Published:Updated:

`நான் வளர்ச்சியை மட்டுமே பா.ஜ.க-வில் பார்க்கிறேன்!' - வீரப்பன் மகள் வித்யா ராணி

வித்யா ராணி
வித்யா ராணி

``ஒவ்வொரு கட்சியின் மீதும் வளர்ச்சி மற்றும் விமர்சனம் இருக்கும். நான் வளர்ச்சியை மட்டுமே பா.ஜ.க-வில் பார்க்கிறேன்''

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். அவரையடுத்து பா.ம.க-வில் இருந்து வந்திருந்த பலரும் அந்தக் கட்சியை விட்டு விலகி பா.ஜ.க-வில் இணைந்தனர்.

பா.ஜ.க-வில் இணைப்பு
பா.ஜ.க-வில் இணைப்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ.க சார்பாக மாற்று அணியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணையும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க-வின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன், கிழக்கு மாவட்டத் தலைவர் தர்மலிங்கம், மேற்கு மாவட்டத் தலைவர் நாகராஜ் உட்படப் பலரும் கலந்துகொண்டார்கள்.

Vikatan

வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி பெங்களூரில் சட்டக் கல்லூரியில் பயின்றுகொண்டு கிருஷ்ணகிரியில் தன் கணவர் தீபக்குடன் வசித்து வருகிறார். இவர் விழாவில் கலந்துகொண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்குப் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் அட்டையை தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் வழங்கினார். விழாவில் தொடர்ந்து பா.ம.க முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் சிவக்குமார், அர்ஜுனன் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி தங்களை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டனர்.

பா.ம.கவினர்
பா.ம.கவினர்

இதுபற்றி வித்யா ராணியிடம் பேசினோம். ``எனக்குப் பல கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல், பள்ளி ஒன்று நடத்தி வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களின் வளர்ச்சிக்குத் தனி ஒரு மனிதராக உழைத்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் மீதுள்ள ஈர்ப்பினால் பா.ஜ.க-வில் இணைந்துள்ளேன்.

இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வங்கிக் கடன்கள், காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுகிறார். மோடியின் ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது'' என்றவரிடம் நீட், சி.ஏ.ஏ போன்ற சட்டங்களால் தமிழக மக்கள் பா.ஜ.க மீது அதிருப்தியில் இருக்கிறார்களே என்றதற்கு ``ஒவ்வொரு கட்சியின் மீதும் வளர்ச்சி மற்றும் விமர்சனம் இருக்கும். நான் வளர்ச்சியை மட்டுமே பா.ஜ.க-வில் பார்க்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு