Published:Updated:

`தமிழக இளைஞர்கள் அனைவரும் பி.ஜே.பி-யில் இணைவார்கள்! - வித்யா வீரப்பன்

வித்யா வீரப்பன்
வித்யா வீரப்பன்

பி.ஜே.பி-யில் இந்துகள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் பல தரப்பு மக்கள் வரை அனைவரும் இருக்கிறார்கள். சாதி, மதம் பார்க்காமல் சமமாக நடத்துவதோடு, அனைவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

சந்தனக்கடத்தல் வீரப்பனை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் என மூன்று மாநில காவல்துறைக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். இவர் 2004-ம் ஆண்டு தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய மூத்த மகள் வித்யா வீரப்பன், கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்குத் தற்போது மாநில இளைஞரணி துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

வித்யா வீரப்பன்
வித்யா வீரப்பன்

வித்யா வீரப்பனிடம் பேசினோம். ''என் தந்தையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை, எளிய மக்களுக்கும் சேவை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் இருந்தேன். இந்நிலையில் பி.ஜே.பி கட்சியில் உள்ள எனது உறவினர் சாய்சுரேஷ் என்பவர், என்னை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஐயாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் மூலமாக முரளிதரராவ் முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைந்தேன்.

`நான் வளர்ச்சியை மட்டுமே பா.ஜ.க-வில் பார்க்கிறேன்!' - வீரப்பன் மகள் வித்யா ராணி

கட்சியில் இளைஞரணித் தலைவராக இருக்கும் வினோஜ் செல்வம் மற்றும் மேற்பார்வையாளர் ராகவன் ஆகியோரின் பரிந்துரையில் எனக்கு மாநில இளைஞரணி துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பி.ஜே.பி-யில் பல வருடங்களாகப் பல தொண்டர்கள் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிடைக்காதப் பெரிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

வித்யா வீரப்பன்
வித்யா வீரப்பன்

இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். பி.ஜே.பி, நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்படும் கட்சி. பி.ஜே.பி-யில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரும் இருக்கிறார்கள். சாதி, மதம் பார்க்காமல் சமமாக நடத்துவதோடு அனைவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

எந்த ஒரு பின்புலமும் இல்லாத எனக்கு இவ்வளவு பெரிய பதவி கொடுக்கப்பட்டிருப்பதே அதற்கு சாட்சி. நான் தமிழ்நாடு முழுவதும் சென்று இளைஞர்களை சந்தித்துப் பேசுவதோடு அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்க்கவும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் பி.ஜே.பி-யில் இணைவார்கள்.

வித்யா வீரப்பன்
வித்யா வீரப்பன்

தமிழக மக்கள் மீது மிகுந்த மரியாதை எனக்குண்டு. அவர்கள் நல்லது செய்பவர்களை எப்போதும் மதிப்பதோடு ஆதரிக்கவும் செய்வார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவராக இருந்து பல நன்மைகளை செய்து வருகிறார். இதனால் தமிழக மக்கள் மத்தியில் பாரத பிரதமருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் ஏற்கெனவே பி.ஜே.பி தவிர்க்க முடியாத கட்சியாக இருந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு