Published:Updated:

‘என்னைச் `சோர்' எனக் கூறுவதை நிறுத்துங்கள்’ - கிறிஸ் கெயிலைச் சந்தித்த விஜய் மல்லய்யா!

சமூகவலைதளத்தில் வைரலாகும் கிறிஸ் கெயில், விஜய் மல்லய்யா புகைப்படம்

விஜய் மல்லய்யா - கிறிஸ் கெயில்
விஜய் மல்லய்யா - கிறிஸ் கெயில் ( Twitter/@henrygayle )

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லய்யா பொதுத் துறை வங்கியில் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கிவிட்டு அதைத் திரும்பச் செலுத்த முடியாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார். இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கும் அவரை இந்தியா கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இருந்தும் அவர் தொடர்பான வழக்கு லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அவரை நாடு கடுத்தும் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

லண்டனில் தங்கியுள்ள அவர், டென்னிஸ், குதிரைப் பந்தயம், பார்முலா ரேஸ் பார்க்கச் செல்வது என எப்போதுமே தன்னை பிஸியாகவே வைத்துக்கொள்கிறார். அப்படிச் செல்லும்போது ஊடகங்களின் கண்ணில் மாட்டி சமூகவலைதளங்களில் வறுபடுவதிலும் இருந்து தப்புவதில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் மீண்டும் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்கியூட் என்ற கார் ரேஸ் மைதானத்துக்குச் சென்ற விஜய் மல்லய்யா அங்கு எதிர்பாராதவிதமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலைச் சந்தித்துள்ளார். விஜய் மல்லய்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு அதனுடன், “பிக் பாஸுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது’ என்று பதிவிட்டிருந்தார்.

கெயில் புகைப்படம் நெட்டிசன்கள் கண்ணில் பட்டத்தைத் தொடர்ந்து பலரும் அந்தப் புகைப்படத்தை ஷேர் செய்தும் கருத்து பதிவிட்டும் வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ் கெயில் உடனான சந்திப்பு குறித்துப் பதிவிட்டுள்ள விஜய் மல்லய்யா, “யுனிவர்ஸ் பாஸ் மற்றும் என் நண்பன் கிறிஸ் கெயிலைச் சந்தித்தது மிகவும் சிறப்பாக இருந்தது. கடந்த ஒருவருடமாக நான் வங்கிகளுக்கு முழு பணத்தையும் அளிப்பதாகக் கூறுகிறேன்.

என்னைச் சோர் (திருடன்) என அழைக்கும் அனைவரும், நான் அளிக்கும் பணத்தை ஏன் வாங்க மறுக்கிறீர்கள் என உங்கள் வங்கிகளிடம் கேளுங்கள். பின்னர் தெரியும் யார் சோர் என்பது.

கிறிஸ் கெயிலை நான் சந்தித்த புகைப்படத்தைப் பார்க்கும் அனைவரும் அது தொடர்பாகக் கருத்து பதிவிட்டு வருகிறீர்கள். முதலில் அதை நிறுத்திவிட்டு நான் சோர் ஆக்கப்பட்டதன் உண்மையை முதலில் அறிந்துகொள்ளுங்கள். நான் வாங்கிய பணத்தை 100% தரத் தயாராகவுள்ளேன். ஆனால், உங்கள் வங்கிகள் அதை வாங்க மறுக்கின்றன அவர்களிடம் அது ஏன் எனக் கேளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.