Published:Updated:

விலகும் விஜய் சேதுபதி(?) முதல் வைகுண்டராஜனுக்கு செக் வரை... கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

மழையில் நனைந்தபடி வந்திருந்த கழுகார், சிறு டவலில் தலையைத் துடைத்துக்கொண்டே ``செய்திகளை மெயிலில் அனுப்பியிருக்கிறேன்’’ என்றபடி லேப்டாப்பில் மூழ்கத் தொடங்கினார்.

`800’-லிருந்து விலகும் விஜய் சேதுபதி?!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான `800’-ல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று திருமாவளவன், சீமான், பாடலாசிரியர் தாமரை எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதேநேரம், `இப்படி எதிர்ப்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது’ என்றும், `முரளிதரன் மலையகத் தமிழர் என்பதாலேயே எதிர்க்கிறார்கள்’ என்றெல்லாம் விஜய் சேதுபதிக்கு ஆதரவான குரல்களும் கலந்துகட்டி ஒலிக்கின்றன.

விஜய் சேதுபதி - முத்தையா முரளிதரன் பயோபிக்
விஜய் சேதுபதி - முத்தையா முரளிதரன் பயோபிக்

இதற்கிடையே, `என்னைத் தமிழனத்துக்கு எதிரானவன்போல சித்திரிப்பது வேதனையளிக்கிறது’ என்று முரளிதரனும் விளக்கமளித்திருக்கிறார். ஆனால், இது தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை விஜய் சேதுபதி. இந்தநிலையில்தான், ` `800’ படத்தில் நடிப்பதில்லை என்ற மனநிலைக்கு விஜய் சேதுபதி வந்துவிட்டார்; படத்திலிருந்து விலகும் முடிவை அவர் எந்நேரமும் அறிவிக்கக்கூடும்’ என்கிறார்கள் விஜய் சேதுபதிக்கு நெருக்கமானவர்கள்.

ஓவர்... ஓவர்... பாலே வீசாம ஓவர் முடிஞ்சிடுமோ?

மாலத்தீவு முதலீடு...
மோப்பம் பிடித்த வாரிசு! அட்வைஸ் செய்த தந்தை!

சமீபத்தில் தமிழக அரசியல் பிரபலம் ஒருவரின் வாரிசு, தன் நண்பர்களுடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகர்களைச் சந்தித்த அந்த வாரிசு, மிகப்பெரும் தொகையை மரபுசாரா எரிசக்தி துறையில் முதலீடு செய்வது குறித்து ஆலோசித்திருக்கிறார். இந்தியாவில் விரைவில் தொழில் தொடங்கவிருக்கும் ஒரு எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டதாம்.

மாலத்தீவு
மாலத்தீவு

ஓரிரு நாள்கள் முதலீட்டு விவகாரங்களை முடித்துவிட்டு ஊர் திரும்பியிருக்கிறார் வாரிசு. கட்சிக்குள்ளேயே வாரிசின் எதிர் முகாமிலிருக்கும் இன்னொரு வாரிசு ஒருவர், இதை மோப்பம் பிடித்து தன் தந்தையிடம் போட்டுக்கொடுக்க... ``இப்பதான் கண்ணு ஒண்ணு சேர்ந்திருக்கோம். வீண் பஞ்சாயத்தெல்லாம் வேணாம். அப்புறம் அவங்க நம்ம வெளிநாட்டுத் தொடர்பைப் பத்தி குடைய ஆரம்பிச்சா வம்பாப் போயிடும்’’ என்று அட்வைஸ் தரப்பட்டதாம்.

அதானே... பாம்பின் கால் பாம்புதானே அறியும்!

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்...
வைகுண்டராஜனுக்கு செக்!

தாது மணலை அரசே எடுத்து நடத்துவதன் மூலம் வரும் லாபம் குறித்தும், இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது குறித்தும் தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை நடந்துவருகிறது. `சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே திட்டத்தைச் செயல்படுத்திட வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகம் அறிவுறுத்தியிருக்கிறதாம்.

வைகுண்டராஜன்
வைகுண்டராஜன்

வைகுண்டராஜனின் இரும்புப் பிடியிலிருக்கும் தாது மணலைக் கைப்பற்றி, டாமின் மூலமாக டாஸ்மாக் நிறுவனத்துக்கு நிகரான வருமானத்தை ஈட்டுவதற்காக முதல்வர் தரப்பு தீவிரமாக ஆலோசிக்கிறதாம். ஆனால், இது பற்றிய உள்விவரங்களை அறிந்தவர்களோ... ``விரைவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், வைகுண்டராஜன் தரப்பினர் எதிர் முகாமுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக வைக்கப்படும் செக் இது. சில பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட்டால் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படும்’’ என்கிறார்கள்.

அனல் பறக்குது மணல் அரசியல்!

வாழ்த்திய திவாகரன்; அரண்ட அமைச்சர்... அப்செட் சூரி! - கழுகார் அப்டேட்ஸ்
நாலு கோடி வருமானம்!
யாருக்கெல்லாம் வெகுமானம்?

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது ஏகாட்டூர் ஏரி. பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இந்த ஏரியில் சவுடு மணல் எடுப்பதற்காக ஒப்பந்தம் எடுத்திருக்கும் ஆளும்கட்சியின் `சுகர்’ பிரமுகர் ஒருவர், நாளொன்றுக்கு 1,000 லோடு திருட்டு மணல் அள்ளுகிறாராம். ஒரு லோடு மணல் 40,000 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.

சவுடு மணல்
சவுடு மணல்

இந்தக் கணக்கின்படி பார்த்தால், ஒரு நாளைக்கு நான்கு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் அந்த `சுகர்’ பிரமுகர். பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், பாதுகாப்புக்கு போடப்பட்டிருக்கும் சுமார் 40 ரெளடிகளுக்கு தினமும் செலவழிக்கும் ஒன்றரைக் கோடி ரூபாய் போக, மீதி இரண்டரைக் கோடி ரூபாயை பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறாராம். வயிற்றெரிச்சலில் அவரது கட்சியைச் சேர்ந்த சிலரும், டெண்டர் எடுக்க முடியாத சிலரும் துறையின் அமைச்சரான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெட்டிஷனுக்கு மேல் பெட்டிஷன் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியும் நோ ஆக்‌ஷன். விசாரித்தால், முதல் கவனிப்பே `முதல்’ இடத்துக்குத்தான் என்கிறது சுகர் தரப்பு.

முதல் வணக்கம் அந்த முருகனுக்கே!

ரயிலுக்குத் தடா
போனில் கடமுடா

தலைமைச் செயலகம், எழிலகம் என இரண்டு முக்கிய அரசு அலுவலகங்களுக்கும் சுமார் 1,000 பணியாளர்கள் காஞ்சிபுரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தினமும் பணிக்கு வருகிறார்கள். அந்தப் பணியாளர்களை அழைத்துவர மட்டும் 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளும், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட சில ஊர்களிலிருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், `காஞ்சிபுரத்துக்கு சிறப்பு ரயில் வேண்டாம்’ என்று அந்த மாவட்ட ஆட்சியர் பொன்னய்யா சொல்லிவிட்டாராம். கொரோனா பரவலைக் காரணமாகக் காட்டி, ஆட்சியர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்து பணிக்கு வரும் தலைமைச் செயலகப் பணியாளர்கள் சிலர் பேருந்திலும் கார்களிலும்தான் சென்னைக்கு தினமும் வந்து செல்ல வேண்டியிருக்கிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இதனால், கடுப்பான பணியாளர்கள் சிலர், தலைமைச் செயலகத்தின் ஒரு முக்கிய அதிகாரியிடம் இதை எடுத்துச் சொல்லி புலம்பியிருக்கிறார்கள். பழைய நட்பு தொடர்பில் இதுகுறித்து காஞ்சிபுரம் தரப்பில் அந்த அதிகாரி பேசப்போக... `உங்க வேலையை மட்டும் நீங்க பார்த்தா போதும்!’ என்று முகத்தில் அடித்தாற்போல பதில் வந்ததாம்.

யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே!

இந்தியில் கடிதம்...
அரண்டுபோன எடப்பாடி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியில் கடிதம் எழுதியிருந்தார். இதை நேராக எடப்பாடியின் டேபிளில் வைத்துவிட்டார்கள் அதிகாரிகள். தாயாருக்கான சடங்குகளை முடித்துவிட்டு வந்த எடப்பாடியின் கண்களில் அந்தக் கடிதம் பட்டிருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதுநாள்வரை மத்திய அரசின் முத்திரையுடன் ஆங்கிலத்தில்தான் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால், இந்தமுறை முழுக்க முழுக்க இந்தியில் கடிதம் வந்தவுடன்... என்னவோ ஏதோ என்று அரண்டுபோனாராம் எடப்பாடி. தேர்தல் நெருங்கும் நிலையிலும், கட்சியில் இப்போதுதான் பஞ்சாயத்துகள் தீர்ந்திருக்கும் நிலையிலும்... கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ என்று பதறிப்போன எடப்பாடி தரப்பு அவசர அவசரமாக இந்தி தெரிந்த அதிகாரிகளை அழைத்து வாசிக்கச் சொன்னதாம்.

கடிதம்
கடிதம்

தன் தாயாரின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்து அனுப்பப்பட்ட கடிதம் அது என்பது தெரிந்த பிறகுதான் நிம்மதி அடைந்ததாம் எடப்பாடி தரப்பு. இதற்கிடையே, இந்திக் கடித சர்ச்சை, கமலாலயம் வரை வாய்மொழிப் புகாராகச் சென்றிருக்கிறது. `அமித் ஷா தனிப்பட்ட முறையில் யாருக்குக் கடிதம் எழுதினாலும் இந்தியில் எழுதுவதுதான் வழக்கம்’ என்று பா.ஜ.க-வினர் சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்.

இனிமேலாவது இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா எடப்பாடி!

கல்வெட்டில் பெயரில்லை!
ஆட்சியருடன் மோதும் எம்.எல்.ஏ!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளனுக்கும், ஆளுங்கட்சியின் தென்காசி தொகுதி எம்.எல்.ஏ-வான செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். குறிப்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கான இடத்தைத் தேர்வு செய்வதில், இருவருக்குமான மோதல் உச்சத்தை அடைந்திருக்கிறதாம். சமீபத்தில் தென்காசி திரவியம் நகரில் கட்டப்பட்டிருக்கும் பள்ளி வகுப்பறை கட்டடத் திறப்புவிழாவில், கல்வெட்டில் எம்.எல்.ஏ-வின் பெயர் பொறிக்கப்படவில்லை.

வாழ்த்திய திவாகரன்; அரண்ட அமைச்சர்... அப்செட் சூரி! - கழுகார் அப்டேட்ஸ்

அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் கறுப்புக்கொடியுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எம்.எல்.ஏ-வின் பெயரைக் கல்வெட்டில் எழுதுவதாக உத்தரவாதம் கொடுத்த பிறகே போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. `கலெக்டர்தான் திட்டமிட்டே எம்.எல்.ஏ பெயரை பொறிக்காமல் விட்டுவிட்டார்’ என்று கொந்தளிக்கிறார்கள் எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள்.

அப்படியே இந்த மோதலையும் கல்வெட்டுல பொறிச்சுவெய்யுங்கப்பா... வரலாறு முக்கியமில்ல!

கை கால் உதறும் மாவட்டம்...
உதறித்தள்ள தி.மு.க திட்டம்

திருவள்ளூரில் தி.மு.க முக்கியப் பிரமுகரின் நடவடிக்கை மற்றும் உடல்நிலை பற்றித்தான் மாவட்டம் முழுவதும் உடன்பிறப்புகள் பரபரப்பாகப் பேசிக்கொள்கிறார்கள். நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே வரும் அவர், தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறாராம். காணொளிக் காட்சி வாயிலாக ஒரு சில கட்சிக்காரர்களிடம் பேசிவிட்டு அமைதியாகிவிடுகிறாராம். பத்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நிற்கக்கூட முடியாமல், கைகால் உதறும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறதாம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

அவரைவைத்து கட்சி நிகழ்ச்சிகள் எதுவும் நடத்த முடியவில்லை. இதனால், அவரை பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க கட்சித் தலைமை ஆலோசித்துவருகிறதாம். வரும் வாரத்திலிருந்து, மண்டலவாரியாகக் கட்சி நிர்வாகிகளின் கலந்தாலோசனைக் கூட்டங்கள் அறிவாலயத்தில் நடக்கவிருக்கின்றன. அதில், `திருவள்ளூர் மாவட்டத்திலும் மாற்றம் இருக்கலாம்’ என்கிறது தி.மு.க வட்டாரம்.

வர்ற எலெக்‌ஷன்ல சுவர் இருந்தாதான் சித்திரம்... அதாங்க கட்சி சின்னத்தை வரைய முடியும், உடம்பைப் பார்த்துக்கோங்க!

அடுத்த கட்டுரைக்கு