Published:Updated:

``பாஜக விஷயத்தில் பினராயி விஜயனைப்போல் ஸ்டாலின் உறுதியாக நிற்கலாம்!" - திருமாவளவன் ஓப்பன் டாக்

திருமாவளவன்

“எந்தக் காரணத்தை முன்னிட்டும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஸிடம் குறைந்தபட்ச சமரசத்தை தி.மு.க கையாண்டால்கூட, தி.மு.க அணியில் பா.ஜ.க எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப் போய்விடும.” - திருமாவளவன்

``பாஜக விஷயத்தில் பினராயி விஜயனைப்போல் ஸ்டாலின் உறுதியாக நிற்கலாம்!" - திருமாவளவன் ஓப்பன் டாக்

“எந்தக் காரணத்தை முன்னிட்டும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஸிடம் குறைந்தபட்ச சமரசத்தை தி.மு.க கையாண்டால்கூட, தி.மு.க அணியில் பா.ஜ.க எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப் போய்விடும.” - திருமாவளவன்

Published:Updated:
திருமாவளவன்

வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி அறுபதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். அவரிடம் சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நடந்த அமளிகள், தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி நிலவரம் உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்தேன்...

``நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்வதும், அமளியில் ஈடுபடுவதும் ஏன்?”

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த இந்த எட்டு ஆண்டுக்காலத்தில் எதிர்க்கட்சிகளின் உணர்வுகளைக் கொஞ்சம்கூட மதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதை செய்வதற்கு ஏற்றார் போல் தனிபெரும்பான்மை இருக்கிறது. மாநிலங்களவையில் போதிய வலிமை இல்லை என்றாலும், மாநிலக் கட்சிகளை ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தி தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்க வைக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், எதிர்க்கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் எவ்வளவோ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் பாசிசத் தன்மையோடு நடந்துகொள்கிறார்கள். நாடாளுமன்ற நடைமுறை மரபுக்கு மாறாகச் செயலாற்றி வருகிறார்கள். அதனால்தான் ஜனநாயகரீதியில் எங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது”

பாராளுமன்றத்தில் திருமாவளவன்
பாராளுமன்றத்தில் திருமாவளவன்
Twitter

``அப்படியென்றால் நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுகிறதா?”

“ஆம்... அதோடு நாடாளுமன்ற ஜனநாயகத்திலேயே மாற்றம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமிருக்கின்றன. தேர்தலே இல்லாத நிலை, பிரதமர் முறை இல்லாமல் அதிபர் முறை என எதை வேண்டுமானாலும் செய்யவதற்கு பா.ஜ.க அரசு தயாராகி வருகிறது. அதனால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள், என்ன விமர்சனங்கள் வரும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன் நண்பர்களான அதானி, அம்பானிக்காக நாடுவிட்டு நாடு பயணப்படுகிறார் பிரதமர் மோடி”

``தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது என்கிற விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுகிறதே?''

“பெரியாரை எதிர்க்கக் கூடிய சக்திகள், தி.மு.க-வையும் தொடர்ந்து எதிர்க்கிறார்கள். இங்கு அ.தி.மு.க-வையோ மற்ற திராவிடம் என்கிற பெயரில் இருக்கிற இயக்கங்களையோ பெரியார் இயக்கத்தின் தொடர்ச்சியாக யாரும் பார்ப்பதில்லை. அடுத்து, ஓர் அரசு மாறும்போது அதிகாரவர்க்கம் முழுவதும் மாறும். அவர்களுக்கு வேண்டிய நபர்களை நியமிப்பார்கள். அதுவும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்யமுடியாது. நெருக்கடி உருவாகும். தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்னரும் மிக முக்கியமான பதவிகளில் அ.தி.மு.க-வில் யார் இருந்தார்களோ அவர்களே இன்னும் தொடர்கிறர்கள்”

திருமாவளவன் - ஸ்டாலின்
திருமாவளவன் - ஸ்டாலின்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``தமிழ்நாட்டில் உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸார், பா.ஜ.க-வுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க தடையாக தி.மு.க-வின் சமீபத்திய செயல்பாடுகள் இருக்கின்றனவே?”

“தி.மு.க-வினர் அரசியலுக்காக முடிவெடுக்கிறார்கள். அதிகாரிகள் சட்டம் ஒழுங்குக்காக முடிவெடுக்கிறார்கள். பிரதமரை அழைக்க வேண்டும் என்பது அரசியல் முடிவு. பிரதமர் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது, கறுப்பு கொடி காட்டக்கூடாது, போராட்டம் நடத்திவிடக்கூடாது... அதை தடுத்தாக வேண்டும் என்பது அதிகாரிகள் முடிவு. என்னைப் பொறுத்தவரை பினராய் விஜயன் எப்படி உறுதியாக நிற்கிறாரோ, அந்த மாதிரி முதல்வர் ஸ்டாலின் நிற்கலாம். கேரளாவைவிட பண்மடங்கு வலுவான மாநிலம் தமிழ்நாடு. கேரள முதல்வரைவிட வலுவான மக்கள் பின்னணி கொண்டிருக்கிற ஒரு முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். மத்தியில் ஆட்சியில் இருப்பதினால் அவர்களை அழைக்க வேண்டும் என்பது அவசியமற்றது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஸிடம் குறைந்தபட்சம் சமரசத்தை தி.மு.க கையாண்டால்கூட, தி.மு.க அணியில் பா.ஜ.க எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப் போய்விடும். அது தி.மு.க-வின் எதிர்காலத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் என்பது என் கருத்து.”

“தமிழ்நாட்டில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்கிற வாதம் அதிகமாக இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் வி.சி.க அதில் பங்கெடுத்து கொள்ளவில்லையா, அல்லது அந்த அளவுக்கு இன்னும் வளரவில்லையா?”

“சொல்லிக் கொள்ளலாம்... ஆனால், நாங்கள் பொறுப்புணர்ந்து வேலை செய்கிறோம். சாதாரண மக்களை அமைப்பாக்கி... அரசியல்படுத்துகிறோம். பொருளாதார நெருக்கடிகள், விமர்சனங்கள், அரசியல் அவதூறுகள் கடந்து தாக்குப்பிடித்து நிற்கிறோம். ஒரு காலத்தில் மக்கள் எங்களை அங்கீகரிப்பார்கள். எங்களை எந்த இடத்தில் வைக்கவேண்டுமோ அந்த இடத்தில் வைப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நானாக இந்த இடத்துக்குப் போவேன் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் சொல்லி மக்களை அணிதிரட்ட வேண்டும் என்கிற தேவையும் இல்லை. மக்களை ஏமாற்றவும் விரும்பவில்லை. மக்கள் நம் உழைப்பை அங்கீகரிப்பதன் மூலமாகத்தான் அந்த மாதிரியான பொறுப்புகளை வழங்குவார்கள். அதனால்தான் தொய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன்”

அன்புமணி ராமதாஸ் - திருமாவளவன்
அன்புமணி ராமதாஸ் - திருமாவளவன்

“இடையில் நடந்த சாதி சிக்கல் எல்லாம் மறந்து பழையபடி இணைந்து வேலை செய்யலாம் என்று பா.ம.க அழைத்தால் இணைவீர்களா?”

“பா.ம.க எந்த நிலைபாட்டையும் மக்கள் நலன் சார்ந்து எடுக்காது. அந்தக் கட்சியினர் அவர்கள் நலன் சார்ந்துதான் முடிவெடுப்பார்கள். இதுதான் கடந்தகால வரலாறு. நாங்கள் வன்னியர் சமூகத்தோடு முரண்படவில்லை, மோதவில்லை, அவர்களை பகையாகப் பார்க்கவில்லை. ஆனால், பா.ம.க-வுடன் இணைந்து வேலை செய்வதற்கான சூழல் இல்லை. அதை அவர்களே கெடுத்துவிட்டார்கள்”

“தலித் அரசியல் என ஒன்று தனியாக இருக்கிறதா, அல்லது இருக்க வேண்டுமா?”

“தலித் அரசியல், சாதி ஒழிப்பு என்பது பொது அரசியலில், பொது நீரோட்டத்தில் இணைவதுதான். தலித் என்றால் நொறுக்கப்பட்டவர்கள் என்பதாக பொருள். அவர்களுக்கான நீதியை கேட்பதற்காக பேசுகிறோம். அதில், நாங்கள் சேரமாட்டோம் என்பது தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்வதாகும். அது ஆபத்தானதும்கூட. தனித்துவத்தை பாதுகாக்கிறேன் என்று ஒதுங்கி நின்றால் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டு போய்விடுவோம். தனித்துவம் என்பது பொது நீரோட்டத்தில் தன்மானத்தை பாதுகாக்க கூடியதாக இருக்கவேண்டும்”

விசிக
விசிக

“அதில் வி.சி.க-வின் பங்கு?”

“இதை அவ்வளவு எளிதாக ஒரு தலைமுறையிலோ, திருமாவளவனோ உடனே சாதித்துவிட முடியும் என்று ஒரு முடிவுக்கு வரமுடியாது. பல தலைமுறைகளில் இருக்கும் ஒடுக்குமுறைகள் இணைவதுதான் தலித் அரசியல். அது சாதாரணமான விஷயம் கிடையாது. கருத்தியலை விதைக்கிறோம். சிந்தனையுள்ள தலைமுறையை உருவாக்குகிறோம். எங்களை பொறுத்தவரை நாங்கள் ஒரு மைலேஜ் எடுத்திருக்கிறோம். எல்லா தளங்களிலும் தலித் அரசியலை துணிந்து பேசக்கூடிய ஒரு நிலை உருவாகியிருக்கிறது என்றால் அது வி.சி.க-வின் வளர்ச்சிக்குப் பிறகுதான். பண்பாட்டுத் தளம், சினிமா, இலக்கிய தளம், அரசியல் தளம் என ஒவ்வொன்றிலும் நாங்கள் இந்த அடையாளத்தோடு இருக்கிறோம். அப்படி இருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்கிற துணிச்சலை வெளிப்படையாக கொண்டு வந்ததில் வி.சி.க-வுக்கு பங்கு இருப்பதாக நான் கருதுகிறேன்”

“அப்படி ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்களும் உங்களை ஏற்றுக்கொள்கிறார்களா?”

“எல்லோரும் என்னிடம் வர வேண்டும் என்று விரும்பவில்லை. எல்லோரும் ஒன்றாக சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பிலிருந்தும், விருப்பத்திலிருந்தும் வரக்கூடியது. ஆனால், அப்படி ஒன்றாகிவிட முடியாது. ஒருவர் புத்திசத்தை பேசுவார். அதில் அண்ணல் அம்பேத்கர் கருத்து, அடையாளம் இருந்தால் போதும். ஒரு சிலர் கொஞ்சம் இடதுசாரியாக இருப்பார்கள். அங்கு அம்பேத்கரை தூக்கிப் பிடித்தால் சாதி அரசியல் ஆகிவிடும். இப்படி பல அடையாளங்கள்... ஆனால் எல்லோரும் நீலம் வைத்திருப்பார்கள். எனவே ஒவ்வொருவரும் செழுமை அடைந்த நிலைக்கு வரவேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரத்தில் பல கோணங்கள் நிறைந்த அரசியலில், எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியமும் இல்லை. கருத்து ஒருமிக்கும்போது ஒற்றைச் சிந்தனை வரும். அதில் இணையவேண்டும்”

வி.சி.க தலைவர் திருமாவளவன்
வி.சி.க தலைவர் திருமாவளவன்

“ `நீங்கள் முன்னெடுக்கும் அரசியல் சமத்துவத்தை நோக்கி செல்லாமல், மேலும் சாதிய உணர்வைத்தான் அதிகமாக்க ஊட்டுகிறது’ என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?"

“அடையாள அரசியல் நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சிலர் தங்களை சாதியாக, மதமாக, மொழியாக, இனமாக அடையளப்படுத்தி கொள்கிறார்கள். அந்த அடையாளம் தங்கள்மீதான ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்துவதற்கும், நீதி கேட்பதற்கும்தான். இது தற்காலிகமானது. அடையாளத்தையே மெயிண்டன் செய்வோம், பாதுகாப்போம் எனும் போதுதான் பிரச்னை வருகிறது. தற்காலிகம் என்றால், அடுத்து நிரந்தரமானது என்ன என்ற கேள்வி வருகிறது. நிரந்தரமானது என்பது சமத்துவம்தான். ஜனநாயகத்தை நோக்கி மக்களை அணிதிரட்டுவதில் உள்ள சிக்கலில்தான் பா.ம.க, வி.சி.க போய் சாதிக்குள் நின்று விடுகிறார்கள் என்கிறார்கள். வி.சி.க-வை பொறுத்தவறை ‘நாங்கள் இந்த சாதி, இந்த சாதிக்காகதான் இருக்கிறோம்’ என்பதை முதன்மைப்படுத்தவில்லை. முன்னிறுத்தவும் இல்லை. சமத்துவம் என்பது உடனடியாக நிகழக்கூடியதும் இல்லை. எல்லா தளங்களிலும் இதற்கான எழுச்சி ஏற்பட வேண்டும். அதில் முக்கியமானது எதிரிகளையும் ஜனநாயகப்படுத்துதல். எதிரி என்றால் சாதி, மத அடிப்படையிலானது இல்லை. ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள்தான் எதிரிகள். ஜனநாயகத்திற்கு எதிரியாக இருப்பவர்கள் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரியாக இருப்பார்கள். அவர்களை கொள்கை பகையாக பார்க்கிறோம். அவர்களையும் ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் அவசியம்”

விசிக
விசிக
twitter

“தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று வி.சி.க விருது வழங்கும் விழாவில் சித்தராமையா பேசியிருக்கிறாரே?”

“அதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதை ஒரு இயக்கமாக எடுக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் தனியார் துறையே வேண்டாம் என்கிறோம். எனவே தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்பது முரணாக இருக்கும். இப்போதுதான் எல்லோரும் பேசத் தொடங்குகிறார்கள். இனிமேல் நாங்களும் சேர்ந்துதான் பேசவேண்டும். பொதுத்துறையாக இருக்கின்ற ஒவ்வொன்றையும் தனியார் மயமாக்குவதை தீவிரப்படுத்துகிறார்கள். அதை தவிர்க்க முடியாது என்கிற நிலையில் தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை. ஏற்கெனவே தலித் இயக்கங்கள் ஒன்றுகூடி பாஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, நான், கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அமைப்பை உருவாக்கி அதில் ‘தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்பதை முக்கிய அம்சமாக வைத்துக் கேட்டோம். அதை தீர்மானமாகவும் போட்டோம். இன்று தீவிரப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது”