Published:Updated:

தஞ்சாவூர்: சாப்பாடு இலவசம்; தட்டு ரூ12 - விஜய் விருந்தகத்தில் முறைகேடு புகார் எழுப்பும் ரசிகர்கள்

விஜய் உடன் விஜய் சரவணன்
விஜய் உடன் விஜய் சரவணன் ( ம.அரவிந்த் )

``காலை உணவுக்கு ரூ 2,500, மதிய உணவுக்கு ரூ 3,500 வசூல் செய்கிறார். இதற்கு மொத்தமே ரூ 3,000 தான் செலவாகும்.அ.தி.மு.க,தி.மு.க உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் இதற்காக பணம் வாங்குகிறார்" என விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது புகார் கூறுகின்றனர்.

நடிகர் விஜய் பெயரில் நடத்தப்படும் விலையில்லா விருந்தகத்தின் பெயரைச் சொல்லி, விஜய் மக்கள் இயக்கத்தின் தஞ்சாவூரை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் முறைகேடு செய்வதாகவும், அவருக்கு எதிரான மன நிலை கொண்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி இதனை விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலையில்லா விருந்தகத்தில் விஜய் சரவணன்
விலையில்லா விருந்தகத்தில் விஜய் சரவணன்

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட தலைவராக இருப்பவர் விஜய் சரவணன். தஞ்சை தற்காலிக பேருந்து நிலையம் அருகே இருக்கும் தலைமை அலுவலகத்தில் விஜய் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் தினமும் 100 பேருக்கு காலை உணவும், ராசா மிராசுதார் மருத்துவமனை பகுதியில் மதிய உணவும், விஜய் சரவணன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் நல்ல முறையில் நடத்தப்பட்டது ஏழை மக்கள் வயிறார பசியாறும் இடமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் மட்டும் வசூல் செய்து, சாப்பாடு போட வேண்டும் என தலைமை அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், `பல்வேறு கட்சி பிரமுகர்களிடம் விஜய் சரவணன் பணம் வசூல் செய்கிறார். விலையில்லா விருந்தகத்தின் பெயரையும், தளபதி விஜய் பெயரையும் பயன்படுத்தி, தன் சொந்த பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்கிறார்' என பரவலாக பேசப்படுகிறது.

உணவு கொடுக்கும் சரவணன்
உணவு கொடுக்கும் சரவணன்

இது குறித்து விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், ``தளபதி விஜய் பெயரில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் விலையில்லா விருந்தகம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அம்மா உணவகத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் தினமும் சுமார் 100 பேருக்கு மேல் இலவசமாக உனவு வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் விஜய் சரவணன் தன் ஏற்பாட்டில் இந்த திட்டத்தினை தொடங்கி எந்த தொய்வும் இல்லாமல் நடத்தினார். சாப்பிடுபவர்கள் வயிறு மட்டுமல்ல மனசும் நிறைந்து சென்றனர். கூடுதலாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை பகுதியில் மதிய வேளையிலும் உணவு கொடுக்க தொடங்கினார். பல தடைகளைத் தாண்டி மிக சிறப்பாக விஜய் சரவணன் விலையில்லா விருந்தகத்தை செயல்படுத்தியது எங்களை போன்ற நிர்வாகிகளை பெருமை கொள்ள வைத்தது.

ஒரு பெரிய அரசியல் கட்சி செய்யாததை விஜய் மக்கள் இயக்கம் செய்கிறது என பொதுமக்கள் பலரும் எங்களைப் பாராட்டினர். ஆனால் சில மாதங்களாகவே விஜய் சரவணன் போக்கில் மாற்றம் தெரிகிறது. தளபதி பெயரை சொல்லி சம்பாதிக்கத் தொடங்கி விட்டார். காலை உணவுக்கு ரூ 2,500, மதிய உணவுக்கு ரூ 3,500 வசூல் செய்கிறார். மொத்தமே ரூ 3,000 தான் செலவாகும். மீதி பணத்தில் தன்னை வளப்படுத்திக் கொள்கிறார். அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் இதற்காக பணம் வாங்குகிறார்.

காலை உணவு
காலை உணவு

ராசா மிராசுதார் மருத்துவமனையில் சாப்பாடு கொடுக்கும் போது, சாப்பாட்டை பெற்றுக் கொள்பவர்களே தட்டு கொண்டு வர வேண்டும் . தட்டு இல்லாதவர்கள் ரூ 12 கொடுத்து பாக்கு மட்டை தட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் தட்டு விற்பனை செய்வதற்காகவே ஒருவரை ஏற்பாடு செய்திருக்கிறார். என்னப்பா சாப்பாடு இலவசம் தட்டு காசு கொடுத்து வாங்கணுமா என பலர் நொந்து கொண்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. பல சமயம் காலை நேரத்தில் அம்மா உணவகத்தில் இட்லி வாங்கி விலையில்லா விருந்தகத்தில் கொடுப்பார். வெளியே தெரிஞ்சா என்ன நடக்கும், தளபதி விஜய் பெயர் தான் கெட்டுப் போகும்.

விலையில்லா விருந்தகத்தில் பணிபுரியும் இயக்க நிர்வாகிகளை கடந்த மாதம் சென்னை வரவழைத்த விஜய் அவர்கள் பாராட்டியதுடன், பேர் கெட்டுடாம செய்யுங்கன்னு தட்டிக் கொடுத்து வாழ்த்தினார். இதற்காக விஜய் சரவணன் தான் அழைத்து சென்றவர்களிடம் விஜயை பார்க்க வைத்தற்காக தலா ரூ 2,000 வாங்கியிருக்கிறார். மே 1-ம் தேதி அன்னைக்கு 15 ஆட்டோ டிரைவர்களுக்கு காக்கி சட்டை, பேண்ட் கொடுத்தோம். `என்னோட அனுமதியில்லாம எப்படி உதவி செஞ்சீங்க'ன்னு கேட்டு சத்தம் போட்டார். நல்லதை அவரும் செய்ய மாட்டார் மற்றவர்களும் செய்யக் கூடாது. இதுதான் அவருடைய பாலிசியாக இருக்கிறது. இனிமேல் அவர் செய்யுற தப்புக்கு துணை போக முடியாது. ஏன் இப்படி செய்யறீங்கன்னு கேட்டால், `உங்களுக்கு பொழப்பு இருக்கு நான் தளபதிய வச்சுதான் பொழைக்குறே'ன்னு வெளிப்படையாகவே சொல்றார்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

ஒரு தப்புன்னா பரவாயில்லை எல்லாமே தப்பா இருக்கு. இந்த விவகாரத்த, அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் புகாராக தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. தன் அப்பா சந்திரசேகரன் மீதே விஜய் நடவடிக்கை எடுத்தார். ஆனால் விலையில்லா விருந்தகத்தின் பெயரில், இப்படி நடப்பது தெரிந்தால் சும்மா இருக்க மாட்டார். ஆனால் இவை அவரின் கவனத்திற்கு செல்வதே இல்லை. தளபதிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதற்குள் விஜய் சரவணனுக்கு ஒரு கடிவாளம் போட வேண்டும். நாங்களும் தஞ்சை சட்டமன்ற தொகுதி மற்றும் மாநகரத்தில் உள்ள நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி பின்னர் என்ன செய்வதென்று முடிவெடுக்க இருக்கிறோம்" என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக விஜய் சரவணனிடம் பேசினோம்.``வெளி பங்களிப்பாளர்களிடம் பணம் வாங்கக் கூடாது என தலைமை சொல்லவில்லை. பங்களிப்பாளர்கள் விருப்பத்திற்கு ஏற்பவே பணம் வாங்கப்படுகிறது. யாரிடமும் கூடுதலாக வாங்கவில்லை. மருத்துவமனை வளாகத்தில் பிளாஸ்டிக் தட்டில் சாப்பாடு கொடுத்தால் சுற்று சுழல் சீர்கேடு ஏற்படும் என நிர்வாகம் சொன்னதால், பாக்கு மட்டை தட்டு விற்பனை செய்யப்படுகிறது.

14 சூழலியல் கோரிக்கைகள்: விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட 67 பேர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்!

பாத்திரம் கொண்டு வராதவர்களே தட்டு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனை நான் விற்கவில்லை. மருத்துவமனைக்கு அருகே உள்ள உணவகங்களின் வியாபாரம் நாங்கள் உணவு கொடுப்பதால் பாதிப்படைகிறது. அவர்கள் எங்கள் இயக்கத்தில் சிலருடன் சேர்ந்து, எனக்கு தனிப்பட்ட முறையில் பெயர் கிடைத்து விடும் என்பதை பொறுத்த கொள்ள முடியாமல் இது போன்ற அவதூருகளை கிளப்புகின்றனர்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு