Published:Updated:

`தயவுசெய்து தி.மு.க-வுக்குப் போயிடுங்க!’ - முன்னாள் அமைச்சரிடம் கெஞ்சும் வேலூர் அ.தி.மு.க

முன்னாள் அமைச்சர் விஜய்
முன்னாள் அமைச்சர் விஜய்

வேலூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரை அவமானப்படுத்திய அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜய், தி.மு.க-வுக்குத் தாவவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சீரமைக்கப்பட்ட வேலூர் புதிய மாவட்டத்தில், அ.தி.மு.க-வை பலப்படுத்த வியூகம் வகுத்திருக்கிறது அந்தக் கட்சியின் தலைமை. இதற்காகவே, அமைப்புரீதியாக தி.மு.க-வைப்போலவே அ.தி.மு.க-விலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை நான்காகப் பிரித்துள்ளனர். மாநகர மாவட்டச் செயலாளராக எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர மாவட்டச் செயலாளராக வேலழகன் ஆகியோரை நியமித்துள்ளனர். இந்தநிலையில், புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனத்திலும் புகைச்சல் காணப்படுகிறது. மாநகர மாவட்டச் செயலாளராக அப்பு நியமிக்கப்பட்டதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில நிர்வாகிகள், உள்ளடி வேலையில் இறங்கியிருக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். உள்ளடி வேலைக்கு தலைமை தாங்கி, பிள்ளையார் சுழிபோட்டதே முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய்தான் என்கிறார்கள் வேலூர் அ.தி.மு.க புள்ளிகள்.

முதலமைச்சரிடம் வாழ்த்துபெற்ற எஸ்.ஆர்.கே.அப்பு
முதலமைச்சரிடம் வாழ்த்துபெற்ற எஸ்.ஆர்.கே.அப்பு

மருத்துவரான விஜய்க்கு, மருத்துவ அணியில் மாநில இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், `மாவட்டச் செயலாளர் பதவி கைநழுவிப்போனதை விஜய்யால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை’ என்கிறார்கள். மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்து பெற வந்த புதிய மாவட்டச் செயலாளர் அப்புவை மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும் விஜய்மீது கொந்தளிக்கிறார்கள் அ.தி.மு.க புள்ளிகள். நாளுக்கு நாள் விஜய்யின் செயல்பாடு மிக மோசமாக இருப்பதால், அவரது ஆதரவாளர்களும் கட்சிதான் முக்கியம் என்று கூறிவிட்டு விலகி நிற்பதாகவும் கூறுகிறார்கள். விஜய்யின் நடவடிக்கையைப் பார்த்து, அவரது கார் ஓட்டுநர்கூட காட்டமாகி, ஓட்டம்பிடித்ததாக வேலூர் அ.தி.மு.க வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

சென்னை: வக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு? - புதிய ரூட்டில் அ.தி.மு.க

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சி பிளவுபட்டபோது, பணத்துக்காக டி.டி.வி.தினகரன் அணிக்குத் தாவியவர்தான் முன்னாள் அமைச்சர் விஜய் என்றும் கூறப்படுகிறது. பின்னாளில் மௌனகீதம் வாசித்தபடி, அ.தி.மு.க-வுக்கே வந்துவிட்டார் என்கிறார்கள். இந்தநிலையில், விஜய் மீண்டும் அ.தி.மு.க-விலிருந்து விலகவிருப்பதாகத் தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. `இந்த முறை அவர் தி.மு.க-வில் ஐக்கியமாக உள்ளதாகவும், விஜய் செல்வதால் அ.தி.மு.க-வுக்குத்தான் நல்லது. தயவுசெய்து அவரைக் கட்சியைவிட்டு போகச் சொல்லுங்கள்’ என்றும் வேலூரில் கிசுகிசுக்கிறார்கள் அ.தி.மு.க புள்ளிகள். கட்சித்தாவலுக்காக, தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யாகவும் உள்ள கதிர் ஆனந்திடம் விஜய் பேசியதாகவும் கூறப்படுகிறது.

எம்.பி கதிர்ஆனந்த்
எம்.பி கதிர்ஆனந்த்

இதுபற்றி எம்.பி கதிர் ஆனந்திடம் கேட்டபோது, ``என்கிட்டயா பேசினாரு? எனக்கு விஜய்யும் தெரியாது, அஜய்யும் தெரியாது. யாரோ ஒருத்தர் ஏதோவொரு கட்சியில் அதிருப்தியோடு இருந்தால், அதுக்கு நான் என்ன பண்ணுவேன். சமூக வலைதளங்களில் எந்தக் கேள்வி வந்தாலும், அதற்கு இந்த கதிர் ஆனந்துதான் கிடைத்தாரா?’’ என்றார் தந்தையின் அதே கலகலப்புத் தொனியில்.

கட்சித்தாவல் குறித்துத் தெரிந்துகொள்ள முன்னாள் அமைச்சர் விஜய்யை போனில் தொடர்புகொண்டோம். போனை எடுத்துப் பேசிய அவரது உதவியாளரிடம் விவரத்தைச் சொன்னோம். அவர், ``விஜய் வெளியில் சென்றிருக்கிறார்’’ என்றுகூறி அழைப்பைத் துண்டித்துவிட்டார். அதன் பிறகு அவர் தரப்பிலிருந்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜய் கருத்துத் தெரிவித்தால், உரிய பரிசீலனைக்குப் பின்னர் அவரது கருத்தையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு