Published:Updated:

"அந்தக் கொலைகளை அப்பா செய்திருக்கக்கூடாது!" - மனம் திறக்கும் வீரப்பன் மகள் வித்யாராணி

வீரப்பன் மகள் வித்யாராணி

"அப்பா உயிரோட இருந்திருந்தா ஒரு கட்சி ஆரம்பித்து தலைவராகியிருப்பார். நானும் தங்கையும் அவருக்கு பக்கபலமா இருந்திருப்போம். அப்பா என்கிற ரோல் என் வாழ்க்கையில் இல்லாம போய்டுச்சி" - வீரப்பன் மகள் வித்யாராணி சிறப்புப் பேட்டி

"அந்தக் கொலைகளை அப்பா செய்திருக்கக்கூடாது!" - மனம் திறக்கும் வீரப்பன் மகள் வித்யாராணி

"அப்பா உயிரோட இருந்திருந்தா ஒரு கட்சி ஆரம்பித்து தலைவராகியிருப்பார். நானும் தங்கையும் அவருக்கு பக்கபலமா இருந்திருப்போம். அப்பா என்கிற ரோல் என் வாழ்க்கையில் இல்லாம போய்டுச்சி" - வீரப்பன் மகள் வித்யாராணி சிறப்புப் பேட்டி

Published:Updated:
வீரப்பன் மகள் வித்யாராணி

வீரப்பன் மறைந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் அவர் குறித்த மர்மங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவை பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வீரப்பன் மகள் வித்யாராணி, "பாஜக நாடு முழுவதும் பிரபலமான கட்சி. அதன்மூலம், மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்துள்ளேன்" என்று கூறி கடந்த 2020-ம் ஆண்டு இதே ஜூலையில்தான் அரசியல் என்ட்ரி கொடுத்தார். இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆனந்த விகடன் நேர்காணலுக்காக வித்யாராணியை, அவர் நடத்திவரும் பள்ளியில் ஒரு மாலை வேளையில் சந்தித்தோம். அவரது, அப்பா வீரப்பன் குறித்து பல்வேறு தகவல்களை மனம் விட்டு பகிர்ந்துகொண்டார்...

வழக்கறிஞருக்கு படித்துவிட்டு பள்ளி நடத்தவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

"'என் கையால பலபேரோட உயிர் போயிருக்கு. நீ டாக்டராகி நிறைய உயிரைக் காப்பாத்தணும்னு சொல்லி என்னை மருத்துவம் படிக்கச்சொன்னார் அப்பா. ஆனால், எனக்கு சிவில் சர்வீஸ் மீதுதான் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வமும் கொஞ்ச காலம்தான். வளர வளர விருப்பங்கள் மாறிக்கொண்டே இருக்குமல்லவா?. பின்பு, வழக்கறிஞருக்கு படித்தேன். பிரச்னைகளுக்காகதான் வழக்கறிஞரிடம் வருவார்கள். பிரச்னைகள் உருவாகும் முன்னரே நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும். அந்த இடத்தில் ஆசிரியர்கள் உள்ளார்கள். நானும் தங்கையும் பெற்றோருடன் வளரவில்லை. எங்களை வளர்த்தெடுத்தது பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்தான். அவர்களே, எங்களைப் பெற்றோர்களாகப் பார்த்துக்கொண்டார்கள். அதனால், நல்ல மாணவ சமுதாயத்தை குழந்தையிலிருந்தே உருவாக்கவேண்டும் என்று நினைத்ததால் வித்யா ப்ளே ஸ்கூலை ஆரம்பித்தேன். இங்கு குழந்தைகளுக்கு நல்ல சிந்தனைகளோடு பாசிட்டிவிட்டியான விஷயங்கள்தான் கற்பிக்கப்படுகின்றன".

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வித்யாராணி வீரப்பன்
வித்யாராணி வீரப்பன்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்தின் வீரர், ஹீரோ என்றெல்லாம் புகழப்படும் உங்கள் அப்பாவை தவறாகவும் விமர்சிக்கிறார்களே?

"அப்பா பலருக்கு நல்லதும் செய்திருக்கார். சில இடங்களில் சூழ்நிலைகளால் சில உயிர்களையும் எடுத்திருக்கார். இதுபோன்ற செயல்களை அவர் கண்டிப்பா செய்திருக்கக்கூடாது. நானே அப்பா இல்லாமல் கஷ்டப்படுகிறேன். அதுபோல்தானே, அவரால் உயிரிழந்த குடும்பத்தின் குழந்தைகள் கஷ்டப்படுவார்கள். என் ஃப்ரண்ட்ஸில் நான் வீரப்பன் பொண்ணு என்று தெரிந்ததும் ரொம்ப பெருமையா ஃபீல் பண்ணுவார்கள். அதேபோல, கொஞ்சம் பத்து வார்த்தை பேசவேண்டிய இடத்தில் ரெண்டு வார்த்தை பேசி பயந்து ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் கண்டிப்பா நான் அப்பாவை நெகட்டிவா நினைக்கமாட்டேன்".

வித்யாராணி
வித்யாராணி

அப்பாவிடம் கற்றுக்கொண்டது?

"யாராவது துரோகம் பண்ணினா கோபப்படுவார். யாரையாவது நம்பிட்டா ரொம்ப நம்பிடுவார். ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டா உயிரே போனாலும் அதுக்காக கடைசிவரை நிற்கும் பிடிவாதமானவர். மற்றவர்களுக்கு கொடுத்து சந்தோஷப்படணும்னு நினைக்கிறவர். இந்தக் குணம் எல்லாம் எனக்கும் இருக்கு. நான் பார்த்த, கேள்விப்பட்ட வரைக்கும் அப்பா மனுஷங்க மேல அக்கறையாதான் இருந்திருக்கார். தப்புன்னா தப்புன்னு சொல்லி திருத்தவும் செய்திருக்கார். மற்றவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து தாங்கமுடியாத மனிதராக வாழ்ந்திருக்கார். அப்படிப்பவட்டவர் போய் எப்படி கொலை பண்ணார் என்பது தெரியலை. அப்படின்னா, அவரது மனதை பாதிக்கும்படியான விஷயங்கள் நடந்திருக்கும். அவர்கிட்ட மோசமாக நடந்துகொண்டவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதைத்தான் யோசிக்க வைக்கிறது. ஒரு மனுஷன் இது மாதிரியான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கார்னா, அது சாதாரணமான விஷயமே கிடையாது. ஆனாலும், அப்பா அடுத்தவங்க உயிரை எடுத்திருக்கக்கூடாது".

வித்யாராணி
வித்யாராணி

அப்பா காட்டுல கட்டுக்கட்டா பணம் வச்சிருக்கிறதா சொல்றாங்களே? அதுப்பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?

"எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க. எங்களுக்கு அதைப் பத்திலாம் தெரியாது. காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள்கிட்டேயும் அதிகமான பேச்சுவார்த்தை இல்லை. ஆனா, இப்படில்லாம் சொல்றதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வரும். அப்பாவோட மறைவுக்குப்பிறகு அப்பப்போ அம்மாவுக்கு பணரீதியாக கஷ்டம் இருந்திருக்கு. அப்பா உயிரோட இருக்கும்போதே, அம்மா உட்பட எங்கக் குடும்பமே போலீஸோட கன்ட்ரோல்லதான் இருந்தோம். ஹாஸ்டலில் தங்கிப் படிச்சாலும் எங்களுக்குத் தெரியாமலேயே போலீஸ் ஃபாலோவ் பண்ணிட்டே இருந்தாங்க. இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையைத்தான் நாங்க வாழ்ந்தோம்".

வித்யாராணி
வித்யாராணி

அப்பா உயிருடன் இருந்திருந்தால்?

"அப்பா உயிரோட இருந்திருந்தா சொல்லவே தேவையில்லை. கண்டிப்பா, ஒரு கட்சி ஆரம்பித்து தலைவராகியிருப்பார். நானும் தங்கையும் அவருக்கு பக்கபலமா இருந்திருப்போம். அப்பாவைப் பத்தி எனக்கு தெரியும். சரி என்று படுவதை தெளிவாக செய்வார். வெளியில் வந்திருந்தால் சட்டப்படி சில விஷயங்களை செய்திருப்பார். தப்புன்னா தப்புன்னு சொல்ற தைரியம் அவர்கிட்ட இருந்திருக்கு. அதுக்கான சூழலையும் அமைச்சிக்கிட்டார். அப்பா இறக்கும்போது, ஊட்டியில் நான் 9 வது படிச்சிக்கிட்டிருந்தேன். இறந்துட்டார்னு சொன்னப்போ நான் நம்பல. அதுக்குமுன்னாடி நிறைய செய்திகள் இதுபோல வந்திருக்கு. அதுமாதிரிதான் இதுவும் இருக்கும்னு நினைச்சிட்டேன். அந்தக் காலகட்டம்லாம் மறக்க முடியாதது.

நான் குழந்தையா இருக்கும்போதே பாட்டி கையில் என்னை கொடுத்துட்டு அம்மா காட்டுக்குப் போய்ட்டாங்க. பாட்டியைத்தான் அம்மான்னு கூப்பிடுவேன். அப்பாவையும் அம்மாவையும் குழந்தையிலிருந்தே ரொம்ப மிஸ் பண்ணேன். அப்பப்போ மட்டும் வந்துப் பார்த்துட்டுப் போவாங்க. குறிப்பா, அப்பா என்ற ரோலே என் வாழ்க்கையில் இல்லாம போய்டுச்சி. மழை வரும்போதெல்லாம் நாம வீட்டுக்குள்ள ஓடிப்போறோம். ஆனா, 35 வருஷமா அப்பாவுக்கு அந்த கொடுப்பினைக்கூட இல்லை. இப்படியொரு வாழ்க்கையை அப்பா எப்படி கஷ்டப்பட்டு வாழ்ந்திருக்கார்னு நினைச்சா பிரமிப்பாவும் கஷ்டமாவும் இருக்கு. மறைந்தாலும் என்கூடவே இருக்காருன்னு நம்புறேன். உயிரோட இருந்திருந்தா கூடவே இருந்து சப்போர்ட் பண்ணிருப்பேன். அவரோட மீசை வீரத்துக்கான அடையாளம். எப்போல்லாம் நான் துவண்டு போயிருக்கேனோ, அப்போல்லாம் அந்த மீசையை நினைச்சிக்குவேன். நான் யாருன்னு அந்த மீசை எனக்கு உணர்த்திக்கிட்டே இருக்கும்".

இன்னும் வீரப்பன் குறித்து வித்யா ராணி பகிர்ந்துகொண்ட விஷயங்களை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்