Published:Updated:

விவசாயிகளுக்குத் தெரிந்தது, எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லை! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

நாடாளுமன்ற நடவடிக்கைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நாடாளுமன்ற நடவடிக்கைகள்

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான விமர்சனங்கள் மற்றும் பார்வைகள்...

முனைவர் ரவிக்குமார் எம்.பி
முனைவர் ரவிக்குமார் எம்.பி

ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெற்றுக்கொண்டாலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. ‘விவசாயிகள்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்; உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும்; குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டத்தை இயற்ற வேண்டும்; மின்சார திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும்; போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்திவந்தனர்.

இதற்கிடையில், ‘விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விவாதிப்பதற்கு, அவையை ஒத்திவைக்க வேண்டும்’ என்று ராகுல் காந்தி நோட்டீஸ் கொடுத்திருந்தார். நான் உட்பட, பல உறுப்பினர்களும் நோட்டீஸ் கொடுத்தோம். ஆனால், சபாநாயகர் அனுமதிக்கவில்லை. பிறகு, ஜீரோ ஹவரில் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி விவசாயிகள் பிரச்னையில் தவறு செய்துவிட்டதாகவும், மன்னிப்புக் கேட்பதாகவும் அறிவித்தார். ஆனால், விவசாயிகள் போராட்டத்தில் எத்தனை பேர் உயிரிழந்திருக் கிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘அரசிடம் அத்தகைய தகவல் எதுவும் இல்லை’ என்று பதில் அளிக்கிறார் மத்திய அமைச்சர். காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தில் உயிரிழந்த 400 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடும், அவர்கள் குடும்பங்களைச் சேர்ந்த 152 பேருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் என்னிடம் இருக்கிறது. போராட்டத்தில் உயிரிழந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 70 விவசாயிகளின் பட்டியலையும் நாங்கள் தயார் செய்திருக்கிறோம். விவசாயிகளின் உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தியாகிகளான விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

விவசாயிகளுக்குத் தெரிந்தது, எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லை! - 
முனைவர் ரவிக்குமார் எம்.பி

இந்தப் பிரச்னையை மேலும் வளரவிட்டால், அதை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ளும் என்பதை உணர்ந்த மோடி அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதாகக் கடிதம் ஒன்றை 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ தலைவர்களுக்கு அனுப்பியது. அந்தக் கடிதத்தில், ‘போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டால் வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்; போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்; மின்சார திருத்த மசோதா இப்போதைக்கு தாக்கல் செய்யப்படாது; குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான சட்டத்தை இயற்றுவது பற்றி கமிட்டி அமைக்கப்படும்; அதில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேசமயம், ‘லக்கிம்பூர் கேரி படுகொலைகளுக்குக் காரணமான உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்; அவரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை குறித்து ஒன்றிய அரசு எதுவும் சொல்லவில்லை.

ஒன்றிய அரசின் இந்தத் தீர்வு ஒருவகையில் விவசாயிகள் சங்கத்துக்குக் கிடைத்த வெற்றி என்றாலும், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான சட்டம் குறித்து விவாதிக்கும் கமிட்டியில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பதை முதலிலேயே தெளிவுபடுத்த வேண்டும். `மின்சார திருத்த மசோதா விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளோடு கலந்து பேசிய பிறகே அறிமுகப்படுத்தப்படும்’ என்று அரசு கூறியிருக்கிறது. `அதைக் கைவிடுகிறோம்’ என்று முதலில் கூறிய அரசு, இப்போது `கலந்து பேசி அறிமுகம் செய்கிறோம்’ என்பது சரியல்ல என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. விவசாயிகள் கேட்பதுபோல இழப்பீட்டையும், அரசு வேலையையும் வழங்குவதில் பா.ஜ.க அரசுக்குப் பெரிய சிக்கல் இல்லை. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டத்தை அவ்வளவு சீக்கிரம் கொண்டுவருவார்களா என்பதுதான் கேள்வி.

விவசாயிகளுக்குத் தெரிந்தது, எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லை! - 
முனைவர் ரவிக்குமார் எம்.பி

1960 முதல் ஒவ்வோர் ஆண்டும் 23 விளை பொருள்களுக்கு அரசாங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்துவருகிறது. இந்தப் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகள் நியாயமான விலையைப் பெற வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இந்த அறிவிப்புக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் ஏதுமில்லை. அதனால், அந்த ஆதரவு விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை. தற்போது நெல், கோதுமை ஆகிய இரண்டு பயிர்களுக்கு மட்டும் அரசாங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிப்பதோடு, கடந்த 50 ஆண்டுகளாக அந்த விலைக்கு அந்த தானியங்களை வாங்கவும் செய்கிறது. ஆனால், இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் அவற்றை அரசாங்கம் வாங்குவதில்லை. கோதுமை விளையும் சீஸனில் பஞ்சாப், ஹரியானா முதலான சில மாநிலங்களில்தான் அதிக அளவில் கோதுமையை அரசுகள் வாங்குகின்றன. அதேசமயம் கொள்முதல் செய்யப்படும் தானியங்களுக்குப் பணத்தை பட்டுவாடா செய்யும் ஏற்பாடுகள் இல்லாததால் பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கோதுமை அதிகம் விளைந்தாலும் அரசுகள் அவ்வளவாக வாங்குவதில்லை.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கமிட்டியைச் சேர்ந்த அனில் கன்வாத் என்ற உறுப்பினர்தான் குறைந்தபட்ச ஆதார விலைக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவந்தார். “எம்.எஸ்.பி சட்டத்தை இயற்றினால் அரசாங்கமே திவாலாகிவிடும். இந்தத் திட்டத்தை அரசு ஏற்றால், மற்ற விவசாயிகளும்... குறிப்பாக காய்கறிகள், பழங்கள் விளைவிக்கும் விவசாயிகளும் தங்களுடைய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என்று கேட்பார்கள்” என்று அவர் பயமுறுத்தினார்.

பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுக்பால் சிங் இந்த வாதங்களை நிராகரித்தார்... “அரசாங்கம் 23 விளைபொருள் களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்து, ஒட்டுமொத்தமாக அனைத்து விளைபொருள்களையும் வாங்கினால்கூட அதற்கு ஒன்பது லட்சம் கோடி ரூபாய்தான் செலவாகும். இதற்காகச் செய்யப்படும் முதலீட்டைச் செலவாக மட்டுமே கருதக் கூடாது. இதனால் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு உருவாகிறது. விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்போது, அது நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகிறது. தொழில் துறை எந்திரமயமாகிவருவதால் கிராமப்புறங்களிலிருந்து வேலை தேடி நகரங்களுக்கு இடம்பெயரும் தொழிலாளர்களை அது உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, கிராமப்புறங்களிலிருந்து அதிகமான பேர் வெளியேறாமல் அவர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்பை வழங்கவேண்டியது அவசியம். இதை விவசாயிகளுக்கு வழங்கும் சலுகையாகப் பார்க்காமல், எதிர்காலத்தில் ஓர் அராஜகச் சூழல் உருவாகிவிடாமல் இருப்பதற்கான காப்பீடாகவே கருத வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்குத் தெரிந்தது, எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லை! - 
முனைவர் ரவிக்குமார் எம்.பி

தற்போது பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் எஃப்.சி.ஐ ஆகியவற்றின் கிடங்குகள் மூலமாக 883 லட்சம் டன் தானியங்களைச் சேமித்து வைக்கக்கூடிய திறன் அரசிடம் இருக்கிறது. ஆனால், ‘அது போதுமானதாக இல்லை; புதிதாக ஏராளமான கிடங்குகளைக் கட்டியாக வேண்டும். அதற்கு அதிகம் பணம் செலவாகும்’ என்று அரசு கூறுவது உண்மையல்ல... ‘விளைவிக்கப்பட்ட பயிர்கள் அனைத்தும் மண்டிகளுக்கு விற்பனைக்காக வருவதில்லை. அரசு விலையை நிர்ணயித்தால், தனியார் நிறுவனங்களும் அதே விலைக்கு வாங்கவேண்டிய நிலை உருவாகும். அதனால், அனைத்து தானியங்களும் அரசிடம் வராது’ என்று விவசாயிகள் தரப்பு மறுக்கிறது. தண்ணீர் அதிகமாகத் தேவைப்படும் நெல், கோதுமை ஆகியவற்றை விவசாயிகள் பயிரிடுவதற்குக் காரணம், அந்தப் பயிர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைதான். மற்ற தானியங்களுக்கும் அதை விரிவுபடுத்தும்போது விவசாயிகள் பலவிதமான பயிர்களையும் சாகுபடி செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும். அதனால் தண்ணீர் பற்றாக்குறை குறைவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற மோடி அரசு, தேர்தல் களத்தை அவ்வளவு எளிதாக எதிர்க்கட்சிகளுக்குத் தாரைவார்த்துவிடும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அரசியல் அறுவடையை முடித்த பிறகு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பின்வாங்கலாம். எனவே, உத்தரப்பிரதேசத் தேர்தலில் பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை கிடைக்கவிடாமல் செய்வது ஒன்றே விவசாயிகளை மட்டுமல்ல... இந்த நாட்டையும் காப்பாற்றும். இது 40 அமைப்புகளாக இருந்தாலும், போராட்டக் களத்தில் ஒரே கூட்டமைப்பாக இணைந்து நிற்கும் விவசாயிகளுக்குத் தெரிகிறது. ஆனால், நான்காகப் பிரிந்து நிற்கும் எதிர்க்கட்சிகளுக்குத்தான் தெரியவில்லை!