Published:Updated:

`முதல் பலியாக, என் உயிர்த் தியாகம் இருக்கும்!’ -வேலூர் சி.ஏ.ஏ போராட்டத்தில் கொதித்த கதிர் ஆனந்த்

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

``குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் வகையில், முதல் பலி வேண்டுமென்றால் என் உயிர்த் தியாகம் கண்டிப்பாக இருக்கும்’’ என்று ஆவேசமாகப் பேசினார் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வேலூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த், ``தமிழகத்தில், எனக்குத் துரைமுருகனின் மகன் என்ற அடையாளம் உள்ளது. வெளிநாட்டுக்குப் போனால் `தமிழன்’ என்று சொல்ல முடியாது. `இந்தியன்’ என்பதே நம் அடையாளம்.

போராட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியப் பெண்கள்
போராட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியப் பெண்கள்

குடியுரிமைச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களை எந்த வகையிலாவது தண்டிக்க வேண்டும். சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தைப் பறிக்க வேண்டும். சிறுபான்மையினரின் சலுகைகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டம். இந்தியா பல மதங்களைச் சார்ந்த பூமி என்பதை மறைத்துக் காவி போர்த்தப்பட்ட `இந்து’ பூமியாக மாற்ற நினைக்கிறார்கள். இது நியாயமா.. பிரதமராக வந்திருப்பவர் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை என இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் சிறுபான்மையினரை ஒரு வகையினராகத் தள்ளிவிட வேண்டும் என்பதற்காக மீண்டும் கணக்கெடுப்பு எடுக்கிறார்கள். தமிழகத்தில் இது நடக்கவே நடக்காது. என்ன விலை கொடுத்தாலும் அதைத் தடுத்து நிறுத்துவோம்.

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஓட்டெடுப்பு நடக்கும்போது, நாங்கள் ரத்தத்தைக் கக்குவதுபோல் பேசினோம். இந்தச் சட்டம் வந்துவிட்டால் நாடு போய்விடுமே என்று முகத்தில் பேய் அறைந்தது போன்று நாங்கள் உட்கார்ந்திருந்தோம். ஒரே ஒரு நபர் இதை ஆதரித்துப் பேசினார்.

`துரைமுருகன் கொண்டாட வேண்டிய வெற்றியல்ல!' - வேலூரில் கதிர் ஆனந்த் கரைசேர்ந்த பின்னணி

குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் வகையில் முதல் பலி வேண்டும் என்றால், என்னுடைய உயிர்த் தியாகம் கண்டிப்பாக இருக்கும். இந்துவோ, இஸ்லாமியரோ ஓர் அணியில் நிற்போம். எனக்கு வாக்களித்தவர்கள், என் தாய் போன்றவர்கள். என் தாய்க்கு ஏதாவது என்றால் நான் மனிதத்தனமாக இருக்க மாட்டேன். கண்டிப்பாகப் போராடுவேன்.

போராட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள்
போராட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கடைசி கையெழுத்து போடும் வரை ஒன்றாக இருந்து போராட வேண்டும். இது உங்கள் போராட்டம். குடியுரிமைக்கான போராட்டம். இதை நீங்கள் எந்த நேரத்திலும் கைவிடக் கூடாது. உங்களுக்குத் தோள் கொடுப்பவனாக உங்களோடு நிற்பேன்’’ என்றார் ஆவேசமாக.

அடுத்த கட்டுரைக்கு