெறுப்பைக் காட்டுகிறார்கள். குறிப்பிட்ட ஒருசில இடங்களில் மட்டும்தான் இப்படியான சம்பவங்கள் நடந்தன. இது சாதியரீதியிலான எதிர்ப்பு என்றால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மற்ற கட்சிகளின்மீது அவர்கள் வெறுப்பைக் காட்டுவதில்லையே!’’

“தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பது அபத்தமான கோரிக்கை!” -திருமா திட்டவட்டம்

‘‘கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே தவறான கருத்துகளை எதிர்க்கட்சியினர் பதியவைத்துவிட்டார்கள் என்று பா.ஜ.க-வினர் சொல்கிறார்களே?’’

‘‘எதிர்க்கட்சியினர்தான் வதந்தியைப் பரப்பினார்கள் என்று சொல்வதே, ஆளுங்கட்சியினரின் இயலாமையை வெளிப்படுத்தக்கூடிய சொத்தை வாதம்தான். மக்களிடம் இயல்பாகவே தடுப்பூசி குறித்த ஒருவித அச்சம் நிலவிவந்தது. ‘தடுப்பூசிகளால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமோ’ என்பது உலக அளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. எனவே, இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சியினர்தான் வதந்திகளைப் பரப்பினார்கள் என்று ஆளுங்கட்சியினர் சொல்வதே அபத்தமான வாதம்!’’

‘‘ `தடுப்பூசி போட்டு சோதனை செய்ய மக்கள் என்ன வெள்ளை எலிகளா?’ என்று நீங்களே கேட்டதாகச் செய்திகள் வந்தனவே?’’

‘‘நான் அப்படி எந்த இடத்திலும் கேட்கவில்லை. ஆனாலும், இது போன்ற தவறான செய்தியைத் திட்டமிட்டு பரப்பிவருகிறார்கள். கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மூன்று கட்டப் பரிசோதனைகளிலும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பிறகுதான், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், கோவாக்ஸின் தடுப்பூசி 2-வது கட்டப் பரிசோதனையில் இருக்கும்போதே நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியே, கோவாக்ஸின் தடுப்பூசிக்கான விளம்பரதாரராக மாறி, பாரத் பயோடெக் நிறுவனத்துக்காகத் தொடர்ந்து பிரசாரமும் செய்துவருகிறார். இந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையில்தான் ‘மக்களிடம் பரிசோதிக்கிறீர்களா...’ என்று நான் பேசியிருந்தேனே தவிர, ‘மக்கள் தடுப்பூசியே போட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று நான் எந்த இடத்திலும் பேசவில்லை.’’

‘‘அண்மையில், நடிகர் விவேக் மரணத்தின்போதும்கூட, ‘தடுப்பூசி செயல்பாடு’ குறித்து கேள்வி எழுப்பியிருந்தீர்களே?’’

‘‘நடிகர் விவேக், தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாள் மயக்கமடைந்தார். உடனே மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்து சிகிச்சையளித்தார்கள். ஆனாலும், இறந்துவிட்டார். இறந்துபோன விவேக்கின் முகம் வீங்கிய நிலையில் காட்சியளித்தது. மாரடைப்பில் இறந்துபோகிறவர்களுக்கு, மூக்கு, வாய்வழியே ரத்தம் வரலாம். ஆனால், முகம் வீங்கிப்போய் நான் இதுவரை பார்த்ததில்லை. இப்போதும்கூட, தடுப்பூசியின் பக்கவிளைவால்தான் விவேக்குக்கு மரணம் ஏற்பட்டது என்று நான் சொல்லவில்லை. அதேசமயம், ‘இந்த மரணம் தடுப்பூசியால் ஏற்பட்டதல்ல’ என்ற விளக்கத்தை அழுத்தமாகச் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கும் இருக்கிறது என்பதைத்தான் எடுத்துச் சொன்னேன்.’’

‘‘அரக்கோணம் இரட்டைப் படுகொலைச் சம்பவத்தை சாதிய அரசியலாகத் திசைதிருப்பிவிட வி.சி.க-வினர் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள் என்கிறார்களே?’’

‘‘இதைவிடக் கேவலமான அரசியல் எதுவும் இருக்க முடியாது. தலித்துகள்தானே கொல்லப்பட்டிருக்கிறார்கள்? ‘சோகனூரில் பானைச் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டவர்கள்தானே நீங்கள்?’ என்று விசாரித்துவிட்டு அடித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்னை அதோடு முடிந்தது. ஆனால், நடந்து முடிந்த பிரச்னைக்குச் சம்பந்தமே இல்லாத சூர்யா, அர்ஜூன் என்ற இரு தலித் இளைஞர்களைக் குறிப்பிட்ட இடத்துக்குச் சமாதானம் பேச வரச்சொல்லி பா.ம.க கிளைச் செயலாளரின் மகன் போனில் அழைத்திருக்கிறார். சமாதானப் பேச்சுவார்த்தைக்கான தேவையே அங்கு எழவில்லை. ஆனாலும்கூட அழைத்ததன் பேரில் நம்பிச் சென்ற சூர்யா, அர்ஜூன் இருவரையும் ஆயுதங்களோடு வந்த கும்பல் கத்தியால் குத்தி, கல்லைத் தூக்கிப்போட்டுக் கொன்றிருக்கிறது. ‘பானைச் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டவர்கள்’ என்பது உடனடியாக இருந்த பதற்றம். ஆனால், ஏற்கெனவே தமிழ்நாடு முழுக்க தலித் வெறுப்பு அரசியலை விதைத்துப் பரப்பியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். எனவே, இது அரசியல் பகையால் நிகழ்ந்த அப்பட்டமான சாதியப் படுகொலை.’’

“தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பது அபத்தமான கோரிக்கை!” -திருமா திட்டவட்டம்

‘‘ஆனால், உண்மை அறியும் குழுவைச் சேர்ந்த ப.சிவகாமி ஐ.ஏ.எஸ்., ‘இந்தக் கொலையின் பின்னணியில் அரசியல் எதுவும் இல்லை’ என்கிறாரே?’’

‘‘சிவகாமி யார்... அரசு நியமித்தக் குழுவைச் சேர்ந்தவரா இல்லை நீதித்துறையைச் சேர்ந்தவரா... அவர் எத்தனை இடங்களுக்குச் சென்று யார், யாரையெல்லாம் விசாரித்திருக்கிறார்... இது விஷயமாக அவர் திரட்டிய தகவல்கள்தான் என்னென்ன... ‘இந்தப் படுகொலைச் சம்பவத்தில், பா.ம.க-வுக்குத் தொடர்பு இருக்கிறதா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அப்படியொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்... அவ்வளவுதான்! இதைத்தான் தூக்கிப் பிடித்துக்கொண்டு இவர்கள் கொண்டாடுகிறார்கள்.’’

‘‘அரக்கோணம் இரட்டைப் படுகொலைக்கும் முன்னதாக நடந்தேறிய தேவியாநந்தல் சரஸ்வதி கொலைச் சம்பவத்தை, தி.மு.க-வும் வி.சி.க-வும் ரொம்ப தாமதமாகக் கண்டித்திருக்கின்றனவே?’’

‘‘பா.ம.க-வே ரொம்ப லேட்டாகத்தானே இந்தச் சம்பவத்தில் தலையிட்டார்கள். ஏப்ரல் 2-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. உடனடியாக விவரம் ஏதும் தெரியாததால், ‘சந்தேகத்துக்குரிய மரணம்’ என்று வழக்கு பதியப்பட்டுள்ளது. சரஸ்வதியின் பெற்றோரை விசாரித்த பிறகுதான், காதல் விவகாரத்தில் நடைபெற்ற கொலை என்பது தெரியவந்து, சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் எங்களுக்கும் விவரம் தெரிந்து நாங்களும் கண்டித்தோம்.’’

‘‘ ‘கர்ணன்’ திரைப்படத்தில் வருடம் குறித்த சர்ச்சையை தி.மு.க எழுப்பியபோது, வி.சி.க-விடமிருந்து எந்தவொரு கருத்தும் வெளிவரவில்லையே... ஏன்?’’

‘‘ ‘கர்ணன்’ திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேன். அதில், வருடம் குறித்த விஷயத்தைப் பெரிய சர்ச்சையாக நான் பார்க்கவில்லை. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் கொடியன்குளம் சம்பவம் நடைபெற்றது. சசிகலா அம்மாவின் கை ஓங்கியிருந்த காலகட்டம் அது. எனவே, அவரது சமூகத்தைச் சார்ந்தவர்கள் காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தார்கள். அந்தப் பின்னணியில் நடத்தப்பட்ட ஒரு கொடூரமான தாக்குதல்தான் அந்தச் சம்பவம்.’’

‘‘1995-ல் நடைபெற்ற கொடியன்குளம் சம்பவத்தை 1997-ல் நடைபெற்றதாக அல்லது 90-களின் பிற்பகுதியில் நடைபெற்றதாகப் படத்தில் காட்டப்படுவதன் பின்னணியில் அரசியல் இல்லை என்கிறீர்களா?’’

‘‘அது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது குறித்துப் படத்தின் இயக்குநரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.’’

‘‘தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கூறுகிறாரே?’’

‘‘பா.ம.க-வினர் எந்த அளவுக்குப் பிற்போக்குத்தனமாகச் சிந்திக்கிறார்கள் என்பதற்கான சான்று இது. தமிழர்களின் ஒற்றுமை குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, தமிழர்களை நிரந்தரமாக மூன்று கூறுகளாகப் பிரிக்க நினைக்கும் அபத்தமான கோரிக்கை இது. எனவே, மக்கள் இயல்பாகவே இந்தக் கோரிக்கையைப் புறக்கணித்துவிடுவார்கள்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism