Published:Updated:

“முதல்வர் ஸ்டாலினை அம்பேத்கருடன் ஒப்பிடுவதில் தவறில்லை!” - விளக்குகிறார் சிந்தனைச்செல்வன்

சிந்தனைச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனைச்செல்வன்

இது போன்ற பிரச்னையில் உடனடியாகக் கண்டன அறிக்கை வெளியிடுவதற்கும், சட்டமன்றத்தில் பேசுவதற்கும் எங்களுக்கு எந்தத் தயக்கமும் கிடையாது.

“முதல்வர் ஸ்டாலினை அம்பேத்கருடன் ஒப்பிடுவதில் தவறில்லை!” - விளக்குகிறார் சிந்தனைச்செல்வன்

இது போன்ற பிரச்னையில் உடனடியாகக் கண்டன அறிக்கை வெளியிடுவதற்கும், சட்டமன்றத்தில் பேசுவதற்கும் எங்களுக்கு எந்தத் தயக்கமும் கிடையாது.

Published:Updated:
சிந்தனைச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனைச்செல்வன்

‘ஆளுநர் மாளிகையைத் தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையில் ஆளுநருக்கு ஒரு பங்களாவை ஒதுக்க வேண்டும்’ என்று ஆளுநருக்கு எதிராகச் சட்டமன்றத்தில் அதிரடியாகப் பேசியவர் ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’யின் பொதுச்செயலாளர்களில் ஒருவரும், அதன் சட்டமன்றக்குழுத் தலைவருமான சிந்தனைச்செல்வன். அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

“ஆளுநர் மாளிகையைக் கையகப்படுத்திவிட்டு, ஆளுநருக்கு கிரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களாவை ஒதுக்க வேண்டும் என்று நீங்கள் பேசியிருப்பது, ஆளுநர் பதவியைச் சிறுமைப்படுத்துவது ஆகாதா?”

“ஆளுநர் மீதான தனிப்பட்ட கருத்தாக இதைப் பார்க்கத் தேவையில்லை. ஆளுநர் என்கிற ஒருவருக்கு நகரின் மையப்பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவிலான மாளிகை அவசியமா என்பதை யோசிக்க வேண்டும். அதுபோக, ஆளுநருக்கு ஊட்டியில் ஒரு பெரிய மாளிகை எதற்கு... ஜனநாயகம் வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில், காலனியாதிக்க மதிப்பீடுகளை மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். அதேபோல, காலனியாதிக்க மரபுகளிலிருந்து மெல்ல மெல்ல நாம் விடுபடவேண்டியதும் அவசியம். அந்த அடிப்படையில்தான் என் கருத்தைத் தெரிவித்தேன்.”

“தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமிடையே மோதல் போக்கு நிலவும் நேரத்தில், இத்தகைய கருத்தைச் சொல்லியிருப்பதை எப்படிப் பார்ப்பது?”

“சனாதன, பாசிசக் கொள்கையைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் மத்திய பா.ஜ.க அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், தங்கள் அரசியல் செயல்திட்டங்களுடன் வருகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்படவிடாமல் மோசமான அரசியலைச் செய்கிறார்கள். தமிழக ஆளுநரும் அப்படிப்பட்ட அரசியலைச் செய்கிறார். அதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆளுநர் மாளிகையை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற கருத்து எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானது. அதை வற்புறுத்தவேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.”

“அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடக்கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தி.மு.க-வின் தோழமைக் கட்சியாக இருப்பதால், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதில், தட்டிக்கேட்பதில் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. சென்னையில் விக்னேஷ் என்கிற தலித் இளைஞரின் லாக்கப் மரணம் குறித்து உடனடியாக விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம் தெரிவிக்கவில்லையே?”

“மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. விக்னேஷ் லாக்கப் மரணத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, அந்தப் பிரச்னையை அரசு எப்படி அணுகியிருக்கிறது என்பதுதான் முக்கியம். ஒரு பிரச்னை கிடைத்துவிட்டது என்பதற்காக, அதைவைத்து ஆளுங்கட்சிக்கு எதிராகப் போராடுவது, ஆளுங்கட்சியை விமர்சிப்பது என்பது சரியான அணுகுமுறை அல்ல.”

“பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஓர் அரசு அதிகாரியை, அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதியைச் சொல்லித் திட்டிய விவகாரத்தில் அவருக்குத் துறை மாற்றப்பட்டதே ஒழிய, அவர்மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அது பற்றி வி.சி.க ஏன் பேசவில்லை?”

“இது போன்ற பிரச்னையில் உடனடியாகக் கண்டன அறிக்கை வெளியிடுவதற்கும், சட்டமன்றத்தில் பேசுவதற்கும் எங்களுக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. நிதானத்துடன், ஆதாரங்களுடன் இத்தகைய பிரச்னையை அணுகுவது அவசியம். பாதிக்கப்பட்ட நபர் என்ன சொல்கிறார் என்பதும் முக்கியம். பாதிக்கப்பட்ட நபர் சொல்லும் தரவுகளை வைத்துத்தான் இதில் ஒரு முடிவெடுக்க முடியும். அந்த அடிப்படையில், எங்கள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாகத் தொடர்புகொண்டு பேசினார். ஆனால், அந்த நபரிடமிருந்து முறையான பதிலும் தரவுகளும் கிடைக்கவில்லை. அதுதான் உண்மை.”

“முதல்வர் ஸ்டாலினை அம்பேத்கருடன் ஒப்பிடுவதில் தவறில்லை!” - விளக்குகிறார் சிந்தனைச்செல்வன்

“இசையமைப்பாளர் இளையராஜா, அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விமர்சிக்கிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதை வி.சி.க வழங்கிய விழாவில், ‘ஒரு அம்பேத்கரின் கைகளால், அம்பேத்கர் விருது பெறும் முதல்வர் அம்பேத்கருக்கு வாழ்த்துகள்’ என்று கவிஞர் கபிலன் கவிதை வாசித்தார். அதை வரவேற்று வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்தீர்கள். ஸ்டாலினை அம்பேத்கருடன் ஒப்பிட்டதை ஏற்கிறீர்களா?”

“சனாதனத்துக்கு எதிரான, சமத்துவத்துக்கான, சமூகநீதிக்கான, சமூக நல்லிணக்கத்துக்கான பயணத்தில் இணைந்து பயணிக்கிற ஆளுமைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது நியாயமானது, சரியானது. அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதை விடுதலைச் சிறுத்தைகள் வழங்கியது. சமூகநீதிக்காகவும், சமூக நல்லிணக்கத்துக்காகவும், சமத்துவத்துக்காகவும் உறுதியுடன் செயல்படும் முதல்வர் ஸ்டாலினை `அம்பேத்கர்’ என்று சொன்னதில் தவறில்லை.”

“சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஈஷா யோகா மைய’த்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவை பெரியாருடன் திருமாவளவன் ஒப்பிட்டார். அது சரியா?”

“ஆரம்பகாலத்தில், இந்து மதத்திலிருக்கும் இறுக்கங்களை உடைக்கக்கூடிய, கெட்டிதட்டிப்போன மதிப்பீடுகளில் தளர்வுகளை ஏற்படுத்துகிற ஓர் ஆன்மிக ஆளுமையாகத்தான் ஜக்கி வாசுதேவின் பயணம் தொடங்கியது. அந்தச் சூழலில் சொன்ன கருத்து அது. ஆனால், ஜக்கி வாசுதேவின் அமைப்பு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து, ஏராளமான சொத்துகள் பெருகிய பிறகு, சனாதன சக்திகளுடன் அவர் கைகோத்துவிட்டார். இன்று அவருக்கு அப்படிப்பட்ட மதிப்பீட்டை வழங்க முடியாது.”

“அம்பேத்கர் பற்றிய விவாதத்துக்கு வருமாறு உங்கள் தலைவர் திருமாவளவனை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைக்கிறார். அது ஓர் ஆரோக்கியமான அரசியல்தானே... ஏன் விவாதத்துக்குச் செல்லவில்லை?”

“பெரியவர் ராமகோபாலன், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களுடன் கொள்கைரீதியில் கடுமையாக முரண்படுகிறோம். அதேநேரத்தில், அவர்கள்மீது எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. காரணம், அவர்கள் தங்கள் கொள்கைக்கான நேர்மையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தக்கூடியவர்கள். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போன்ற தலைவர்களிடம் விவாதிக்கலாம். ஆனால், மோடி, அமித் ஷா வருகைக்குப் பிறகு, பா.ஜ.க புதிய வெர்ஷனாக உருவெடுத்துள்ளது. இவர்களின் உருவாக்கத்தில் வரும் பா.ஜ.க தலைவர்கள் எல்லா விழுமியங்களிலிருந்தும் தங்களை முற்றிலுமாக விடுவித்துக்கொண்டு, அபாண்டங்களையும் அவதூறுகளையும் கட்டமைக்கிற, பரப்புகிற மோசமான அரசியலைச் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஹெச்.ராஜா, அண்ணாமலை, நடிகை காயத்ரி ரகுராம் போன்றவர்களுடன் விவாதிக்க முடியாது. எங்களைப் போன்றவர்களுடன் விவாதிப்பதற்கான தகுதியை அவர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism