Published:Updated:

`கட்சிப் பாகுபாடு பார்க்கிறோமா?’ - தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டுக்கு வேலூர் கலெக்டர் பதில்!

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

`கட்சிப் பாகுபாடு பார்ப்பதில்லை. தகுதியான பயனாளிகளைத் தேர்வுசெய்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம். தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தவறான தகவலைச் சொல்கிறார்கள்’ என்கிறார் வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்.

`உதவித்தொகை உட்பட அனைத்துத் திட்டங்களையும் தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும் அதிகாரிகளும் செயல்படுகிறார்கள்’ என்றும் வேலூர் மாவட்ட தி.மு.க-வினர் தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார்கள். கடந்த மாதம் 15-ம் தேதி அணைக்கட்டுப் பகுதியில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் 2,153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அமைச்சர் கே.சி.வீரமணி
அமைச்சர் கே.சி.வீரமணி

அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் சண்முக சுந்தரம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், ஆவின் தலைவர் வேலழகன் உட்படப் பலர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், ‘தன்னிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது அலட்சியம் காட்டுகிறார்கள்’ என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார். கோபமடைந்த அமைச்சர் வீரமணி, ‘தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் விளம்பரம் தேடுகிறார்’ என்று மேடையிலேயே விமர்சனம் செய்தார்.

அமைச்சருக்கும் தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு கட்சியினரும் வேட்டியை முட்டிக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு மல்லுக்கட்டியதால் அரங்கமே போர்க்களமாக அதிர்ந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை, ஆளும் கட்சியினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மாவட்ட நிர்வாகம் நடத்தாமல் இருக்கிறது என்கிற புதிய குற்றச்சாட்டையும் கொளுத்தி போட்டுள்ளனர் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்.  

தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார்
தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார்

நம்மிடம் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், ``மக்களுக்காகத் தான் நாங்கள் குரல் கொடுக்கிறோம், கோரிக்கை வைக்கிறோம். அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை. ஆளும்கட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதிகாரிகளும் ஒத்துழைப்பு தருவதில்லை. என்னுடைய அணைக்கட்டுத் தொகுதியில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கிறது. எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. என் தொகுதியில் மேல் அரசம்பட்டு அணை கட்டப்பட்டால் அந்தப் பகுதியே செழிப்பாக மாறும்.

மலைக் கிராமங்களில் சாலை வசதியில்லை. அங்கு வசிக்கும் மக்களின் பரிதாப நிலையைப் பலமுறை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் நடவடிக்கையில்லை. அணைக்கட்டுப் பகுதியில் நடைபெற்ற அதே போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, வேலூர் சட்டமன்றத் தொகுதியிலும் கடந்த 28-ம் தேதியோ 30-ம் தேதியோ நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். இதுவும் தி.மு.க எம்.எல்.ஏ-வின் தொகுதி என்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டனர்’’ என்றார் கொதிப்புடன்.

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

இந்தப் புகார் குறித்து மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரத்திடம் விளக்கம் கேட்டோம். ‘‘மனுக்கொடுக்கிற மக்கள் எந்தக் கட்சி என்று நாங்கள் பார்ப்பது கிடையாது. எம்.எல்.ஏ-க்கள் மனுக்களை வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக நாங்களே நேரடியாகச் சென்று மனுக்களைப் பெறுகிறோம். கட்சி பாகுபாடு பார்க்காமல் தகுதியின் அடிப்படையில் பயனாளிகளைத் தேர்வுசெய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தவறான தகவலைச் சொல்கிறார்கள்’’ என்றார் திட்டவட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு