Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாளர்களைச் சந்திக்கும் விஜய்! - பாராட்டுவிழா உற்சாகத்தில் இயக்கத்தினர்!

தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு நடிகர் விஜய் பாராட்டுவிழா நடத்த முடிவு செய்திருக்கிறார். சென்னை பனையூரில் அமைந்துள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலக இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர். விஜய்யின் புகைப்படம், கொடியைப் பயன்படுத்தித் தேர்தலைச் சந்தித்த நிலையில் 115 வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களைப் பிடித்தனர். இந்த நிலையில் வெற்றிபெற்றவர்களையும், அதற்காக உழைத்த நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும்விதமாக பாராட்டுவிழாக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாட்டை விஜய் தரப்பு சத்தமில்லாமல் செய்துவருவதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பந்தல் சிவாவுடன் புஸ்ஸி ஆனந்த்
பந்தல் சிவாவுடன் புஸ்ஸி ஆனந்த்

தமிழகத்தில் இந்த மாதம் ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக., அதிமுக., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டனர். பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றிய நிலையில், வார்டு உறுப்பினர் பதவியில் 115 இடங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வெற்றிபெற்றது பலரின் கவனத்தையும் பெற்றதுடன், அரசியலில் பேசுபொருளாகவும் மாறியது.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இதைத் தற்போது கொண்டாடிவருகின்றனர். `2026-ல் எங்க பவரை காட்டுவோம்’ என இப்போதே பேசத் தொடங்கியதுடன், தலைமைச் செயலகத்தில் விஜய் இருப்பது போன்ற போட்டோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நகரத் தலைவரான ஆதி ராஜாராம் வெற்றியைக் கொண்டாடும்விதமாகப் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதுடன், விஜய்யின் படை 50 ஆண்டு கடந்த பெரும் கட்சியான அதிமுக-வைப் பல இடங்களில் பின்னுக்குத் தள்ளிவிட்டதாக கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் பிரசாரத்தில் புஸ்ஸி. ஆனந்த்
தேர்தல் பிரசாரத்தில் புஸ்ஸி. ஆனந்த்

இந்த நிலையில் வெற்றிபெற்றவர்களுக்கும், வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் நடிகர் விஜய் பாராட்டுவிழா நடத்த முடிவு செய்திருக்கிறாராம். சென்னை பனையூரில் அமைந்துள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலக இடத்தில் பந்தல் பணிகள் நடைபெற்றுவருகின்றனவாம். இதற்கான ஏற்பாட்டை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் செய்துவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசியல் கட்சி மாநாடுகளுக்கு பந்தல் அமைத்துக் கொடுப்பதில் பெயர்பெற்ற தஞ்சாவூரைச் சேர்ந்த வடுவூர் பந்தல் சிவா பார்வையில் பந்தல் பணிகள் நடைபெற்றுள்ளனவாம். நடிகர் விஜய் சொன்னதாக புஸ்ஸி ஆனந்த், வடுவூர் சிவாவிடம் சில ஆலோசனைகளையும் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வெடி வெடித்துக் கொண்டாடும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்
வெடி வெடித்துக் கொண்டாடும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

இது குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தரப்பில் சிலரிடம் பேசினோம். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் தனது போட்டோவையும் கொடியையும் பயன்படுத்தச் சம்மதம் தெரிவித்தது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்றாலும், அது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பெரும் உற்சாகத்தை தந்தது. வார்டு மெம்பர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என அனைத்துப் பதவிகளுக்கும் போட்டியிட்டனர். `வாக்காளர்கள் நமக்குக் கடவுள் மாதிரி. அதை மனசுலவெச்சுக்கிட்டு ஓட்டுக் கேளுங்க. நாம செய்த பொதுக் காரியங்களையும், செய்யவிருப்பதையும் கூறி ஓட்டுக் கேளுங்க. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஓட்டுக்குப் பணம் கொடுத்திட வேண்டாம்’ என்பது உள்ளிட்ட சில கண்டிஷன்களையும் ஆலோசனைகளையும் கூறி தேர்தல் களத்தில் சுழலவைத்தார்.

அத்துடன் பெரிய கட்சிகளின் பாணியைப் பின்பற்றி வெளி மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளைப் பிரசாரப் பணிக்கு அமர்த்த அவர்கள் விறுவிறு பிரசாரத்தை மேற்கொண்டனர். விஜயின் முகமாக புஸ்ஸி ஆனந்தும் களத்துக்கு வந்து வாக்குக் கேட்டார். இதில் மொத்தம் 115 வார்டு மெம்பர்கள் வெற்றிபெற்று அனைத்துக் கட்சிகளின் கவனத்தையும் பெற்றோம். `விஜய் பிரசாரத்துக்கு வரலை. அவர் படத்தையும், கொடியையும் காட்டியே 115 இடங்களை பிடிச்சுட்டாங்களே...’ என்று பெரிய கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளே ஆச்சர்யம் விலகாமல் பேசத் தொடங்கினர். தற்போது சில இடங்களில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியையும் கைப்பற்றியிருக்கிறோம்.

விஜய்
விஜய்

ஒன்பது மாவட்ட தேர்தல் தந்த உற்சாகம் அடுத்து வரவிருக்கும் மாநகராட்சி, நகராட்சித் தேர்தலில் கவனம் செலுத்த இப்போதே அறிவுறுத்திவிட்டது தலைமை. அதற்கு முன்னதாக வெற்றிபெற்றவர்களையும், வெற்றிக்காக உழைத்தவர்களையும் அழைத்து பாராட்டுக் கூட்டம் நடத்த விஜய் முடிவு செய்திருக்கிறார். இதற்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் வெற்றிபெற்ற நிர்வாகிகளை வெற்றிச் சான்றிதழுடன் வரவைத்த ஸ்டாலின், அந்தந்த மாவட்டங்களுக்கே சென்று பாராட்டி அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பாணியைத் தற்போது கையில் எடுத்திருக்கும் விஜய், வெற்றி பெற்றவர்களைச் சந்தித்து பாராட்டுகிறார். இதற்காக சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் பந்தல் வடுவூர் சிவா பந்தல் அமைத்திருக்கிறாராம்.

பந்தல் சிவா,புஸ்ஸி ஆனந்த்
பந்தல் சிவா,புஸ்ஸி ஆனந்த்

இன்று முதல் இந்தக் கூட்டம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று வெற்றிபெற்றவர்களைச் சந்தித்துப் பேசுகிறாராம் விஜய். பின்னர் மற்ற நாள்களில், தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசவிருக்கிறார். பாராட்டுவிழா மேடை நிச்சயம் விஜய் நேரடி அரசியலில் தன் பயணத்தைத் தொடங்குவதற்கன மேடையாக இருக்கும். நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், வரவிருக்கும் தேர்தலுக்குத் தயார்ப்படுத்துக்குவதற்குகான கூட்டமாகவே பாராட்டுவிழா நடக்கவிருப்பதாகத் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு