Published:Updated:

``அரசியல் கருத்துக்கு, கருத்தைதான் முன்வைக்க வேண்டும்... வன்முறையை அல்ல!" - திருமாவளவன்

திருமாவளவன்
News
திருமாவளவன்

``நாம் தமிழர் கட்சியினர் மேடையில் அவதூறு பேசியதால் சிலர் எதிர்த்ததாக சொல்கிறார்கள். அரசியல் கட்சிகளின் கருத்துக்கு, கருத்தைதான் முன்வைக்க வேண்டும், வன்முறை தீர்வு ஆகாது."- திருமாவளவன்.

அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வதற்காக வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க நடந்த எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்த தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லாவை நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்தவர் முதல்வர் ஸ்டாலின். சமூக நீதி அரசை நடத்தும் முதல்வரை பாராட்டும் விதமாக நாளை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 24-ம் தேதி அம்பேத்கர் சுடர் விருது வழங்குகிறோம். தி.மு.க சமூக நீதி அரசை ஆதரித்து வி.சி.க தொடர்ந்து சமூக நீதி களத்தில் உற்ற துணையாக இருக்கும்.

கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுடன் திருமாவளவன்
கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுடன் திருமாவளவன்

நடந்துமுடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதாவை பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது உள் நோக்கம் கொண்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கு வாக்களிக்காத சிறுபான்மை மக்களின் வாக்குகளை கடைசி நேரத்தில் அவர்கள் நீக்க வாய்ப்பிருக்கிறது. திருமண வயது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலோட்டமாக பெண்களின் உடல்நலம் மற்றும் இதர பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு கொண்டுவந்துருப்பதாக சொன்னாலும், வேறு உள்நோக்கம் உள்ளது. பொது சிவில் சட்டத்தை கொண்டுவரும் நோக்கத்தின் அச்சாரம்தான் இந்த நடவடிக்கை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாட்டில் தனிச் சட்டங்கள் இருக்கக்கூடாது, திருமணம் உள்ளிட்ட சட்டங்கள் எல்லோருக்கும் ஒன்றுதான் என கொண்டு வரும் நோக்கில் திருமணச்சட்டம் கொண்டுவந்துள்ளது. சாதி மறுப்பு, மதமறுப்பு திருமணம் நடந்தால் அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ்கைது செய்யும் திட்டம் வைத்திருக்கிறார்கள். ஹரித்துவாரில் நடந்த சங்கபரிவார் கூட்டத்தில் இந்தியா இந்துக்களுக்கான தேசம் அதை நிரூபித்து காட்டுவோம் இல்லை என்றால் மரித்துப்போவோம் என உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் இரண்டுக்கும் அதுதான் நோக்கம். இதை ஜனநாயக சக்திகள் உணர்ந்து ஒன்றுபட வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்

நாம் தமிழர் கட்சியினர் மேடையில் அவதூறு பேசியதால் சிலர் எதிர்த்ததாக சொல்கிறார்கள். அரசியல் கட்சிகளின் கருத்துக்கு, கருத்தைதான் முன்வைக்க வேண்டும், வன்முறை தீர்வு ஆகாது. இதில் தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சரை கைது செய்ய நடவடிக்கை முன்வைக்கும் நிலையில், எதிர்கட்சிகளை ஜனநாயக முறைப்படி செயல்படவிடாமல் தடுப்பதாக எதிர்கட்சி தலைவர் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க தரப்பில் வந்த புகார் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதை பழிவாங்குகிறது எனபார்க்க வேண்டியதில்லை. தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த போக்கை வி.சி.க கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்டுத்தரவேண்டும்.

குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரை நீக்கியது ஜனநாயக படுகொலை. முன்பு நடந்துமுடிந்த கூட்டத்தொடரில் அத்துமீறி நடந்ததாக உறுப்பினர்கள் நீக்கப்பட்டது ஜனநாயக படுகொலை. எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமலும், அடாவடித்தனமாக இரு அவைகளையும் பா.ஜ.க நடந்திருக்கிறது. இது நாடாளுமன்றக் கூட்டத்தில் கறுப்பு பக்கம் என கூறும் அளவுக்கானது" என்றார்.