Published:Updated:

“யாரை ஏமாற்ற இந்த அரசியல்?” - விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் சர்ச்சை...

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
விஜய்

ஓவியம்: கோபி ஓவியன்

“யாரை ஏமாற்ற இந்த அரசியல்?” - விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் சர்ச்சை...

ஓவியம்: கோபி ஓவியன்

Published:Updated:
விஜய்
பிரீமியம் ஸ்டோரி
விஜய்

2013, ஆகஸ்ட். விஜய் நடிப்பில் உருவான ‘தலைவா’ படத்துக்குச் சிக்கல் முளைத்த நேரம். படத்தின் தலைப்புக்குக் கீழே ‘டைம் டு லீட்’ என்கிற வாசகம் இருந்ததை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரசிக்கவில்லை; அதனால்தான் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் செய்திகள் இறக்கைகட்டிப் பறந்தன. பதறிப்போன விஜய்யும், அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கொடநாட்டிலிருந்த ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்றார்கள். ஆனால், கொடநாடு எஸ்டேட் வாசலில் பல மணி நேரம் காத்திருந்தும் கதவுகள் திறக்கப்படாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். பிறகு, கையைக் கட்டிக்கொண்டு ‘உதவுங்கள் அம்மா’ என்று உருக்கமான வீடியோவை வெளியிட்டார் விஜய். தொடர்ந்து படத்தின் தலைப்பிலிருந்து ‘டைம் டு லீட்’ வாசகம் நீக்கப்பட்ட பிறகே படம் வெளியானது. இந்த நிலையில் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் மீண்டும் தேர்தல் அரசியலில் அடியெடுத்துவைத்திருப்பது, “யாரை ஏமாற்ற விஜய் இந்த அரசியல் நாடகத்தை ஆடுகிறார்... அரசியல் ஆசையிருந்தால் நேரடியாக வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கலாமே?” என்றெல்லாம் சூடான விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானவுடனேயே, ‘குண்டக்க மண்டக்க’ அரசியலை ஆரம்பித்துவிட்டது விஜய் மக்கள் இயக்கம். மாநிலத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்குத்தான் பொதுச் சின்னம் ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால், தேர்தலில் போட்டியிட விஜய் அனுமதி அளித்ததையே சுட்டிக்காட்டி, “தளபதி அனுமதி கொடுத்துட்டாரு. நாங்க தமிழ்நாடு முழுவதும் போட்டியிடப்போறோம். எங்களுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கணும்” என்று விஜய் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை வைத்தார்கள். இதை நிராகரித்த தேர்தல் ஆணையம், ‘சுயேச்சையாகப் போட்டியிடுங்கள்’ என்று கூறிவிட்டது.

“யாரை ஏமாற்ற இந்த அரசியல்?” - விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் சர்ச்சை...

தேர்தல் பிரசாரத்தின்போது இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்த விஜய் அனுமதி அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து வேட்பாளர் தேர்வுகள் தடதடத்தன. ஆனால், போட்டியிட ஆள்தான் கிடைக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் வாக்காளர்களுக்கு வலைவீசிய நிலையில், வேட்பாளர்களுக்கு வலைவீசியது விஜய் மக்கள் இயக்கம். இது குறித்து நம்மிடம் பேசிய விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் சிலர், “தேர்தல் ஆணையம் ‘சுயேச்சையாகத்தான் போட்டியிட முடியும்’ என்று சொன்னதை நிர்வாகிகள் சிலர் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டனர். சில சுயேச்சை வேட்பாளர்களிடம், ‘நாங்க உங்களுக்கு ஆதரவு தர்றோம். பிரசாரத்துக்கு இயக்கக் கொடியோட வர்றோம்’ என்று உத்தரவாதம் அளித்தார்கள். பிறகு, பிரசாரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்தி, சுயேச்சை வேட்பாளரை இயக்கத்தின் வேட்பாளராக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த 136-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் அறிவுச்செல்வி, தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அவரை விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் என்றே மீடியாக்களும் கூறின. ஆனால் அவரோ, ‘நான் சுயேச்சை வேட்பாளர்தான். எனக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தானாக வந்து ஆதரவு தந்தார்கள். அதை ஏற்றுக்கொண்டோம்’ என்று அறிவுச்செல்வி போட்டு உடைத்த பிறகே இவர்களின் ‘குட்டு’ வெளிப்பட்டது. தமிழகம் முழுவதும் போட்டியிட்டதாகக் கூறும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்களின் வேட்பாளர்களின் பெயர், போட்டியிட்ட வார்டு விவரங்களை வெளியிடலாமே? இத்தனைக்கும் தனது இயக்க வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றுகூட விஜய் அறிக்கை வெளியிடவில்லை. யாரை ஏமாற்றுவதற்காக அவர் இந்த அரசியலைச் செய்கிறார் என்று புரியவில்லை. இன்னொரு பக்கம் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டக் கட்டமைப்பை உடைத்து, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கே பதவிகளை வழங்குகிறார் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த். இந்த உள்ளடி அரசியலால் பலரும் ஓரங்கட்டப்பட்டுள்ளோம்” என்று குமுறினார்கள்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “திரைத்துறையில் நடிகர்கள் அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் வளர்ச்சியால், தன் இடத்தைத் தக்கவைப்பதற்காக இப்படியான அரசியல் நாடகத்தை நடத்துகிறார் நடிகர் விஜய். அரசியல் பரபரப்புகளால் கிடைக்கும் விளம்பரத்தை, தனது சினிமா தொழிலில் மூலதனமாக்க முயல்கிறார் அவர். விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகி தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க-வுக்கு ஆதரவு அளிக்கிறார். தேர்தல் அரசியலில் விஜய் தீவிரமாக இருப்பவராக இருந்திருந்தால், இந்நேரம் ஜெகனை நீக்கியிருக்கலாமே? இதுவரை வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிடவில்லை. இந்த நிலையில், தேர்தலில் வென்றுவிட்டோம் என்று விஜய் மக்கள் இயக்கத்தினர் சொல்வதெல்லாம் அரசியல் நாடகம்” என்றார். இது தொடர்பாக விளக்கம் பெற விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்தைத் தொடர்புகொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

‘‘ஏற்கெனவே ‘ரஜினி’ அரசியலில் அவரின் ரசிகர்கள் ஏமாந்தது போதும்... அரசியல் ஒன்றும் ‘அரபிக் குத்து’ அல்ல... உண்மையான அரசியல் என்பது மக்கள் மீதான அக்கறை!’’ என்பதே விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகிகளின் ஆதங்கமாக இருக்கிறது.